பெருந்தலைவர் காமராசர் 47ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை

167

0210-2022 | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 02-10-2022 அன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள, அவரின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்வு முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள், “’எழுத்தறிவித்தன் இறைவன்’ என்ற முதுமொழிக்கேற்ப எழுத்தறிவித்த இறைவன், ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற கூற்றுக்கிணங்க, பிச்சை எடுத்தாவது நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தாகவேண்டும் என்கிற ஒரு புனித நோக்கத்தோடு, பல்லாயிரக்கணக்கானப் பள்ளிக்கூடங்களைத் திறந்து, எங்களைப் போன்ற பிள்ளைகளையெல்லாம் படிக்க வைத்தப் பெருந்தகை. அதனாலேயே, கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் என்று, இன்று வரை இந்த மண்ணின் மக்களால் போற்றப்படுகிறார். விடுதலைப் போராட்ட வீரர், அரசியலில் தூய்மை, நேர்மை, உண்மை என்று வாழ்ந்த உத்தமர் நம்முடைய ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்கள். எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு வழித்தடமாக, வரலாற்றுச் சுவடாக, ஐயா அவர்களின் வாழ்க்கை வகுத்து வைத்திருக்கிற பாதை இருக்கிறது. அன்றைக்கு இருந்த தலைவர்கள் எல்லோருமே எளிமையும், நேர்மையும், உண்மையுமாக வாழ்வதற்குப் போட்டியிட்டார்கள். ஐயா சீவானந்தம் தொடங்கி, தாத்தா சிங்காரவேலர், கப்பலோட்டிய தாத்தன் வ.உ.சிதம்பரனார் என்று எண்ணற்ற தலைவர் பெருமக்கள் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாக நின்றார்கள். தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர், பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைவர்களெல்லாம் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் கிடைத்த அரும்பெரும் கொடை. அவருடைய நினைவைப் போற்றுகிற இந்நாளில், வழிவழியே வருகிற வீரத்தமிழ், மானத்தமிழ் பிள்ளைகள் நாங்கள் அவரைப் போன்று நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்கிறோம். பெருமிதத்தோடு அந்தப் பெரும் தலைவருக்கு, எங்களுடையப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் ஒழுங்கை காரணங்காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால் அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? – சீமான் கேள்வி
அடுத்த செய்தி‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சி. நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு