மனுஸ்மிரிதி அடிப்படையிலான புதிய கல்விக்கொள்கை நமது குழந்தைகளுக்கான மரண சாசனம்! – சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருச்சி நீதிமன்ற வளாகம்

87

19-09-2022 | திருச்சி நீதிமன்ற வளாகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

19-09-2022 அன்று, அரசியல் வழக்கு ஒன்றில் நீதிபதி முன் நேர் நிற்பது தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வழக்குகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “நாங்கள் பொதுச் சொத்தை சேதப்படுத்தி விட்டோம் என்பது தான் எங்கள் மீதான இந்த வழக்கு. எதைச் சேதம் செய்துவிட்டோம் என்றால், ‘பாரிகேட்’ என்று சொல்லக்கூடிய காவலர்கள் பயன்படுத்தும் வழியடைப்பை சற்று நகர்த்தி வைத்து விட்டோம். அதற்குத் தான் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தி விட்டோம் என்று எங்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று நேரில் வந்து நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு புதிய கல்விக் கொள்கை குறித்தான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், தமிழ் மட்டும் அல்லாது, எல்லா மாநில மொழிகளும், அனைத்து தேசிய இனங்களின் தாய் மொழியும் அழியும். அவர்களுடைய நோக்கமே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளை மட்டும் முன்னிலைப்படுத்தி திணிப்பது தான். ஆங்கிலம் கூட அதில் அடங்காது. இந்தப் புதிய கல்விக் கொள்கையில் 5ஆம் வகுப்பு வரை தான் தாய் மொழியைப் படிக்க முடியும். தமிழ் என்பது ஒரு பெருங்கடல். அதில் முதுகலை படிப்பு படித்து, ஆய்வு செய்கிறவர்களே சில நேரங்களில் சொற்களுக்குப் பொருள் தெரியாமல் பொழிப்புரையைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தத் தமிழ் மொழியை, வெறும் 5ஆம் வகுப்பு வரைப் படித்தால் போதுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். ‘மனுஸ்மிரிதி அடிப்படையிலான புதிய கல்விக் கொள்கை என்பது நம் குழந்தைகளுக்கான மரண சாசனம்’ என்று நான் சொல்லவில்லை, கல்வியியல் பேரறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும் அவர், “18 வயதை நெருங்கும், 12ஆம் வகுப்பு வரை படித்த எங்கள் பிள்ளைகளே ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், புதிய கல்விக் கொள்கை 3ஆம் வகுப்பில், 5 ஆம் வகுப்பில், 8ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத சொல்கிறது. இது உயர்கல்விக்கு வழிவகுக்கும் என்கிறார்கள். எங்கள் பிள்ளை 3ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோற்றுப்போனால் சக மாணவனை, நண்பனை, இந்த சமூகத்தை எப்படி  எதிர்கொள்வார்கள்? கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியா எட்டு வயதில் தான் மாணவர்களை பள்ளியில் சேர்க்கிறது. நீங்கள் அந்த வயதில் பொதுத்தேர்வு எழுத சொல்கிறீர்கள். மருத்துவராக, நீதிபதியாக, காவல்துறையினராக என எந்தப் பணி செய்ய வேண்டுமானாலும் தேர்வு எழுதுகிறோம். ஆனால், நாட்டை ஆளுகிற பிரதமர், முதல்வர், அமைச்சர் பெருமக்கள் என யாரும் எந்தத் தேர்வும் எழுதுவதில்லை? சமூகம், அறிவியல், இலக்கியம், வேளாண்மை, பொருளாதாரம், வரலாறு என எல்லாவற்றையும் இணைத்து ஒரு பாடத்திட்டம் உருவாக்கி, அதில் தேர்வெழுதி வென்றவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள். ஒருவேளை எல்லோருமே தேர்வாகிவிட்டால், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள். இல்லையெனில், அவர்கள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டும் இருக்கட்டும். ஆனால் அமைச்சர் ஆகக் கூடாது. அப்படிச் செய்தால், அறிவான தலைவர்கள் தானாக அதிகாரத்திற்கு வருவார்கள்” என்று தெரிவித்தார்.

‘நீட்’ தேர்வு தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “சட்டீஸ்கர் மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை 35 லட்சத்திற்கு விற்கிறார்கள். மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சக மாணவர்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு எழுதுகிறார்கள். கண்காணிப்பு ஆசிரியர் கதவின் அருகில் நின்றுக்கொண்டு, யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார். முதலில் இந்த ‘நீட்’ தேர்வு எதற்கு? தகுதியான மருத்துவரை உருவாக்க என்றால், அப்போது இதற்கு முன் இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவரே உருவாகவில்லையா? ஐயா மோடி அவர்களுக்கு இப்போது உடம்பு சரியில்லாமல் போனால், எந்த மருத்துவரிடம் வைத்தியம் செய்வார்? ஏற்கனவே, ‘நீட்’ போன்றத் தேர்வுகளை எழுதாமல் மருத்துவரானவரிடத்தில் தானே? அப்போது அவர் தரமான மருத்துவர் இல்லையா? இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள ‘ப்ரோ மெட்ரிக்’ என்கிற ஒரு தனியார் நிறுவனத்திற்கு என்ன அவசியம் உண்டாயிற்று? அவர்களுக்கு என்ன நேர்த்திக்கடனா? இந்த ‘நீட்’ தேர்வை நடத்துவதற்கு, அவர்களுக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு ஊரே சொந்தம் என்ற அறிவிப்பு தொடர்பான நிருபரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “நாடே திமுகவின் நிலமாக மாறிவிட்டது. இதில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் அறிவிப்பை மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள். ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் மொத்த நாட்டையும் வாங்கிவிட்டது. இனிமேல் எங்களைப்போன்றப் பிள்ளைகள் ஒருவேளை அதிகாரத்திற்கு வந்தாலும், ஐயா கருணாநிதி குடும்பத்தின் சொந்த சொத்தில் தான் எங்கள் நிலமிருக்கும். ஒரு நிலத்தில் வில்லங்கம் ஏதும் உள்ளதா என்று இதற்கு முன்னால் எளிதில் பார்த்துவிட முடியும். ஆனால், இப்போது மக்கள் இந்த ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தைப் பற்றி தேடுகிறார்கள், பலரும் தெரிந்துக் கொள்கிறார்கள் என்றவுடன், இது போன்ற அறிவிப்புகள் வருகிறது. கட்டணத்தை உயர்த்தி, அதை இணையத்தில் திறக்கவே முடியாத அளவில் வைத்திருப்பது இவர்களுக்காகத்தான்” என்று கூறினார்.

ஆ.ராசா குறித்து எழுந்த கேள்விக்கு பதிலலித்த சீமான் “அண்ணன் ஆ.ராசா பேசியது அவராக பேசியதில்லை. ‘சூத்திரன்’ என்றால் தாசி மகன், வேசி மகன் என்று பொருள். மனு ஸ்மிருதியின் அடிப்படையில் ‘சூத்திரன்’ என்கிற பட்டத்தை எங்கள் மீது சுமத்தி வைத்திருக்கிறார்கள். மனு தருமத்தில் எங்களைப் பற்றி இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்கிறது என்று அதை எடுத்துக் கூறுகிறார். பன்னெடுங்காலமாக இந்த இழிவைச் சுமந்து வருகிற மகன், ஒரு ஆதங்கத்தில் அதை எடுத்து பேசியதை, ஏதோ அவரே புதிதாகப் பேசிவிட்டது போலப் பழி சுமத்துகிறார்கள்” என்று கூறினார்.

இந்திய அரசியல் சாசனத்தின் படி தான் இங்கு எல்லாம் நடக்கிறது. மனு ஸ்மிருதியின் அடிப்படையிலா நடக்கிறது? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “இங்கு எல்லாமே மனு ஸ்மிருதியின் அடிப்படையில் தான் நடக்கிறது. ‘புதிய கல்விக் கொள்கை’ என்பதும் மனு ஸ்மிருதியின் அடிப்படையில் தான் வகுக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்துமே இந்திய அரசியல் சாசனத்தின் படி தான் நடக்கிறது என்றால், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற கோஷம் இந்திய அரசியல் சாசனத்திலா உள்ளது? ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்பதெல்லாம் அரசியல் சாசனத்திலா இருக்கிறது? அதனால், அவ்வாறு கேள்வி எழுப்புவதே தவறு” என்று பதிலளித்தார்.