தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை

86

18-09-2022 | தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் 18-09-2022 அன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தினார்.

பின்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடியப் புரட்சியாளர் எங்களுடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள். தன்னைப்பற்றி அவர் எழுதிய ஒரு சிறு புத்தகத்தில், லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கெடுக்க சென்றபோது,  வெள்ளைக்கார ராணி தன்னை சரிசமமாக அமர்த்தி உணவு பரிமாறினார்கள் என்பதை நெகிழ்வுடன் பதிவு செய்திருக்கிறார். இது போன்ற நிகழ்வு எங்கள் மண்ணில் நடக்காது என்று அந்த ராணியிடம் தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.  நானூறு பேர் படித்த இடத்தில் தான் மட்டும் தான் ஆதித்தமிழ்க்குடி என்றும், விளையாட்டில் கூட தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறுகிறார். தனக்கு விளையாட ஆர்வம் உண்டு, ஆனால் திடலின் ஓரத்தில் நின்று மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பேன் என்று கண்ணீருடன் பதிவு செய்துள்ளார். அவர் கண்ணீரோடு சேர்ந்து, அவர் பேரப் பிள்ளைகள் நாங்களும் கரைகிறோம்.

எங்கள் தாத்தா எங்களுக்கு கற்பித்ததில் மிக முக்கியமான ஒன்று, “எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாக சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்பது தான். அதைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். இரண்டாவதாக, “இந்த ஆரிய வர்ணாசிரம சனாதன தர்ம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்று கோட்பாட்டை நீ உருவாக்கிகொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்பதும். அவரின் நினைவு நாளிற்கு வணக்கம் செலுத்த வந்தப் பிள்ளைகள் நாங்கள், அவர் கூறியதற்கேற்ப ஒரு மாற்றுப் பாதையை உருவாக்கிக்கொண்டு பயணிக்க வேண்டும் என்று உறுதியேற்று, அதன்படித்தான் நாங்கள் பயணம் செய்தும் வருகிறோம்.

இன்றைக்கு இந்திய ஒன்றிய அரசு, புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்று முயற்சிக்கிறது. அதற்கு, இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்த அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடையப் பெயரை வைக்க வேண்டும். இந்த நிலப்பரப்பைக் கடந்து உலக நாடுகளுக்குப் பயணிக்கும்போது, இந்தியாவிற்கே இரண்டு நபர்கள் தான் அடையாளம், ஒன்று அண்ணல் காந்தியடிகள் மற்றொன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான். இவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு, குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு மூவாயிரம் கோடியில் சிலை வைத்திருக்கிறார்கள். உலக அரங்கில் மதிப்படைய, இந்திய நாடு பெருமையடைய வேண்டுமென்றால், புதிதாகக் கட்டப்படுகிற பாராளுமன்ற கட்டிடத்திற்கு அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை மட்டுமல்ல, எங்களின் உரிமையும் கூட. ஏனென்றால், இது எங்கள் எல்லோரின் வரிப்பணத்தாலும் தான் கட்டப்படுகிறது. எங்களுடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு, அவருடைய நினைவு நாளில் அவர் பேரப் பிள்ளைகள் நாங்கள் பெருமிதத்தோடு எங்களின் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “பாஞ்சாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை என்பது ஏதோ ஒரு இடத்தில் வெளியே தெரிந்துவிட்டது. அதனால் இது  பேசுபொருளாகியுள்ளது. ஆனால், இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நாடெங்கும் பல இடத்தில் அனுதினமும் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்தக் கேள்வியை நீங்கள், ‘இது பெரியார் மண்’, ‘சமூக நீதி’ என்றெல்லாம் பெருமைப் பேசிக்கொண்டு இருப்பவர்களிடம் தான் கேட்க வேண்டும். சாதிய பாகுபாடு எனும் நஞ்சு நம் உடம்பில் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

“தொடர்ச்சியாக எனக்கு பயணத்திட்டம் இருக்கிறது. சிறையிலுள்ள சவுக்கு சங்கர் அவர்களை விரைவில் நேரில் சென்று சந்திப்பேன்” என்று கூறினார்.

“தமிழ்நாட்டில் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்துவதற்கும், ‘சாகா’ வகுப்புகள் நடத்துவதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக அவர்கள், ‘கலைஞரின் பேனா’ நினைவுச் சின்னத்தை கடலில் அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இங்கு, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்தால் தான் படிக்க முடியும் என்கிற வறுமை நிலை இருக்கிறது. அரசு பள்ளிகளில் மதிய உணவு அளித்தால் மட்டும் போதாது, பசியின் கொடுமையால் காலை உணவும் அளிக்கும் நிலையில், எம் மக்களின் வறுமை இருக்கிறது. இந்தச் சூழலில், கலைஞருக்கு 39 கோடியில் சமாதி கட்டுவது, 80 கோடியில் கடலுக்கு நடுவே ‘கலைஞரின் பேனா’ நினைவு சின்னம் அமைப்பது என்பதெல்லாம் அதிகாரத்திமிரின் உச்சம்” என்று கூறினார்.

“குழந்தைகளுக்கு காலை உணவளிக்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை அரசியல் இலாபங்களுக்காக, வாக்கு வேட்டைக்காக செய்வதை நான் வெறுக்கிறேன். ஐயா காமராசர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை உளமார செய்தார். குழந்தைக்கு உணவு ஊட்டுவதுப் போன்று படமெடுத்தப் பிறகு, சாப்பாட்டுடன் தட்டிலேயே கையைக் கழுவுகிறார், முதல்வர் அவர்கள். அதெல்லாம் தான் ‘திராவிட மாடல்’. உலகத்திலுள்ள நீர்வளம், நிலவளம் என எல்லா வளங்களையும் தாண்டி மிக முதன்மையான வளத்தில் ஒன்று, மானுட சமூகத்தின் உடல் நலன், அதற்குப் பிறகு அறிவு வளம் தான். அந்த அறிவு வளத்தை வளர்ப்பதற்கான கல்விக்கு என்ன முதலீடு செய்தாலும் நான் வரவேற்கிறேன். அந்த அடிப்படையில், காலை உணவு திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அந்த சாப்பாட்டை உங்கள் பேரப் பிள்ளைகளும் அமர்ந்து சாப்பிடுகிற தரத்தில் இருக்குமா? என்பது தான் என்னுடைய கேள்வி” என்றார்.

“நேற்று ஐயா பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் திராவிட இயக்கத்தினர் யாராவது, அண்ணன் ஆ.ராசா அவர்களுடைய கருத்தை ஆதரித்து பேசியுள்ளார்களா? அவர் பேசியது முதலில் அவருடைய கருத்தா? பல்லாயிரம் ஆண்டுகளாக எங்கள் மீது சுமத்தபட்ட பழி. சூத்திரன், தாசி மகன், வேசி மகன் என்கிற பட்டத்தைச் சுமத்தி வைத்திருக்கிறீர்கள் என்று பன்னெடுங்காலமாக இந்த இழிவைச் சுமந்து வருகிற மகன், ஒரு ஆதங்கத்தில் அதை எடுத்து அவர் பேசியதை, ஏதோ அவரே புதிதாகப் பேசிவிட்டது போலப் பழிக்கப்படுகிறார். இப்படித்தான் எங்கள் ஐயா வைரமுத்து அவர்களும் ஆண்டாள் குறித்து எழுதப்பட்டிருந்ததைப் பேசியதற்கு, அவரே ஆண்டாளைப் பற்றி தவறாக பேசியதுப்போல கட்டமைத்து பழி சுமத்தப்பட்டார். அண்ணன் ஆ.ராசாவை இன்று பழி சுமத்துபவர்கள், அன்று நாட்டின் முதல் குடிமகன், அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல், வெளியே மரத்தின் அடியின் யாகம் வளர்த்து வழிபாடு செய்துவிட்டு சென்றபோது இவர்கள் எங்கு சென்றார்கள். மனு தர்மத்தில் எழுதியிருப்பதைத் தான் அவர் பேசியிருக்கிறார். அண்ணன் ஆ.ராசாவிற்கு ஆதரவாக திமுக பேசாது. பெரியாரின் பிறந்தநாளிற்கு மலர்வணக்கம் செய்வதோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டது. ஆனால், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனாரின் பேரன்கள் நாங்கள் அண்ணன் ஆ.ராசாவை விட்டுவிட்டு போகமாட்டோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று ஆ.ராசாவை ஆதரித்துப் பேசினார்.

“மோடியே திராவிடர் தான் என்று ஹெச். ராஜா பேசுவதன் மூலம் திராவிடம் என்பது எவ்வளவு கேவலமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

முந்தைய செய்திமனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திமனுஸ்மிரிதி அடிப்படையிலான புதிய கல்விக்கொள்கை நமது குழந்தைகளுக்கான மரண சாசனம்! – சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருச்சி நீதிமன்ற வளாகம்