மூத்த பத்திரிகையாளரும், புகழ்பெற்ற செய்திவாசிப்பாளருமான சண்முகம் அவர்களது குரலோசை காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்! – சீமான் புகழாரம்

121

சகோதரர் சண்முகம் அவர்களது குரலோசை காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும். – சீமான் புகழாரம்

மூத்த பத்திரிகையாளரும், புகழ்பெற்ற செய்திவாசிப்பாளருமான அன்புச்சகோதரர் சண்முகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடகவுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

செய்தியாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித்தொகுப்பாளர் எனப் பன்முகத்திறமைகளைக் கொண்டு விளங்கிய அவர், இயக்குநராகத் திரைத்துறையிலும் வெகுவிரைவில் கால்பதிக்கவிருந்த வேளையில் நிகழ்ந்திருக்கிற அவரது திடீர் மறைவானது பெரும் வேதனையைத் தருகிறது. தனது தனித்துவமிக்கக் குரல்வளத்தாலும், ஒப்பற்ற மொழியாளுமையாலும், தமிழைத் துல்லியமாக உச்சரிக்கும் தனித்திறனாலும் மக்களின் மனங்கவர்ந்த சகோதரர் சண்முகம் அவர்களது இழப்பென்பது ஊடகத்துறைக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய சகோதரர் சண்முகம் அவர்களது குரலோசையானது காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.

சகோதரர் சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!