விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள ஆய்வு

94

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடத்தையும், வேளாண் விளைநிலங்களையும் காக்க போராடிவரும் அப்பகுதி கிராம மக்களை 26-08-2022 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அரசு கையகப்படுத்தவிருக்கும் விளைநிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் ஒன்றுதிரண்டு ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று அம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் முடிவை அரசு திரும்பப்பெறும் வரை தொடர்ச்சியாகப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான் அவர்கள் கூறியதாவது,”புதிய வானூர்தி நிலையத்திற்கு இப்போது என்ன தேவை ஏற்பட்டுள்ளது? என்பது தான் நாம் எழுப்பும் கேள்வி. ஏற்கனவே இருக்கும் வானூர்தி நிலையம் என்ன ஆனது? அதில் சென்று யாரும் பயணம் செய்ய விரும்பவில்லையா? இத்தனை ஆயிரம் ஏக்கரில் ஒரு புதிய வானூர்தி நிலையம் வேண்டுமென்று மக்கள் யாரேனும் போராடினார்களா? அல்லது கோரிக்கை மனு ஏதும் கொடுத்துள்ளார்களா? ஒன்றுமே இல்லை.

4800 ஏக்கர் பரப்பளவில், புதிய வானூர்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் பல கிராமங்கள், பலாயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. 40 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள், 2605 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதி, 955 ஏக்கர் நீர்நிலைகள், இதையெல்லாம் காலிசெய்துவிட்டு புதிய வானூர்தி நிலையம் அமைப்பதை வளர்ச்சி என்கிறார்கள். 2035 ஆம் ஆண்டில் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் அளவிற்கு வசதி வந்துவிடும் என்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் தொடங்கி 2028 ஆம் ஆண்டிற்குள் ஆறு ஆண்டுகளில் இதை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இல்லையெனில் 2035 ஆம் ஆண்டில் வாழும் மக்களின் தேவைக்கு நிறைவு செய்ய முடியாது என்கிறார்கள். இவ்வளவு தொலைநோக்கோடு சிந்திக்கும் பெருமக்கள், மக்களின் நீர்தேவை, உணவுத்தேவையை நிறைவேற்ற ஏதாவது திட்டம் தீட்டியுள்ளார்களா?

ஒவ்வொரு முறையும் சென்னை, வெள்ள சேதத்தை எதிர்கொள்கிறது. கழிவுநீர், மழைநீர் தேக்கமின்றி வழிந்தோடுவதற்கு ஏதாவது திட்டமிட்டுளார்களா? தலைநகரிலேயே இன்னும் பாதை சரியாக அமைக்காமல் இருக்கிறது. சென்னை வானூர்தி நிலையத்திலேயே நூறு முறைக்கு மேலாக கண்ணாடி இடிந்து விழுந்துள்ளது. அதையெல்லாம் சரி செய்யாமல் புதிதாக இவ்வளவு பெரிய வானூர்தி நிலையம் எதற்காக? ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் கட்டப்பட்டதை முன்னுதாரணம் காட்டி வளர்ச்சி என்கிறார்கள். அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் அடிதட்டு மக்கள் வளர்ச்சி அடைந்துவிட்டார்களா? ஒரு வானூர்தி நிலையத்தால், நாடு பெரிதாக வளர்ந்துவிடும் என்பது எப்படி ஏற்புடையது? வானூர்தியில் பறக்கும் ஒருவருக்கு பசிக்காதா? உணவு எங்கிருந்து கிடைக்கும்? விளைநிலங்களின் வளங்களே இந்த நாட்டில் மிகக்குறைவாக இருக்கிறது. சாலை அமைப்பது, வானூர்தி நிலையம் கட்டுவது என்று பலாயிரக்கணக்கில் விளைநிலங்களை பறிக்கின்றீர்கள். இது எவ்வளவு பெரிய பேராபத்து” என்று கூறினார்.

மேலும் அவர்,”ஒரு தேவை என்று வரும்போது 1500 ஏக்கரில் சென்னை வானூர்தி நிலையம் கட்ட இடம் கொடுத்தது இதே மக்கள் தானே. சேலத்திலிருந்து சென்னை வரை நான்கு வழிச்சாலை இருக்கின்றது. அதற்கு நிலம் கொடுத்ததும் மக்கள் தான். வசிக்கும் வீடுகளை, வணிக நிறுவனங்களை இடிக்க அனுமதித்ததும் இந்த மக்கள் தான்.  இப்போது இந்த வானூர்தி நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடுவதும் இதே மக்கள் தான். அவசியமென்றால் நாங்கள் ஒத்துழைப்போம். இது அவசியமற்றது என்று கருதுவதனால், இதை இப்போதைக்கு நிறுத்தி வைக்க வலியுறுத்துகிறோம். எட்டு வழிச்சாலையை எதிர்த்து திமுக எதிர்க்காட்சியாக இருக்கும்போது போராடியது. இன்று அதிகாரத்திற்கு வந்த பிறகு மாற்றி பேசுகிறது. மக்கள் ‘எட்டு வழிச்சாலை’ என்றால் எதிர்ப்பார்கள் என்பதால், ‘பயண தூரம் குறைப்பு சாலை’ என்று பெயர் மாற்றி செயல்படுத்துகிறீர்கள். அது மிகவும் தவறு.  அதனால், நான் இருக்கும்வரை இந்த வானூர்தி நிலையத்தை அமைக்க விடமாட்டேன்” என்று தெரிவித்தார்.

 

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்
அடுத்த செய்திமாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் மாதவன் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி