மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம்

88

மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 22-05-2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் நினைவுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு:

நிலத்தையும், நீரையும், காற்றையும் நஞ்சாக்கக் கூடிய நச்சு ஆலைகள் நம் மண்ணில் இருக்கக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தோடு, தூத்துக்குடியில் நிறுவப்பட்ட தாமிர ஆலையான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தானாகக் கிளர்ந்து எழுந்தது. குடிநீர் மஞ்சள் நிறமாகி, அதனால் சமைக்கிற உணவும் மஞ்சள் நிறமாக மாறிய பிறகுதான் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் தாங்களாக ஒருங்கிணைந்து வீதியில் வந்து போராடத்தொடங்கினார்கள். அந்தப் போராட்டம் பெரும் எழுச்சி வடிவமாக உருப்பெற்று, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காகப் பேரணியாகச் சென்றார்கள்.

அங்கு நியாயமாக நடந்திருக்க வேண்டியது, 5 பேரை மட்டுமாவது ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க அனுமதித்திருந்தால், பிரச்சினை அதோடு முடிந்து இருக்கும். அதுதான் சரியான அணுகுமுறை. ஆனால், அதைவிடுத்து அங்கு கலவரம் வரும் என்று கணித்தது யார்? அதுவரை இரண்டு மாதமாக நடந்த போராட்டத்தில், எந்த கலவரமோ, சிறு அசம்பாவிதமோ, சட்டம் ஒழுங்கு இடையூறோ இல்லை. ஆனால் எந்தத் தலைவரும் இல்லாது, எந்தக் கட்சியின் கொடியும் இல்லாது, மக்கள் தன்னெழுச்சியாக மனு கொடுக்க வந்த இடத்தில், இங்கே கலவரம் வரும் என்று முன்கூட்டியே கணித்தது யார்? ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய காவலர்களை அங்கே நிறுத்தியது யார்? ஒருவேளை அங்கே கலவரம் வந்தால் கூடத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கலாம், கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி கலைத்து விடலாம், அதிகபட்சமாகத் தடியடி நடத்திக்கூடக் கலைத்து இருக்கலாம். ஆனால் எடுத்தவுடனே துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார்? அதுவும், வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரித்திருக்கலாம், ஆள் இல்லாத பகுதியில் சுட்டிருக்கலாம். மக்கள் பயந்து ஓடி இருப்பார்கள். அல்லது குறி பார்த்து காலுக்குக் கீழே சுட்டிருக்கலாம் அதை விடுத்து மிகப்பெரிய வாகனத்தில் ஏறி நின்று, நேரடியாகத் தொண்டைக்குழிக்கும், நெஞ்சுக்குழியையும் நோக்கிச் சுட்டது ஏன்? அப்படி என்றால் இது திட்டமிட்ட ஒரு படுகொலை. இதற்கு யார் உத்தரவிட்டது. அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால் துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கே தெரியாது, செய்தியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்கிறார். அப்படி என்றால் சுட முடிவுசெய்து உத்தரவிட்டது யார்? இலண்டனில் இருக்கிற ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் உத்தரவிட்டாரா? தாமிர தட்டுப்பாடு பற்றிக் கவலைப்பட்டுப் பேசும் இவர்கள், தண்ணீர் தட்டுப்பாடு பற்றிப் பேசவில்லையே ஏன்? தண்ணீர் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது இறந்து விடுவோமே? தண்ணீர் விசை இயந்திரத்தை இயக்க தாமிரம் வேண்டும் என்கிறார்கள். எடுப்பதற்கு முதலில் பூமியில் தண்ணீர் இருக்கவேண்டுமே? இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறிமாறி ஆண்ட காலத்தில்தான் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு நிலம் எடுத்துக் கொடுத்தார்கள், திறக்க அனுமதித்தார்கள். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலத்தை எடுக்கும்போதுதான் பிரச்சனை வருகிறது. சுட்டுக் கொன்றுவிட்டு, அம்மா அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தார்கள். எங்களையெல்லாம் மணிக்கணக்கில் விசாரித்த அவர்கள், போராட்ட களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதாகக் கூறிய ஐயா ரஜினிகாந்த் அவர்களை இன்றுவரை ஏன் விசாரிக்கவில்லை? அந்த விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சுட உத்தரவிட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சுட்ட காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆனால், அன்று நாங்கள் உயிர்களை இழந்தது இழந்ததுதான், அந்த 15 ஈகியர் குடும்பமும் பாழானது, பாழானதுதான். இதில் தற்போது என்ன கொடுமை என்றால் அந்த இறந்துபோன பிள்ளைகளுக்கு அந்த இடத்தில் வைத்து வணக்கம் செலுத்தவதற்குகூட அனுமதி இல்லை. இது எப்படிப்பட்ட அரசு என்று பாருங்கள். ஆனால் நாங்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன 15 பேருக்கும் சரி, ஆந்திர காட்டில் செம்மரக்கட்டை வெட்ட வந்துவிட்டோம் என்று திருட்டுப் பட்டம் கட்டி எங்களைச் சுட்டுக்கொன்றதையும் சரி மறந்து கடந்து போக முடியாது. 850க்கும் மேற்பட்ட எங்கள் மீனவர்களைக் கடலுக்குள் வைத்து சிங்களவன் சுட்டதையும் எங்களால் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. இந்த நச்சு ஆலைக்கு எதிராகப் போராடினால் நாங்கள் சுட்டுக் கொல்லப்படுவோம் என்று தெரியாமல், எங்கள் பிள்ளைகள் செத்துப்போன இந்த நாளில் நாங்கள் மிகுந்த மனத்துயரத்தோடு நிற்கிறோம். தங்கள் உயிரைக் கொடுத்து அந்த ஆலையை மூடச் செய்திருக்கிற, 15 ஈகியர்களுக்கும் எங்களுடைய வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவர்கள் செய்த உயிர் ஈகத்தை வீணாக விடாமல், ஆலையை மீண்டும் திறக்க விடாமல் போராடித் தடுப்போம் என்கிற உறுதியை இந்த நாளில் ஏற்கிறோம். தொடர்ச்சியாக இது போன்ற நச்சுத் திட்டங்களைத் தமிழகத்தில் நிறுவி நிறுவி, வாழ்வதற்கு வழி இல்லாத நிலமாக எங்கள் நாட்டினை மாற்றிக் கொண்டிருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் அதற்கு எதிராகக் கடும் போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம் என்கிற உறுதியை இந்த நாளில் உயிரிழந்த 15 போராட்டக்காரர்களின் ஈகத்தின் மீது நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கு எங்களுடைய வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி