இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

512

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2021 அன்று காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில், மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயா நம்மாழ்வாரின் திருவுருவப்படத்திற்கு முன்பு நினைவுச்சுடரேற்றி, மலர் வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, பாசறை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியிருப்பதாவது,

இயற்கை வேளாண் பேரறிஞர் எங்களுடைய பெரிய தகப்பனார் நம்மாழ்வார் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று (30-12-2021). பச்சைப் புரட்சியை விஞ்ஞானம் என்று நம்பி இருந்தோம், அது வியாபாரம் என்று தெரிய நமக்குப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கற்பித்த பெருந்தகை. ‘நஞ்சில்லா உணவு, அதுவே நம் கனவு’ என்று எங்களைப் போன்ற பிள்ளைகள் நெஞ்சிலே விதைத்த வேளாண் பெருமகன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை பற்றி, இயற்கை உணவுகள் பற்றிப் பேசுகிறோமென்றால் அதற்கு முதற்காரணமாக இருந்தவர் எங்களுடைய பெரிய தகப்பனார் நம்மாழ்வார்தான். குறிப்பாக ஐயா நெல் ஜெயராமன் போன்ற பெருமக்கள் ஊர் ஊராகத் தேடிச்சென்று நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் விதைகளைச் சேமித்து வைத்துவிட்டுச் சென்றதற்கும், வெளிநாடுகளில் பல இலட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் வேலையிலிருந்த பிள்ளைகள், அதனை விட்டுவிட்டு வேளாண்மையை மீட்டெடுக்கத் தாயகம் நோக்கித் திரும்பியதற்கும், என் போன்ற பிள்ளைகள் இயற்கை வேளாண்மை பற்றி வீதி வீதியாகப் பேசி வருவதற்கும் காரணம் ஐயா நம்மாழ்வார் விதைத்த விதைதான்.

இன்று பிறக்கும் குழந்தைக்கு 25 ஆண்டுகள் கழித்து இந்தப் பூமியில் வாழ்வதற்கு இடம் இருக்காது, அல்லது வாழுகிற இடமாக இந்தப் பூமி இருக்காது என்று எச்சரிக்கை செய்தவர் ஐயா நம்மாழ்வார். அவர் எழுதிய புத்தகங்கள் அவ்வளவும் பொக்கிசங்கள். அவற்றை விதை நெல் என்றே கூற வேண்டும். அதனைத் தமிழ் இளம் தலைமுறையினர் வாங்கி, படித்து, அதன்படி நடக்க வேண்டும், என்பது என்னுடைய விருப்பம். அதுதான் அப்பா நம்மாழ்வாரின் விருப்பமும்.

மிகப்பெரிய பேரறிஞர். அப்படிப்பட்ட ஒரு பெருமகனை தமிழ்ச்சமூகம் இழந்துவிட்டது என்பது பெரும் இழப்புதான். அவருடன் பல போராட்டங்களை உடன் இருந்து நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எங்களுடைய பயிற்சி வகுப்புகளில் கட்சி பிள்ளைகளுக்கு ஐயா பாடம் எடுத்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பல ஆண்டுகள் ஐயா நம்மோடு வாழ்ந்திருப்பார் என்று நினைத்தேன். அவர் இல்லை என்பது எனக்குத் தீராத மன வலியைத்தருகிறது. இருப்பினும் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் பிள்ளைகள் நாங்கள் செய்து முடிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அதனால்தான் நாங்கள் வேளாண்மையை அரசுப் பணியாக மாற்றுவோம் என்று கூறுகிறோம். ஒற்றை வைக்கோல் புரட்சி நூல் மூலம் ஜப்பானைச் சேர்ந்த மாசானோ புகாக்கோவை தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஐயா நம்மாழ்வார்தான். மாசானோ புகாக்கோவை விடவும் தந்தை நம்மாழ்வார் மாபெரும் மேதை. அப்படிப்பட்ட இயற்கை வேளாண் பேரறிஞரின் நினைவு நாளில் அவரது நினைவைப் போற்றுவதில் உண்மையிலேயே பெருமை அடைகிறோம். அவர் வழியில் பயணித்து இரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை வேளாண்மைக்கு நம் தாய் நிலத்தை மாற்றுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம் அதுதான் எங்கள் அப்பாவுக்கு நாங்கள் செய்கிற உண்மையான நினைவு வணக்கமாக இருக்க முடியும்.

மோடியை எங்கள் விருந்தாளி என்று இன்றைக்கு திமுக கூறுகிறது. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கட்சிப் பொறுப்பை ஏற்கின்ற கூட்டத்தில் மோடி ஒரு பாசிஸ்ட் என்று பேசியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசுவார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொன்று பேசுவார்கள். இதுதான் திமுகவின் கடந்த கால வரலாறு. இன்று மோடிக்கு நாங்கள் எதிரி அல்ல, இந்துத்துவாவிற்குதான் நாங்கள் எதிரி என்று சொல்கிறார்கள். அதில் நாம் கவனிக்க வேண்டியது மோடிக்கும் இந்துத்துவாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்ல வருகிறார்களா? என்பதுதான். மோடி இந்துத்துவாவாதி இல்லை என்று கற்பிக்கின்ற போக்கை எப்படி ஏற்க முடியும்? ஆர். எஸ். எஸ். காரர்கள் வந்துதான் அந்தக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டுமா? கேரளா, மேற்கு வங்கத்தில் அப்படித்தான் திறந்து வைக்கிறார்களா? ஆர். எஸ். எஸ். காரர்களை விருந்தாளி என்று கூறிவிட்டு, பிறகு எங்களை ‘பிஜேபி பி டீம்’ என்று கூறுவது திமுகவின் சந்தர்ப்பவாதம். ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ள பாஜகவை அனுசரித்துப் போக வேண்டும் என்று திமுக நினைக்கிறது. வலுவான தலைமை இல்லை என்பதால் முந்தைய அதிமுக அரசு அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் பெரும்பான்மையோடு திமுக ஆட்சியில் இருக்கும்போது எதற்கு அனுசரித்துச் செல்ல வேண்டும்? அதனால்தான் அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி, திமுக ஆட்சி கொத்தடிமை ஆட்சி என்கிறோம். மோடி இந்துத்துவாவாதியா? இல்லையா? மோடிக்கும் இந்தத்துவாவிற்கும் தொடர்பு இருக்கா இல்லையா? அதைப்பற்றிப் பொது விவாதத்திற்கு யார் தயாராக இருக்கிறார்கள்? யாரும் பேசமாட்டார்கள். 90 விழுக்காடு ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களுக்காகப் பேசுகிறது. எங்களைப் போன்றவர்களைக் காட்ட மறுக்கிறது.

நாம் தமிழர் கட்சி மோடியின் வருகையை, மோடியின் கருத்தை, ஏழரை ஆண்டுகால மோடியின் ஆட்சி முறையைத் தொடர்ந்து எதிர்த்தது. இனியும் தொடர்ந்து எதிர்க்கும். அவருடைய ஜி. எஸ். டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களை எங்கள் அளவுக்கு வேறு யார் எதிர்த்துள்ளார்கள்? நாங்கள் எழுப்பிய கேள்விகள் போல் வேறு யாரேனும் எழுப்பியதுண்டா? காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி. ஆனால் பாஜகவை மனிதகுலத்தின் எதிரியாக நாங்கள் கருதுகிறோம். அந்தக் கோட்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாகரீகம் பற்றிப் பேசுவதற்குத் திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது ? முதலில் திமுகதான் நாகரிகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் என்று கூறக்கூடாது என்று சொல்லும் தம்பி ஆளூர் ஷாநவாஸ், கடந்த காலங்களில் தமிழ்நாடு முதல்வரே அப்படிப் பேசியுள்ளதற்கான ஆதாரங்கள் வலையொளியில் இருக்கிறதே? அதற்குத் என்ன பதில்கூற போகிறார்? பதவிக்கு வரும் முன்பு அப்பாவிகள், இப்பொழுது அவர்கள் குற்றவாளி ஆகி விட்டார்களா? அப்பா அஸ்லாம் பாஷா அவர்கள் இருபத்தி ஏழு ஆண்டுகள் விசாரணை கைதியாகத்தான் சிறையில் இருக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும். இன்றைக்கு உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வென்றுவிட்டதால் தம்பி ஆளூர் ஷாநவாஸ் அதற்கான விசுவாசத்தைக் காட்டுகிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் உறுதியாக நிற்கும் நிலையில், திருவொற்றியூரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிய கட்டிடம் இடிந்துவிட்டது. ஆட்சியாளர்கள் கமிஷனுக்காக, சரியான கலவை கலக்காமல் கட்டடத்தை உறுதியற்றதாகக் கட்டுகிறார்கள். நல்வாய்ப்பாகத் திருவொற்றியூரில் மக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்ததால், உயிரிழப்பு இல்லை. இல்லையென்றால் மேலும் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். அரசு மக்களுக்காகச் சேவை செய்யும்போது உண்மையும், நேர்மையுமாக இருக்க வேண்டும். பாலம் கட்டுவதாகட்டும், சாலை போடுவதாகட்டும், வீடுகள் கட்டித் தருவதாகட்டும் மிகவும் நேர்மையாகச் செய்ய வேண்டுமென்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

நகைக்கடன் தள்ளுபடியைப் பொறுத்தவரை, திமுகத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கும்போது பகுப்பாய்வு செய்து குறிப்பிட்ட பேருக்குத்தான் நகைக்கடன் தள்ளுபடி வழங்குவோம் என்று கூறவில்லையே? அப்போது பேசிய தம்பி உதயநிதி, நகையை அடகு வையுங்கள் நாங்கள் வந்தால் திருப்பித் தருவோம் என்று சொன்னார். அதை நம்பி பல பேர் நகைகளை அடமானம் வைத்தார்கள். பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது, ஆட்சிக்கு வந்தபிறகு அதைச் செய்யாமல் இருப்பது திமுகவின் வழக்கம். பொங்கல் விழாவிற்கு ஐயா எடப்பாடி பழனிசாமி 5,000 ரூபாய்க் கொடுக்கவேண்டும் என்று பேசிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது அவருடைய ஆட்சியில் கொடுப்பார்களா என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

பாஜக தலைவர்கள் பெட்ரோல் 1லி ரூ25 விலைக்குக் கொடுப்போம் என்று கூறுவது தேர்தலுக்கானது. நாடு முழுமைக்கும் ஆட்சியில் இருக்கும் பாஜக எல்லா மாநிலங்களிலும் அப்படிக் கொடுக்க வேண்டியதுதானே? வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டதை நாம் தமிழர் கட்சி கண்டித்துள்ளது, அப்போதே கண்டித்து அறிக்கையும் கொடுத்துள்ளது. சாதி வழிச் சமூகங்கள் தனித்து நின்று அதிகாரத்தைப் பிடிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை, மொத்த தமிழினமும் சேர்ந்து இன ஓர்மையுடன் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிகாரத்தை அடைவது சாத்தியம்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை ஆளுநர்தான் நியமிக்க முடியும் என்ற அதிகாரத்தைக் குறைப்பதற்கு, மகாராஷ்டிரா மாநில அரசு சட்ட தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறேன். ஐயா கருணாநிதி, ஐயா எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா இருக்கும் போதெல்லாம் ஆளுநர்கள் என்ன செய்தார்கள்? ஆளுநர் உரை, குடியரசு, சுதந்திர தினவிழாக்களில் கலந்துகொள்வது, கட்டடங்கள் திறப்பது என்றுதான் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகுதான் ஆளுநர்கள் நிர்வாகத்தில் தலையிட்டார்கள். குறிப்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆர். எஸ். எஸ். காரர்களை எல்லாம் துணைவேந்தர்களாக நியமித்தார். அந்த வகையில் உத்தவ் தாக்கரே அரசு ஆளுநரின் அதிகாரத்தைக் குறைத்ததை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அப்படி தமிழ்நாடு முதலமைச்சர் செய்வார்களா? இவர்கள் ஆளுநரைப் பார்த்து வந்த பிறகு, இல்லம் தேடிக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்துகிறார்கள், புதிய கல்விக்கொள்கையில் சிலவற்றை ஏற்போம் என்கிறார்கள். ஆளுநர் நீட் தேர்வு இரத்து விடயத்தில் எவ்வித முடிவையும் எடுக்க மாட்டார். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு நீட் தேர்வை ஆதரிக்கிறது, வரவேற்கிறது, நீட் தேர்வைச் செயல்படுத்துகிறது. அந்த பாஜக அரசு நியமித்த ஆளுநர்கள் அதற்கு எதிராக எப்படி முடிவெடுப்பார்கள்? தமிழக மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனவே அவர்கள் செய்யமாட்டார்கள்.

– இவ்வாறு சீமான் அவர்கள் கூறியுள்ளார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி5 சவரன்வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய கோவை கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்