தேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்! – பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021 நிகழ்வில் முழங்கிய சீமான்

435

இன்று டிசம்பர் 10, மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த தல் கல்சா அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும் ‘மக்கள் உரிமை ஒன்றுகூடல்2021 ’ நடைபெறவிருக்கின்றது. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம்திரிபுரா மக்கள் முன்னணிதல் கல்சா மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இந்நிகழ்வில் பங்கேற்றன. 

ஹர்பால் சிங் சீமாஹர்சரஞ்சித் சிங் தாமிகன்வர்பால் சிங்பரம்ஜித் சிங் மாண்ட் மற்றும் பரம்ஜித் சிங் தாண்டா, முனைவர் குமார் சஞ்சய் சிங், பேராசிரியர் ஜக்மோகன் சிங், செந்தமிழன் சீமான் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களுடன் சீமான் அவர்களும் கூட்டாக சேர்ந்து காரத்பூரில் உள்ள பொற்கோயில் மற்றும் தேரா பாபா நானக் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். சீக்கியத் தலைவர்கள் சீமான் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் ஆளுமைகளுக்கும் சிறப்பான வரவேற்பு அளித்து, பொற்கோயில் மற்றும் தேரா பாபா நானக் குறித்த வரலாற்றுச் சிறப்புகளையும் விளக்கி கூறினர்.

அதனைத்தொடந்து தர்பார் சாஹிப் எனுமிடத்தில் நடைபெற்ற ‘மக்கள் உரிமை ஒன்றுகூடல் 2021’ நிகழ்வு, இந்திய ஒன்றிய அரசின் அதிகாரக் குவியல், ஒற்றைமயமாக்கல் கொள்கை, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு, சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமியர், கிறித்துவர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உருவாக்கப்படும் தவறான கருத்துருவாக்கங்கள், தனிமனித உரிமைகள் பறிப்பு மற்றும் மறுக்கப்படும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், தேசிய இனங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் பங்கேற்ற பல்வேறு தேசிய இனங்களின் ஆளுமைகளும் கருத்துரையாற்றுகையில், மனித உரிமைகள், சட்ட உரிமைகள் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்வது, மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் ஒட்டுமொத்த மனித உரிமைகள் சீரழிந்து வரும் சூழ்நிலை ஆகியவற்றுடன் நாட்டில் அதிகரித்து வரும் கொடுங்கோன்மை மற்றும் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்ட குரலை எழுப்பினர்.

சிஏஏ எதிர்ப்பு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி போராடிய விவசாயிகளை கொடூரமான முறையில் கொலை, நாகா மக்களின் அரசியல் கோரிக்கைகள், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள், 370 சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை முதன்மையாக இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்டன.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு சீக்கியர்களின் புனித அடையாளமான பொற்கோயில் படம் பொறித்த நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறு தேசிய இனங்களின் ஆளுமைகளின் முன்னிலையில் சீமான் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றினார். அதன் காணொளி மற்றும் எழத்தாக்கத்தின் சுருக்கம் பின்வருமாறு,

மனித உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் நாள் இன்று!

‘சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவனுக்குக்கூட சுதந்திரம் தேவைப்படுகிறது. பறவைக்கு இறக்கை போல, வண்டிக்கு அச்சாணிபோல, மனித உடலுக்கு முதுகெலும்புபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் தேவை’ என்கிறார் ஹோசே மார்த்தி. பல்வேறு தேசிய இனங்களின் மக்களாகிய நாம் நம்முடைய மேலதிக உரிமைக்காகப் ஒன்றிணைந்து இங்கே கூடியிருக்கிறோம்.

அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மகன் நான். ஈழத்தில் 2008 -2009 ஆண்டுக் காலக்கட்டத்தில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் எம்மினச் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். பச்சிளங்குழந்தைகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். வீடுகள், பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டன. எல்லாவற்றையும் இழந்து நாங்கள் நிற்கதியாக நின்றுகொண்டிருந்தோம். ஆனாலும், தேசிய இனத்தின் மக்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைக்காக இன்று கூடியிருக்கிறோம். ஸ்டான் லூர்து சாமி அவர்களுக்கு உரிய மருத்துவத்தைக்கூடக் கொடுக்காமல் அவரை மரணிக்கச் செய்துவிட்டார்கள் என்பதை இங்கே பேசிய தலைவர் பெருமக்கள்கூடக் குறிப்பிட்டார்கள். அதைப்போலவே, இன்று என்னுடைய சகோதரன் யாசின் மாலிக் ஐந்தாண்டுகளாக திகார் சிறையிலே வாடிக்கொண்டிருக்கிறார்.

மேடைப்பதாகையில் என்னுடைய அன்புத்தம்பி பேரறிவாளன், அன்பு அக்கா நளினி ஆகியோரது படமும் இருக்கிறது. அவர்கள் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஏழு பேர் விடுதலைக்காக எண்ணற்ற போராட்டங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். தமிழக மீனவர்கள் 840 பேருக்கும் மேல் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்மையில்கூட ராஜ்கிரண் என்ற ஒரு தம்பியை சிங்கள இராணுவம் கொலை செய்துவிட்டது. ஆனால், பாஜகவின் ஆட்சியாளர்கள் ஒரு சிறுகண்டனம், சிறு வருத்தத்தைக்கூடப் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரியக் கொடுமை.

ஒன்றிணைந்துப் போராடினால், உறுதியாக நின்றுப்போராடினால் வெற்றிபெற முடியும் என்று நிரூபித்தவர்கள் நீங்கள். டெல்லியிலே நடந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியப் போராட்டத்திலே தொடர்ச்சியாகக் களத்திலே நின்று நீங்கள் வென்று காட்டியதுபோல, தேசிய இனங்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன்.

பாராளுமன்றத்தில் எந்த விவாதங்களும் நடத்தாமல் கொடும் சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கிறது இந்திய ஒன்றிய அரசு. அதுமட்டுமின்றி, என்னுடைய அலைபேசி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரின் அலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. ஆனால், அலைபேசி ஒட்டுக்கேட்பதில் எவ்விதத் தனிமனித சுதந்திர மீறலோ, தனிமனித உரிமைப்பாதிப்போ இல்லை என்று அரசு நீதிமன்றத்தில் வாதிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப் பலர் பங்கேற்றுள்ள இம்மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்த ‘தல் கல்சா’ அமைப்பிற்கும், என்னுடைய போற்றுதற்கும், வணக்கத்துக்கும் உரிய ஐயா ஜக்மோகன் சிங் அவர்களுக்கும், ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றுள்ள தேசிய இனங்களின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும்! தொடர்ந்து மனித உரிமைக்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம்!

இவ்வாறு சீமான் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபட்டுக்கோட்டை தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
அடுத்த செய்தி முசிறி சட்டமன்றத்தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்