திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தேசிய இனங்களின் எழுச்சி மாநாடு – நாம் தமிழர் கட்சி பங்கேற்பு

282

புது தில்லி ஜந்தர் மந்தரில் தேசிய இனங்களின் எழுச்சி மாநாட்டில் திரிபுராவில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்துவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சாரபாக ஐ. நா. தொடர்பாளர் ஜீவா டானிங் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இப்போராட்டத்தில் திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் பட்டால் கன்யா ஜமாத்தியா, வழக்கறிஞர் பரம்ஜித்சிங், சிக் சியாகத் தலைவரும் முன்னாள் சிக் மாணவர் சங்கத் தலைவருமான குர்மீத் சிங், எழுத்தாளரும் சமூகசெயற்பாட்டாளருமான மந்திர் சிங் , பந்த் சேவக் சதா தலைவர் குறிந்தர் ஆசாத், இந்திய வட்டமேசை தலைவர் உதயன் குமார் குகை, டெல்லி பல்கலைகழகப் பேராசிரியரும் அசாம் சக்தி யுவ பரிசித் கட்சியின் பொதுச் செயலாளருமான குமார் சஞ்சய் மற்றும் பல்வேறு தேசிய இன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தொலைத்தொடர்பு வழியாக இப்போராட்டத்தில் பங்கெடுத்து திரிபுரா தேசிய இன உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சி புது தில்லி சார்பில் செயலாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியராசன் மற்றும் ஜெகதீஸ்வரன், துணை ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரதிநிதி ஜீவா டானிங் மற்றும் பல்வேறு தேசிய இனத் தலைவர்கள் முன்வைத்த முக்கிய கருத்துக்களில் சில.

1. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்களும் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். திரிபுரா பூர்வகுடிகளின் நிலத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக குடியேறிய சட்ட விரோதக் குடியேறிகள் அகற்றப்பட்டு திரிபுரா நிலம் திரிபுரா மக்களுக்கே திரும்ப வழங்கப்படவேண்டும் என இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தேசிய இனங்களும் உறுதி ஏற்கிறோம்.

2. நாம் தமிழர் கட்சியின் கருத்தியலான, இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் அந்தந்த தேசிய இனங்களின் மண்ணை அந்தந்த தேசிய இனங்களே ஆள உறுதியேற்கிறோம். திரிபுரா மண்ணை திரிபுரா மக்களே ஆளும் கருத்தியலை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஏற்கிறது. இந்தியாவை யார் ஆள்வது எனஅனைத்து தேசிய இனங்களும் ஒருமித்து முடிவு செய்து ஆளலாம். திரிபுரா மண்ணை சட்ட விரோதமாக அடக்கி ஆளும் சட்ட விரோதக் குடியேறிகள் உடனடியாக வெளியேற வேண்டும்.

3. இந்தியாவை பெருமுதலாளிகளின் கூடாரமாக மாற்றி பூர்வக்குடிகளை அழிக்கும் பாரதிய ஜனதா அரசை வன்மையாக கண்டிக்கிறோம். பெருமுதலாளிகளுக்கு சாதகமாக கேரளாவில் அதானி துறைமுகம் கட்ட மேற்குதொடர்ச்சி மலையை அழித்து வருங்கால சந்ததிக்கு மழைவளம் இல்லாமல் செய்யும் பாரதிய ஜனதா அரசு, உடனடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அழிவு திட்டங்களைக் கைவிட்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான மேற்கு தொடர்ச்சிமலை நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயலாக்க படுத்த வேண்டும்.

4. ஒரே மொழி, ஒரே மதம் , ஒரே நாடு கொள்கைத் திணிப்பை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் மாறாக இதே நிலை நீடித்தால் இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் இணைந்து இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரும் பாடம் கற்பிப்போம்.

5. நாம் தமிழர் கட்சி இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி வெல்ல உறுதி ஏற்கிறது.

6. கன்னியாகுமரியில் கல் குவாரி வைத்துள்ள பெருமுதலாளிகளுக்கு துணை போகும் தமிழக முதல்வர் மு கஸ்டாலின் அவர்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

7. நீட் , குடியுரிமை சட்டத்திருத்தம், EIA,EXIT, விவசாய சட்டதிருத்தம் , மீன்பிடி சட்டத்திருத்தம் போன்ற தேசிய இன உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் மத்திய பாஜக அரசை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இந்திய தேசிய இனங்கள் ஒருபோதும் இப்பாசிச சட்டங்களை நடைமுறைப்படுத்த விடமாட்டோம்.

8. தமிழீழத்தில் தமிழ்த்தேசிய இன மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் தீர்வு தனித்தமிழ் ஈழம் மட்டுமே என பல்வேறு தேசிய இனங்கள் இப்போராட்டத்தில் உறுதி ஏற்கிறோம் .

9. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக தேசிய இனங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்ட இப்போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10. திரிபுரா இணைப்பு ஒப்பந்தம் ஒரு மோசடி ஒப்பந்தம் . இந்திய ஆதிக்க அரசு திரிபுரா இணைப்பு ஒப்பந்தத்தை ஒரு போதும் மதிக்கவில்லை. திரிபுராவின் கலை , இலக்கியம், பண்பாடு கலாச்சாரம் , பொருளாதாரம் இவைகளைப் பாதிக்கும் இந்திய ஏகாதிபத்திய பாஜக அரசை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழர்களின் உரிமை சிக்கல்களில் திரிபுரா மக்கள் முன்னணி தொடர்ந்து திரிபுரா மண்ணில் முன்னெடுக்கும். அதே போல திரிபுரா சிக்கல்களுக்காக பல்வேறு தேசிய இனங்கள் அவரவர் தாய் நிலத்தில் போராட வேண்டுகோள் விடுக்கிறது.

தொலைபேசி வழியாக வாழ்த்துரை வழங்கிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன் வைத்தார்.

“பெருமதிப்பிற்குரிய தலைவர் அம்மா பி.கே. (பாட்டல் கன்யா ஜமாத்தியா – Patal Kanya Jamatia) அவர்களே,

இந்திய ஏகாதிபத்தியத்தின் தலைநகரமான புதுதில்லி வீதிகளில் “திரிபுரா மக்கள் முன்னணி (Tripura Peoples Front – TPF) பதாகையின்கீழ் அணிதிரண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திரிபுரா மக்களே (Tripurasa Borok), உங்களுக்கு எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் (Thamizh National Movement) சார்பில் நெஞ்சு நிறைந்தவாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களும் திரிபிரசா போரோக் மக்களும் – இரு மாநிலத்தவரும் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்கும் இன ஒதுக்கலுக்கும் உள்ளானவர்கள்.

இந்தியாவோடு திரிபுரா 1949-இல் இணைந்தபோது, மண்ணின் மக்களின் எண்ணிக்கை 89%. ஆனால், அன்றிலிருந்து ஆரிய இந்திய ஆட்சியாளர்களின் துணையுடன் வெளியார் வெள்ளம் திரிபுராவில் புகுந்துவிட்டது. இப்போது திரிபுரி மக்கள் தொகை வெறும் 20%. இதனால்தான் வீரஞ்செறிந்த திரிபுரி மக்கள் தங்களின் தாயக உரிமைக்காகவும், தன்னுரிமைக்காகவும் போராடுகிறார்கள்.

ஒரு காலத்தில் மண்ணின் மக்கள் உரிமை மீட்பிற்காகப் போராடிய பிஜோய் ஹிரங்காவல் அவர்களுக்கும் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி அவர்களுக்கும் இடையே 1988-இல் ஏற்பட்டஉடன்படிக்கை, திரிபுராவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றி விடுவது என்று உறுதிஅளித்தது. ஆனால் அந்த உடன்படிக்கையைச் செயல்படுத்தாமல் இரண்டகம் செய்தார்கள் தில்லிஆட்சியாளர்கள்.

மீண்டும் 1993-இல் அகர்தலா உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை 1971 மார்ச்சு 24-க்குப் பின், திரிபுராவில் குடியேறியவர்களை வெளியேற்றிவிட உறுதி அளித்தது. அத்துடன் மட்டுமின்றி, உள் அனுமதிஅதிகாரத்தையும் (Inner Line Permit) திரிபுரா அரசுக்கு வழங்கிட உறுதி அளித்தது. இதன்மூலம் மேலும்வெளியார் திரிபுராவுக்குள் நுழைவதைத் தடுக்கலாம் என்று கூறியது. இந்திய அரசின் அதிகார மையம் இந்தஉடன்படிக்கைக்கும் இரண்டகம் செய்தது; இதைச் செயல்படுத்தவில்லை.

தமிழர்களாகிய நாங்கள் உங்களின் பட்டறிவிலிருந்து இந்திய அரசு குறித்துப் பாடம் கற்றுக் கொள்கிறோம்.

ஆனால், மகத்தான துவிப்பிரசா போரோக் மக்களை வீழ்த்த முடியாது. ஆற்றல்மிகு தலைவரான அம்மா பாட்டல்கன்யா ஜமாத்தியா அவர்களின் தலைமையில் திரிபுரா மக்கள் முன்னணி இயங்குகிறது. உங்களின் முழக்கம், “எங்கள் தாயகம்! எங்கள் உரிமை!”