இலங்கை பேரினவாத அரசின் மதத்தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

568

இசுலாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின் மதத்தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெற்று வரும் ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான அரசாட்சி தமிழர்கள் மீது இன அடிப்படையிலும், இசுலாமியர்கள் மீது மத அடிப்படையிலும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது கொடும் அரசப்பயங்கரவாதச்செயலின் வெளிப்பாடாகும். அந்நிலத்தில் வாழும் இசுலாமியர்கள் தங்கள் மத வழக்கப்படி ஆடை அணிவதற்கும், கல்வி கற்பதற்கும் தடை விதிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தனிநபர் சுதந்திரத்திற்கும் எதிரான மதத்தீவிரவாதமாகும். சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான இத்தகைய மத ஒடுக்குமுறைகளும், இன ஒதுக்கல் கொள்கைகளும் வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டதை எதிர்த்துத் தமிழர்கள் கடந்த 70 ஆண்டுகளாகத் தங்கள் தாயக விடுதலைக்காகப் போராடியபோது, சூழ்ச்சியின் மூலம் தமிழர்களையும், இசுலாமியர்களையும் பிரித்து அவர்களின் பிரிவினையில் குளிர்காய்ந்த இலங்கை அரசாங்கம், ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழித்தது. ஆயுதப்போராட்டம் நடந்தவரை இசுலாமியர்களை ஆதரித்து அரவணைப்பதுபோல நாடகமாடிய இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு தமிழர்கள் மீது இனவெறி அடக்குமுறைகளை நடத்தியதுபோல, இசுலாமியர்கள் மீதும் மதவெறி அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, அவர்கள் நிம்மதியாக வாழமுடியாத அளவிற்குப் பாதுகாப்பற்ற ஒரு அசாதாரணச் சூழ்நிலையை உருவாக்கி மக்களைப் பதற்ற நிலையிலேயே வைத்திருப்பது ஏற்கவே முடியாத கொடுஞ்செயலாகும்.

சைவ ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்து அங்குப் புத்த விகாரைகளை நிறுவியது போல இசுலாமியர்களின் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தி, சிங்களக் காடையர்களால் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இத்தோடு, மரணித்த இசுலாமியர்களின் உடல்களை மத வழக்கப்படி புதைக்கவிடாது தடுத்து, இராணுவத்தினரின் துணையுடன் அவ்வுடல்களை எரித்து அவமதிக்கிறது இலங்கை அரசு. தற்போது அதன் தொடர்ச்சியாக,

இசுலாமியக் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி கல்வி கற்கவும், இசுலாமியப் பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடை அணியவும் தடைவிதிக்க இலங்கையின் நாடாளுமன்றக் குழு அறிக்கை அளித்திருந்தது. நாடாளுமன்றக்குழு பரிந்துரையை ஏற்று இசுலாமியக் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி கல்வி கற்கவும், இசுலாமியப் பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடை அணியவும் தடைவிதிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இலங்கை ஒரு பெளத்த மதத்தீவிரவாத நாடு என்பதைப் பன்னாட்டுச்சமூகம் இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

இசுலாமியர்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளும் இலங்கை அரசின் ஒற்றைமயமாக்கல் கொள்கையும், இன ஒதுக்கல் கொள்கையும் அன்றி வேறில்லை. தமிழர்கள் மீது இன அடிப்படையிலான பாகுபாடுகள் காட்டப்பட்டு இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கண்டும் காணாதிருந்த அனைத்துலக நாடுகள் யாவும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு எனும் இலங்கையின் பௌத்தப் பேரினவாத கோரமுகத்தை இசுலாமியர்கள் மீது திணித்து மத ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இத்தருணத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடுத்தவரை இழிவுபடுத்தாது தங்களது கல்வி, பண்பாட்டு, வழிபாட்டு முறைமைகளைக் கடைப்பிடிக்க முழு உரிமை உண்டு. அதன்படி, இலங்கையில் வாழும் இசுலாமியர்கள் தங்கள் வழக்கப்படி ஆடை அணியவும், கல்வி கற்கவும் அவர்களுக்குத் தார்மீக உரிமை உண்டு. ஆகவே, தங்கள் மத உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகப் போராடும் இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகத் தமிழர்கள் துணைநிற்க வேண்டும் எனவும், மதத்தால் இசுலாமியராக இருந்தாலும் இனத்தால் தாங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் குடிகள் என்பதையுணர்ந்து இசுலாமியர்கள் தமிழர்களாய் திரண்டு இத்தகைய அநீதிகளுக்கு எதிராக இனமாய் ஓரணியில் நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறேன்.

மேலும், இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வாயிலாக, இசுலாமிய மக்களின் மத உரிமைகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் நாம்தமிழர் கட்சி சார்பாகச் சர்வதேசச் சமூகத்திற்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்