தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

79

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – நாம் தமிழர்  தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

====================================

இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட், எச்.சி.எல் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது இலாப நோக்கிற்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களை விருப்ப ஓய்வு எனும் பெயரிலும், இன்னபிற வழிகளிலும் திடீரென கட்டாய பணி நீக்கம் செய்யும் முடிவை நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு புறம் அதிக எண்ணிகையில் புதிய ஊழியர்களை, குறைவான அல்லது ஆரம்ப கட்ட ஊதியத்திற்கு வேலைக்கு எடுத்துக்கொண்டே மறுபுறம் அனுபவமிக்க, இடைநிலை ஊழியர்களை திடீரென அவ்வப்போது இவ்வாறு பணி நீக்கம் செய்து செலவைக் குறைப்பதன் மூலம் தங்களது இலாபத்தை குறிப்பிட்ட காலாண்டிற்கு அதிகரித்துக் காட்டுவதை இத்தகைய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

சமீப காலங்களில் அதிகரித்து வரும் நிறுவனங்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான, சுயநல நோக்கிற்கு யாரும் பலிகடா ஆகாமலிருக்க, இதுவரை இதனைக் கண்டும் காணாமலிருக்கும் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை தொழிலாளர் நலன், உரிமை சார்ந்த இந்த பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு தொழிலாளர்களின் உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்து பணிபுரியும் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுமாறும் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்வாகங்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான மிரட்டல்களுக்கு எந்த வகையிலும் அடிபணியாது சட்டப்படி தீர்வுகாண, தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டிட நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் அங்கமான தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையையோ அல்லது இதற்காக தொடர்ந்து போராடி வரும் சக தொழிற்சங்கங்களான FITE, UNITE, NDLF-IT போன்றவற்றின் நிர்வாகிகளையோ தொடர்பு கொள்ளவும்.

தொழிலாளர்கள் ஒன்றுபடும் வரை தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட முடியாது!

ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!

மின்னஞ்சல் : itew@naamtamilar.org

#Voice4LaborLaws @ITEWNTKAgainstLayoff

தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபோக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்
அடுத்த செய்திதமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிட முடியும் என்பது தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாகத் தமிழர் நிலத்தில் அழிக்கிற செயல்! – சீமான் கடும் கண்டனம்.