வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – கொட்டும் மழையில் சீமான் பரப்புரை

112

கட்சி செய்திகள்: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை  |நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நேற்று மாலை ஆம்பூர் புறவழிச்சாலை மற்றும் வேலூரில் அண்ணா கலை அரங்கம் அருகிலும் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டங்களில் பரப்புரையாற்றினார்.

ஆம்பூர்: https://www.youtube.com/watch?v=pAflGnxltmc

வேலூர்: https://www.youtube.com/watch?v=aXuk1_I7ZlY

வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது சீமான் பேசுகையில்,

தமிழர்கள் மீதும், தமிழர் நாட்டின் மீதும் எப்படித் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் திணிக்கப்படுகிறதோ அதேபோல தேர்தலும் திணிக்கப்படுகிறது. தற்போது இத்தொகுதியில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. எதற்காக இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது? இத்தொகுதியில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்பதால். குறிப்பாக, ஐயா துரைமுருகன் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம் எடுக்கப்பட்டது. அதனைத் தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் வந்தது. இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? என்ன காட்ட நினைக்கிறார்கள்? தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும்தான் வாக்குக்கு காசு கொடுக்கப்பட்டது என்று காட்ட நினைக்கிறதா தேர்தல் ஆணையம்? ஒரு விளையாட்டில் வீரனொருவன் தவறிழைத்துவிட்டால் அவ்வீரனை நீக்கிவிட்டு விளையாட்டை நடத்த வேண்டும். அதனைப் போல, யார் வாக்குக்கு காசு கொடுத்தார்களோ அவரைத்தான் போட்டியிலிருந்து விலக்க வேண்டும். அதுதான் உலகம் முழுவதும் இருக்கிற மரபு; நடைமுறை.  ஆனால், அதனைச் செய்யாது தேர்தலையே நிறுத்தி வைப்பது எங்கும் நடந்திராத நடைமுறை. தேர்தலை நிறுத்தி வைத்துவிட்டு தேவையானபோது நடத்திக் கொள்கிற போக்கைத்தான் இது காட்டுகிறது.

தேர்தலை நிறுத்தி தேர்தல் ஆணையம் சாதித்தது என்ன? பணம் வைத்திருந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எந்த நடவடிக்கையும் இல்லையென்றால், அப்போதே தேர்தலை நடத்தி முடித்திருக்கலாமே, அதனை ஏன் செய்யவில்லை? விக்கிரவாண்டிக்கும், நாங்குநேரிக்குமானத் தேர்தலையாவது சேர்த்து நடத்தியிருக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை? அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்தால் மறுபடியும் நாம் கொடியை ஏந்திக்கொண்டு பரப்புரையைத் தொடங்க வேண்டும். இத்தேர்தல் என்பது கொழுத்தப் பணக்காரர்களுக்கும், தினமும் உழைத்துக் களைக்கிற தினக்கூலிகளுக்குமானப் போராட்டமாக இருக்கிறது. இருபெரும் முதலாளிகள் இத்தேர்தலில் வேட்பாளராக நிற்கிறார்கள். ஒருவர் தான் வென்று வந்தால் திருமண மண்டபம் கட்டித் தருவேன் என்கிறார். இதனை எப்படித் தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது? இதுவொரு வகையான கையூட்டு இல்லையா?

குடியாத்தம் தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். காமராசர் முதல்வராகி விடுகிறார்; 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகி வெல்ல வேண்டும் என்பதால் போட்டியிடுகிறார். பரப்புரையில் இருக்கும்போது, ஒரு பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ‘ஆகட்டும்! பார்க்கலாம்’ எனக் காமராசர் கூறிவிட்டுச் சென்றுவிடுகிறார். ‘பாலம் கட்டித்தருகிறேன் என்று கூறினால் மக்கள் வாக்குச்செலுத்துவார்களே?’ எனக் காமராசரிடம் கேட்கிறார்கள் கட்சியினர். அதற்குப் பெருந்தலைவர் காமராசர், ‘ என்னிடம் அதிகாரம் இருக்கிறது. நான் கட்டித் தருகிறேன் எனக் கூறி வாக்குகளைப் பெற்றுவிடுவேன். ஆனால், எதிர்த்து நிற்கிற கோதண்டராமனிடம் அதிகாரம் இல்லையே, அவர் என்ன செய்வார்? பாலம் கட்டித் தருகிறேன் எனக் கூறி வாக்குகளைப் பெற்றால் அதுவும் ஒருவித இலஞ்சம்தானே?’ எனக் கேட்கிறார். அந்தத் தலைவர் வாழ்ந்த நிலத்தில்தான் இவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு பெரும் கூட்டணியை திமுக அமைத்தது. ஆனாலும், எங்களைக் காரணம் காட்டி, ‘நாம் தமிழர் கட்சிக்கு வாக்குச்செலுத்தினால் பாஜக வந்துவிடும்’ எனப் பொய்ப்பரப்புரை செய்து வாக்குகளைப் பெற்றது. இப்போது மோடி அதிகாரத்திற்கு வந்துவிட்டார். என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்? வேலூர் தொகுதியில் நடக்கிற இத்தேர்தலில் எங்களுக்கு வாக்குச் செலுத்தினால் பாஜக நுழைந்துவிடுமா? பாஜக எனும் ஒரு பெரும் பூதத்தினைக் காட்டியே இசுலாமிய, கிருத்துவ மக்களின் வாக்குகளை திமுக அள்ளிச் சென்றது. 37 இடங்களில் வென்ற திமுக என்ன செய்தது தற்போது? இன்றைக்கு தேசியப் புலனாய்வு அமைப்பைச் சட்டத்திருத்தம் செய்கிறது பாஜக. இதனை முதன்முதலில் கொண்டு வந்தது ஐயா ப.சிதம்பரம். பொடா, தடா போன்ற சட்டங்களைத் தூக்கிவிட்டு தேசியப் புலனாய்வு அமைப்பைக் கொண்டு வருகிறார். இச்சட்டம் ஆள்தூக்கிச் சட்டம். ‘இசுலாமியர்களைக் குறிவைத்து இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது’ என ஓவைசி குற்றஞ்சாட்டுகிறார். ‘இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழ் அமைப்புகளுக்கும்தான்’ என அமித்ஷா கூறுகிறார். தமிழ் அமைப்புகளுக்கும் சேர்த்துத்தான் இச்சட்டமென கூறி, கொண்டு வரப்பட்ட இச்சட்டத்திருத்த மசோதாவைத்தான் திமுக ஆதரித்து வாக்குச் செலுத்தியிருக்கிறது. இதன்மூலம், தாங்கள் தமிழுக்கும், தமிழர்களுக்குமான அமைப்புகளில்லை எனத் திமுக ஒப்புக்கொள்கிறதா? என்றும் கேள்வியெழுப்பினார்.

பொதுக்கூட்டத்தின் போது கனமழை கொட்டிய போதிலும் பேச்சின் வேகத்தைக் குறைக்காமல் இறுதிவரை மழையில் நனைந்தபடியே பரப்புரையை நிறைவு செய்தார் சீமான்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசுற்றறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் களப்பணியாளர்கள் தங்குமிடம் – ஆம்பூர் தொகுதி
அடுத்த செய்திசமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்