மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

128

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்வாரிய தேர்வாணையம் நடத்திய கள உதவியாளர் (கேங் மேன்) தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற 5000 தேர்வாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. மின்வாரியத்தில் 80,000க்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அவற்றை நிரப்ப திமுக அரசு மறுத்து வருவது உடல் உழைப்பு தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயலாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, அன்றைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட மின்வாரிய தேர்வாணையம் மூலமாகக் கள உதவியாளர் தேர்வுகள் நடைபெற்றன. ஏறத்தாழ ஒரு லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற எழுத்து மற்றும் உடல் திறன் தேர்வுகளில் 15000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 10000 பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன. ஆனால், கள உதவியாளர் தேர்வில் 15000க்கும் மேற்பட்டோர் உடல் தகுதி மற்றும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றதால் அன்றைய மின்துறை அமைச்சரிடம் தேர்ச்சிபெற்ற 15000 பேருக்கும் பணி ஆணை வழங்கிடக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்ற அன்றைய அதிமுக அரசு மீதமுள்ள 5000 பேருக்கும் பணி வழங்குவதாகச் சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றியது. பிறகு, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால், 5000 பேருக்குப் பணி வழங்காமல் அதிமுக அரசின் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பணி ஆணை வழங்கக்கோரி கள உதவியாளர் தேர்வர்கள் இன்றுவரை போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கள உதவியாளர் தேர்வில் வெற்றிப்பெற்ற 5000 பேருக்கும் பணி வழங்குவதாக 2021 தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதனை நிறைவேற்ற மறுத்துவருவது, வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். தேர்வர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பணி வழங்குவது தொடர்பாக திமுக அரசு வழக்கம்போல ஒரு குழுவை அமைத்தநிலையில், அக்குழு அளித்த அறிக்கையிலும் மீதமுள்ள 5000 பேருக்கும் வழங்கலாம் எனப் பரிந்துரைத்தது. ஆனால், அதன்பிறகும் திமுக அரசு பணி வழங்க முன்வரமால், இனி கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது பெருங்கோடுமையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், மின்வாரியத்தில் தற்போது 80.000 மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதை கருத்திற்கொண்டு, கள உதவியாளர் தேர்வில் வெற்றிப்பெற்ற 5000 பேருக்கு உடனடியாகப் பணி ஆணை வழங்குவதோடு, தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றிவரும் கள உதவியாளர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1705239172464693315?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇனமான தமிழன் அப்துல் ரவூப் தந்தை அசன் முகம்மது மறைவு! -சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் அவர்களின் ஆறாவது கட்ட மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம்