செய்திக்குறிப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு | நாம் தமிழர் கட்சி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிவிசாரணைக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம்மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி தலைமையில் இன்று 18-03-2019 திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியை நிலைநாட்டும் பொருட்டு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பின்வரும் கோரிக்கைகளை தமிழகக் காவல்துறைக்கு முன்வைக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குப் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருப்பதும், அதில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசியல் தலையீடற்ற ஒரு நீதிவிசாரணை நடைபெறுவதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
இவ்வழக்கின் தொடக்கத்திலிருந்தே ஒரு பக்கச் சார்பாகச் செயல்படும் கோவையைச் சேர்ந்த டி.எஸ்.பி. பாண்டியராஜன் போன்றோரை இவ்வழக்கிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும். மேலும், இவ்வழக்கை உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் எவ்விதத் தலையீடு இல்லாத வகையில் விசாரிக்க வேண்டும்.
இத்தோடு, புகார் கொடுக்க வரும் பாதிக்கப்பட்டப் பெண்கள் பற்றிய விவரங்கள் இரகசியம் காக்கப்பட வேண்டும். அப்பெண்களின் பாதுகாப்பும், நல்வாழ்வும் உறுதி செய்யப்பட வேண்டும்.
புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டப் பெண்கள் தொடர்பான காணொளிகள்வெளியிடப்படுவதையும், பரப்பப்படுவதையும் முற்றிலும் தடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற பெண்களின் தற்கொலைகளையும், காணாமல் போனப் பெண்கள் தொடர்பான விவரங்களையும் எடுத்து இவ்வழக்கோடு அதற்குத் தொடர்பிருக்கிறதா? என்கிற கோணத்திலும் விசாரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி