அறிவிப்பு: மார்ச் 20, இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி வருகின்றன. இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிசத்-தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை “இராமராஜ்ஜிய இரத யாத்திரை” என்ற பெயரில் இராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல், இராமஜன்ம பூமியில் இராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 13 அன்று அயோத்தியிலிருந்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மார்ச் 20 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் நுழைந்து இராஜபாளையம் வழி மதுரை வருகிறது. மதுரை – இராமேஸ்வரம் – திருநெல்வேலி – கன்னியாகுமரி – நாகர்கோவில் என மார்ச்-23 அன்று திருவனந்தபுரம் சென்று முடிகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த இரத யாத்திரை கட்டமைக்கப்படுகிறது.
1990-ல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்களால் முன்னெடுக்கப்பட்ட “இராம் இரத யாத்திரை” நாடெங்கிலும் பெரும் கலவரங்களிலும், மசூதி இடிப்பிலும் போய் முடிந்ததை நாடே அறியும்.
தமிழகத்தில் எதிர்ப்பியக்கம் கட்டமைக்க வேண்டிய நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மீ.த.பாண்டியன் தலைமையில் மார்ச் 20 அன்று ‘இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம்’ நடைபெறவிருக்கிறது. இதில் சனநாயக முற்போக்கு அரசியல் இயக்கங்கள், கட்சிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார். அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 20-03-2018 செவ்வாய்க்கிழமை, காலை 08 மணிக்கு
இடம்: புளியறை சந்திப்பு, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி