குவைத்தில் செந்தமிழர் பாசறை சார்பாக 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்

215

செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த நான்காம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் – 2050

தமிழர் தேசிய திருநாளை முன்னிட்டு குவைத்தில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும் வகையிலும் நமது வீர விளையாட்டான சடுகுடு போட்டியை அனைத்து தமிழர்களிடத்தும் கொண்டு சேர்த்து அதை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடத்தி அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் உணர்ந்து இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.

இந்த நான்காம் ஆண்டு தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக 14-12-2018 அன்று குவைத் அந்தலூஸ் பூங்காவில் சடுகுடு போட்டி மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் மிகப்பெரும் விழாவாக தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடத்தப்பட்டது இந்த விழாவில் சடுகுடு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தாயகத்திலிருந்து வருகைதந்திருந்த நாம் தமிழரின் இரண்டு பெரும் ஆளுமைகளான மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் ஹுமாயுன் கபிர் அவர்களும் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் புதுகை வெற்றிச்சீலன் அவர்கள் பண்பாட்டு மீட்சியுரையாற்றி சிறப்பித்தார்கள்.

பொங்கல் விழாவில் சிறப்பு விளையாட்டு போட்டிகள் வெற்றிச்சீலன் அவர்கள் தலைமையில் பிந்தாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ் இசுலாமியர்கள் கூடி தொழுகின்ற கைத்தான் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் சார்பாக ஜிம்மா தொழுகை முடிந்த பிறகு அங்கே ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

செயல் தலைவர் நாசர் அவர்கள் மற்றும் செயலாளர் கலீல் பாகவி அவர்களின் ஏற்பாட்டில் அங்கு விழிப்புணர்வு எழுச்சியுரை ஹுமாயுன் கபிர் அவர்கள் வழங்கினார்கள் அங்கு நூற்றுக்கணக்கான
தமிழ் இசுலாமிய உறவுகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

அதை முடித்துக்கொண்டு பிந்தாசு அரங்கத்தில் நடந்த பொங்கல் விழாவில் சரியாக 1.00 மணியளவில் அண்ணன் ஹுமாயுன் கபிர் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். மங்கள விளக்கேற்றி அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழியோடு விழா தொடங்கியது அதில் பாசறையின் கலை பண்பாட்டு குழுவினரின் பறை இசையோடு பள்ளிக் குழந்தைகளின் நடன நாட்டிய,பாடல் நிகழ்ச்சிகளும்,பாசறை கவிஞர்களின் கவிதை அரங்கமும் அதேபோல எழுச்சிமிக்க பாடல்களையும் பாசறை உறவுகள் சிறப்பாக பங்களித்தார்கள், இந்த விழாவை சிறப்பிக்க செய்த எண்ணற்ற தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும், தமிழ் உறவுகளும் குடும்பம் குடும்பமாக கலந்துக்கொண்டார்கள்.

காலையில் பொங்கல் செய்து அனைத்து உறவுகளுக்கும் பரிமாறப்பட்டது. பிறகு விளையாட்டு போட்டிகள் குழந்தைகளுக்கான தவளை ஓட்டப்பந்தயம் , பெண்களுக்கான இசை நாற்காலி , ஆண்களுக்கு மாவு நிரப்பும் போட்டி மற்றும் உறியடிக்கும் போட்டி அதனுடன் சேர்ந்து சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதன் பிறகு தமிழர் மரபு வழியில் வாழையிலையில் பல வகையான உணவுகள் உறவுகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. குவைத் வாழ் தமிழர்கள் சாதி, மதம் பார்க்காமல் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாபெரும் ஒரு பொங்கல் விழாவை குவைத் செந்தமிழர் பாசறை நடத்தியது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றுக்கொண்டு இருந்த அதே சமயத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை முதல்முதலில் குவைத் செந்தமிழர் பாசறை நடத்திய பொங்கல் விழா மேடையில் அறிவித்ததும் உறவுகளின் மகிழ்ச்சி கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது பொங்கல் விழா கொண்டாட்டங்களை இரட்டிப்பாக்கிவைத்தது.

மேலும் உரத்தூர்.மு.நாகேந்திரன் எண்ணமாக “வெத நெல்லத் தொலச்ச வயக்காடு” என்ற நூலை வெளியிட்டு உறவுகளுக்கு கையளிக்கப்பட்டது. நாம் தமிழர் செயற்பாட்டு வரைவு, நாள்காட்டியும் உறவுகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது

இந்த விழாவை சிறப்பாக செய்து முடிக்க துணைநின்ற குவைத் பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு நின்ற உறவுகள் , உணவு பறிமாறிய உறவுகள் , புகைப்பட கலைஞர்கள், இந்த விழாவை ஒருங்கிணைத்து மிக அழகாக கொண்டு சென்ற குவைத் செந்தமிழர் பாசறை அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.