அறிவிப்பு: சென்னை IPL போட்டி புறக்கணிப்பு – தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் | காவிரி உரிமை மீட்புக் குழு

392

அறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில், தமிழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக சென்னையில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகள் இருக்கும் என்பதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை சென்னையில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டபிறகும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து நடத்தும் முனைப்பில் IPL நிர்வாகத்தினர் உள்ளனர்.

தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக் கொண்டிருக்கும்போது தமிழகத்தின் தலைநகரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவமதிக்கிறக் கொடுஞ்செயலாகும். ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைவது வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் தலைமையில் இன்று 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் IPL கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மாலை 06 மணியளவில் தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் மக்கள் திரள் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

மேலும் இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக நடிகர் சத்தியராஜ், இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், தங்கர்பச்சான், சேரன்,  அமீர், வ.கௌதமன், கரு.பழனியப்பன், சுப்ரமணிய சிவா, ராம், வெற்றிமாறன், நடிகர் ஆரி உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

நாள்: 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி
இடம்: சென்னை, சேப்பாக்கம் மைதானம் முன்பு

கூடுமிடம்: மாலை 5 மணிக்கு, அண்ணா சிலை அருகில், புதிய தலைமை செயலகம் பின்புறம்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

குறிப்பு: அனைத்து தாய்த்தமிழ் உறவுகளும் கட்சி கொடிகளைத் தவிர்க்குமாறு அன்புரிமையுடன் கோருகிறோம்.

வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்!

Download HD Size File [உயர்தர கோப்பு] தமிழ்நாட்டுக் கொடி தரவிறக்கம் செய்ய


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி