ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

106

கட்சி செய்திகள்: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி

2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடருகின்றனர்.

இந்நிலையில், இன்று (26-04-2018) வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நேரில் ஆதரவு தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

இடைநிலை ஆசிரியரகள் தங்களது ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பலகட்டப்போராட்டங்களை நடத்தியுள்ளனர். தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தங்களது வாழ்வாதார உரிமைக்காக 22-04-2018 அன்று எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கிய போராட்டத்தை ஒடுக்கும்விதமாக தமிழக அரசு அனைவரையும் கைது செய்து ஒதுக்குப்புறமான பள்ளி வளாகத்தில் அடைத்துவைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் அப்பள்ளி வளாகத்திலேயே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எத்தனையோ போராட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியிருக்கிறது; வழக்குகள் தொடுத்து அச்சுறுத்தி கலைத்திருக்கிறது; காலங்கடத்தி போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. அதுபோல் இல்லாது, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக விளங்கும் வகுப்பறைகளை வழிநடத்தும் ஆசிரியப் பெருமக்களே தங்களது இன்றியமையா தேவைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் வீதியில் நின்று போராடும் நிலைமை வந்தால் அந்தச் சமூகம் மிக மோசமான சமூகமாக மாறிவிடும்.

அரசு அறமற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுபோன்ற போராட்டங்களே சான்று! ஒரு வேலையும் சரியாக செய்யாமல் வெறுமனே மேசையைத் தட்டிக்கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு இருமடங்கு சம்பள உயர்வு? மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமது மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு அதிகப்படியான சம்பளம்? என்றும் கேள்வியெழுப்பினார்.

சரியான உணவு, தூக்கம் இன்றி நான்கு நாட்களாக போராடிவருபவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகினறனர். மற்றவர்களும் பாதிப்புக்குள்ளாவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரே பணியில் ஈடுபட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போல சம ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும் எனவும், துறை சார்ந்த அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் எவரேனும் உடனடியாக போராட்டக்களத்திற்கு நேரில் வந்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் சீமான் குறிப்பிட்டார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி