மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது ‘ஓகி’ புயலில் சிக்குண்டு காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 13-12-2017 (புதன்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை துறைமுகம் சிங்காரவேலர் மாளிகை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காணாமல் போன மீனவர்களை மீட்கும்பணியில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டமுழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சித் தலைவர் ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவைத் தலைவர் சு.நடராசன், தமிழர் தேசிய கட்சித் தலைவர் பெ.இளங்கோ, சமூகநீதி மக்கள் கட்சித் தலைவர் ச.கு.உமர் முக்தார், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி, இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தலைவர் நத்தம் சேக் பரித் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினர்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.வியனரசு, அன்புத்தென்னரசன் மற்றும் கதிர்.இராஜேந்திரன், கொள்கைப்பரப்பு செயலாளர்கள் ஜெயசீலன் மற்றும் திலீபன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் கண்டனவுரையாற்றினார்கள்.
இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரையாற்றினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், https://www.youtube.com/watch?v=DfCBOd-Pn_U
ஒகி புயலால் பாதிக்கப்பட்டுக் கன்னியாகுமரி மாவட்டமே இன்று கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கின்ற இத்துயரச் சூழலில் எந்த மீட்புப் பணியையும் மத்திய, மாநில அரசுகள் செய்யாததைக் கண்டித்தும், காணாமல்போன மீனவர்கள் குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை மக்களிடம் சொல்லி எல்லா மீட்புப்பணிகளும் நடந்துவிட்டது போலவும் இப்பேரிடரின் எல்லா இழப்புகளையும் ஈடுகட்டிவிட்டது போல வெளிஉலகிற்குக் காட்டுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
மக்களை இந்த இரண்டு அரசுகளும் திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டதாகவும்,. புயல் முடிந்து இன்றோடு 14 நாட்களாகிவிட்டது. ஆனால் மூன்று நாட்களுக்குள்ளாகத் துரிதமாகச் செயல்பட்டிருந்தால் பல உயிர்களை மீட்டுக்கொண்டு வந்திருக்கலாம் குறைந்தபட்சம் உயிரற்ற உடல்களையாவது கொண்டுவந்து கொடுத்து மக்களை மனஆறுதல்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்னும் ஒருவரைக்கூட அரசால் மீட்க முடியவில்லை. மீன்வர்களாகவே நீந்தி போராடி உயிர்பிழைத்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் அரசு மீனவர்களை மீட்டதாகச் சொல்வது அப்பட்டமான பொய் என்றும், கண்ணீரோடும் கவலையோடும் கதறிக்கொண்டிருக்கின்ற மக்களிடமிருந்து உண்மைத் தகவல்களைப் பெறாமல் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் பிரதிநிதிகளைத் தனியாக அழைத்துப்பேசி எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டதுபோல மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்றும் குற்றம்சாற்றியுள்ளார்.
சிறிய மாநிலமான கேரளாவில் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய மாநிலம் பொருளாதார வலிமை இருந்தும் அதே தொகையை இழப்பீடாக வழங்குவது ஏற்புடையதல்ல என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்களும் காணாமல் போன பாதிப்புகள் கூட நிகழ்ந்து இருக்கின்றன. இவ்வளவு பெரிய பேரிடர் நிகழ்ந்தபிறகும் கையறுநிலையில் எல்லோராலும் கைவிடப்பட்ட இனத்தின் மக்களாகப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்றும் சீமான் குறிப்பிட்டார்.
பின்னர்ச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்,
மீனவர்கள் காணாமல் போன விவகாரத்தில் ஊடகங்கள் சூடான செய்திக்காகப் பொய்யான கருத்துக்களைப் பதிவுசெய்வதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளாரே..?
பதில்: பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமத்து மக்களையும் நேரில் சந்திக்காமல் இப்படி அப்பட்டமாகப் பொய் சொல்லக்கூடாது. பெருமதிப்பிற்குரிய ஒரு தலைவர் அப்படிப் பேசுவது ஏற்கமுடியாது! இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மீனவர் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் கேரளா அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம்..?
கேரள அரசு முறையான அரசு எனவே முறையாகக் கையாள்கிறது. தமிழக அரசு வெறும் தரிசு, பேசிப் பயனில்லை. இது பாஜக-வின் பினாமி அரசு, பாஜக ஆட்சியின் நீட்சி எனவேதான் பாதிக்கபட்ட கிராமங்கள் கிருத்துவ மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி அவர்களின் வாக்கு தனக்கானதில்லை என்பதனால் இவ்வாறு பழிவாங்குகிறது பாஜக அரசு.
அங்கு இணையம் துறைமுகம் தொடங்குவதை அப்பகுதி மக்கள் எதிர்க்கிறார்கள். ஏற்கனவே விழிஞ்சியத்தில் துறைமுகம் இருக்கும்போது அதன் அருகிலேயே மிகப்பெரிய பரப்பளவில் இன்னொரு துறைமுகம் (இணையம்) தொடங்குவதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்தவேண்டும். அங்கு எதை ஏற்றுமதி செய்து எதை இறக்குமதி செய்யப் போகிறார்கள்/ அதைப்பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடமுடியுமா? என்றும் கேள்விஎழுப்பினார்.
எம் மண்ணின் வளங்கள் கொள்ளையடித்துப் போவதற்குச் சாலை, தொடர்வண்டி, கப்பல் போக்குவரத்து மூன்றையும் துறைமுகத்தோடு இணைக்கப் போகிறார்கள். இதுதான் சாகர்மாலா எனும் கடல்மாலை திட்டம்.
எம் மண்ணின் வளத்தைக் கொள்ளையடிக்க எத்தனை இலட்சம் கோடி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுவருகிறது. இதனால் வாழ்வாதாராத்தை விட்டுவிட்டு வெளியேற முடியாமல் இணையம் துறைமுகத்தின் நோக்கத்தை அறிந்துகொண்டு அந்தத் திட்டத்தை எதிர்த்து வருகிறோம். கிருத்துவ மக்களின் வாக்கு பாஜக-வுக்குத் தேவையில்லை! அவர்களைப் பொறுத்தவரையில் நாங்கள் வெறும் வாக்கு மட்டும்தான் உயிர் இல்லை! இந்த நோக்கில் தான் திட்டமிட்டு படுகொலை செய்திருக்கிறது பாஜக அரசு என்றும் சிங்கள ராஜபக்சே குண்டு போட்டுக் கொன்றான்; திராவிட ஆட்சியாளர்கள் குடிக்கவைத்துக் கொன்றார்கள்; இப்பொழுது பாஜக கடலில் தத்தளிக்கவிட்டுக் கொல்கிறது. ஒன்று தமிழன் தண்ணீர் இல்லாமல் சாகிறான் அல்லது தண்ணீரில் மூழ்கி சாகிறான். இந்த இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
கன்னியாகுமரி சென்ற முதல்வரின் செயல்பாடு குறித்து..?
கேரள முதல்வர் பினராயி விஜயன் புயல் ஓய்ந்தபிறகு அத்தனை மாவட்ட ஆட்சியரையும் சந்தித்துப் பேசி உடனடியாகக் களத்திற்குச் சென்று 9 உலங்குவானூர்தி கொண்டு தேடும்பணியை முடுக்கிவிட்டு மீனவர்களை மீட்கிறார். ஆனால் இங்கு அப்படி ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. கேரள அரசால் மீட்கப்பட்டப்பட்டதுதான் நமக்குக் கிடைத்த 2 தமிழக மீனவர்களின் சடலங்கள் கூட என்பதை எப்படிப் பார்ப்பது.
14 நாட்களாக மீனவர்களை மீட்க ஒரு முயற்சியையும் செய்யாமல் இருந்துவிட்டு இப்பேரிடர் காலத்திலும் தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைக்கூட உணராமல் ஆர்.கே நகர் தேர்தலுக்கு நேரில் சென்று வீதிவீதியாக வாக்கு சேகரித்து வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் அழுத்தத்தின் காரணமாக 15வது நாள் கன்னியாகுமரி செல்வதை எப்படி ஏற்பது? மக்களின் அரசு ஏன் இவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறது. மக்களுக்கும் அரசுக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன் எதற்காக வருகிறது. நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களுக்குத் தோளுக்குத் தோளாகத் துனைநின்றிருக்க வேண்டாமா? அதிகாரமற்ற எங்களால் செல்லமுடிகிறது! அதிகாரமிக்க முதல்வரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க முடியாதா? ஆளுநரைச் சந்தித்து மனு கொடுப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை!
நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து..?
எத்தனை படகுகள், எத்தனை மீனவர்கள் இறந்தார்கள், எத்தனை மீனவர்கள் காணவில்லை என்ற கணக்கு மக்களிடம்தான் இருக்கிறது. ஆனால் அவர்களை யாரும் சந்திக்காமலே இவர்களாகவே ஒரு தவறான புள்ளிவிவரம் தருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் முழுமைக்கும் புயல், மழை, வெள்ளத்தால் 4000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது..இழப்பீடுகள், நிவாரணங்கள் அரசுப்பணி என அனைத்தும் அறிவிப்பு நிலையிலேயே இருக்கிறது. எப்போது கொடுப்பார்கள்? என்ன அரசுவேலை கொடுப்பார்கள்?. படகுகளுக்கான இழப்பீடு; உயிர்களுக்கான இழப்பீடு இவையெல்லாம் எப்போது தருவார்கள்? அதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் எப்படிச் சீரடையும்.
போராட்டத்தின் கோரிக்கைகள்..?
தமிழக அரசு இனிமேலாவது மீட்பு பணியைத் துரிதப்படுத்தி உளமாறப் பணியாற்றவேண்டும். வெறும் செய்திக்காக மக்களை ஏமாற்றாமல் நேர்மையாகச் செயல்படவேண்டும்.
முதலமைச்சர் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மக்களை நேரில் சந்தித்துப் பாதிப்புகள் குறித்துப் பேசவேண்டும்.
பாதிக்கபட்ட மக்களுக்கான உரிய இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும்.
தமிழகக் காவலர் பெரியபாண்டி ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது தமிழக அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை போன்றவை வலுவற்று இருப்பதைக்காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீரற்று இருக்கிறது. ஒரு காவல்துறை ஆய்வாளருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். காவலர்கள் பற்றாக்குறை மற்றும் பணிச்சுமை இருக்கும்வேளையில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு அதிகப்படியான பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது.
ஆர்.கே.நகரில் திமுக, அதிமுக, பாஜக மூன்று கட்சிகளும் வாக்குக்குக் காசு கொடுக்காமல் டெபாசிட் வாங்க முடியுமா என்றும் இவர்கள் கட்சி நடத்தவில்லை கம்பனி நடத்துகிறார்கள் என்றும் சீமான் குறிப்பிட்டார்.