21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்

74

21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு அதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களோடு இணைந்து அறவழியில் கடந்த (18-01-2017 முதல்) 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தை தொடங்கும்போது சனவரி20ஆம் தேதிக்குள் சட்டமன்ற, நாடாளுமன்றங்களைக் கூட்டி ஜல்லிக்கட்டு இனி எக்காலத்திலும் தடைபடாதவாறு நிரந்தர தீர்வாக, சிறப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அவ்வாறு சட்டம் இயற்றப்படவில்லையெனில் சனவரி21ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் தடையை மீறி தனது தலைமையில் சல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

சீமான் எழுச்சியுரை – தமுக்கம் மைதானத்தில் தொடர் அறப்போராட்டம் https://www.youtube.com/watch?v=fI7KT6yEz0w

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வை வழங்காது, தற்காலிக தீர்வாக அவசர சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இன்று (21-01-2017) அதிகாலை சல்லிக்கட்டை நடத்தியுள்ளார் சீமான். ‘அலங்காநல்லூரில் நடத்துவேன்’ என்று அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர். அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே மலைகளுக்கு இடையே உள்ள கூழாணிப்பட்டியில் கொட்டும் மழையிலும் விடாது சல்லிக்கட்டை நடத்திவிட்டார் சீமான்.

ஜல்லிக்கட்டு போட்டி காணொளி https://www.youtube.com/watch?v=vGT2LX9WEoY

இந்த சல்லிக்கட்டு போட்டிக்காக, வாடிவாசல் அமைத்து 70க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். அந்த இடத்தைச சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சூழ்ந்து நின்று ஆரவாரம் செய்தனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சீமான் பரிசு வழங்கினார். மேலூர் காவல்துறையினர் தகவல் கிடைத்து போட்டி நடைபெறும் இடத்திற்கு வருவதற்குள் போட்டி முடிந்து சல்லிக்கட்டு நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சீமான் எழுச்சியுரை – மேலூர் https://www.youtube.com/watch?v=JcjMYDkYGRo

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர். சல்லிக்கட்டு தென்மாவட்ட விளையாட்டு என்று சிலர் அதன் அடையாளத்தை குறுக்க நினைத்ததை முறியடிக்க கடந்த 13-01-2017 அன்று வட்மாவட்டமான கடலூரில் நாம் தமிழர் கட்சி தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திவிட்டனர். இங்கு எனது தலைமையில் சல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. தடையை மீறுவது எங்களது நோக்கமல்ல, எங்கள் குற்றமுமல்ல. இதற்கு தமிழர் இனத்தின் பாரம்பரிய
வீரவிளையாட்டான சல்லிக்கட்டு மீது தடை விதித்தவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்தார்..

மேலும், சல்லிக்கட்டு மீதான தடையை தமிழர் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே நாங்கள் பார்க்கிறோம் அதை முறியடிக்கவே சட்டப்போராட்டம், அறவழி போராட்டம், தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துதல் போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தார். மத்திய அரசு, சல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தடையை நீக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அவசர சட்டம் நிரந்தர தீர்வாகாது எனவே

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வளவு பேரெழுச்சியோடு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு சிறிதும் மதிப்பளிக்காது மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் அரசு தேவையில்லை! இதே நிலைப்பாட்டை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு: https://www.youtube.com/watch?v=OmuzZjpOJo0