புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவல வெடிகுண்டு வீச்சுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்!

24

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

மகளிர் தினத்தன்று பெண்கள் தாலி அணிவது குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப புதிய தலைமுறை தொலைக்காட்சி முடிவெடுத்திருந்தது. இதையொட்டி முதலில் மிரட்டலும் அடுத்தடுத்து வன்முறையுமாக அந்த தொலைக்காட்சி நிறுவனம் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பார்க்கையில் நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என எண்ணத் தோன்றுகிறது. ஒரு கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால் மாற்றுக்கருத்து சொல்வதுதான் நாகரிக நெறி. அதைச் செய்ய திராணியற்று ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியும், பத்திரிகையாளர்களை அடித்து மிரட்டியும் ஆவேசம் காட்டியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்குக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு இன்று புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அந்தத் தொலைக்காட்சி நிகழ்வின் மீது வெறுப்புற்று இப்படிச் செய்பவர்கள் தாங்கள் செய்வது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை உணர வேண்டாமா? இந்த வெறிச்செயலுக்குப் பதிலடியாக இத்தகைய குண்டுவீச்சு கொடூரங்கள் அவர்களின் அலுவலகங்கள் மீது நிகழ்த்தப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? தாங்கள் நியாயம் என நினைப்பவை மட்டுமே ஊடகத்தில் வர வேண்டும் என நினைப்பது எத்தகைய கொடுமையான சர்வாதிகாரம்?
தாலி உள்ளிட்ட சம்பிரதாயங்களில் தனிப்பட்ட உரிமையைத் தடுத்து இந்துத்துவம் என்கிற பெயரில் கலாசாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மதவாதம் எனச் சொல்வது எத்தகைய நகைப்புக்குரியது? கருத்தை கருத்தால் வெல்லாமல் ஆயுதங்களைத் தூக்கும் இத்தகைய அரக்கர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் உருட்டலால் ஊடகங்களைப் பணியவைக்கப் பார்க்கும் இந்த மடத்தன நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

முந்தைய செய்திமதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திபுதுக்கோட்டையில், அரசமலையில் பொதுக்கூட்டம் நடந்தது.