மக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.

21

மக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் கோரிக்கை.இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

ஏற்கனவே விண்ணை முட்டும் விலைவாசியால் வேதனையிலும் வெறுப்பிலும் இருந்த மக்களை நேற்று அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வானது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 8-வது தடவையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ந் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1-ந் தேதி 54 காசுகளும், ஜுன் 26-ந் தேதி 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8-ந் தேதி 10 காசுகளும், செப்டம்பர் 29-ந் தேதி 29 காசுகளும், அக்டோபர் 15-ந் தேதி 78 காசுகளும், நவம்பர் 8-ந் தேதி 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.

எனவே, இந்த ஆண்டில், 8 தவணைகளாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக அளவில் மானியம் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது.இதில் கொஞ்சமும் உண்மையில்லை.ஒரு சில முடிவுகளை அரசு எடுப்பதன் மூலம் பெட்ரோல் விலையை பெருமளவு குறைக்க முடியும்.2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.பெருமளவு விதிக்கப்படும் சுங்கத் தீர்வைகளைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல் விலையைக் குறைக்கலாம்.

கடந்த ஜுன் மாதம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முடியும்.இதையெல்லாம் தாண்டி அரசுகள் சிந்திக்க வேண்டியது ஒன்று இருக்கிறது.மக்களின் நலனுக்காகவே அரசுகள் இருக்கின்றன.மக்களின் சேவையே முதல் குறிக்கோள் ஆகும்.ஆனால் ஒவ்வொரு பொருளையும் விற்பனை செய்வதிலும் வருவாய் உருவாக்குவதிலும் வர்த்தக நிறுவனங்களைப் போல் வரவு செலவு கணக்குடன் அரசுகள் இயங்குகின்றன.ஆகவே அதனை விடுத்து மக்களைப் பெரிய அளவு பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதில் அரசுகள் மக்கள் நலனுடன் இயங்க வேண்டும்.அந்த அடிப்படையில் செயல்பட வில்லையெனில் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

முந்தைய செய்திமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.