தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் தமிழர் திருநாள் – 2025! – சீமான் வாழ்த்து

10

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்!
மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!
தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்:
திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்!
இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்:
இந்திய – நாவலந்தேயத்து இறைமையர்!

வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்!
வளந்தரு குறிஞ்சியில் காதலை உணர்ந்தவர்!
தேனுமிழ் முல்லையை மருதம் நெய்தலைத்
தீர ஆய்ந்துநல் இல்லறம் வகுத்தவர்!
கான்தரு பொருளையும் கழனியும் கண்டவர்!
கடலின் பரப்பையும் கடந்தயல் சென்றவர்!
ஏன், தம்பி தெரியுமா? – இவர்கள் தமிழர்கள்!

என்று ‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனார் பாடிய பாடலுக்கேற்ப முன்னைக்கும் முன்னந்தோன்றி மூத்த தமிழ்த்தேசியப் பேரினத்தின் பண்பாட்டுத்திருவிழாவான பொங்கல் பெருவிழா உலகெலாம் பரவி வாழும் தமிழர்த் திருநாளாக, தைத்திங்கள் முதல் நாள் மகத்தான இலட்சிய கனவுகளுடன் தொடங்குகிறது.

நாகரிகத்தின் தொட்டில்களாய் நதிக்கரைகள் விளங்கின என்று வரலாறு எழுதியோர் வியப்புடன் சுட்டிக்காட்டும் காலத்தில், நாடுகட்டி படை பெருக்கி பல்லுயிர் வாழ உயிர் நேயத்துடன் அறத்தின் வழி நின்று ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள்!

பேரறிவோடும், அளப்பரிய ஆற்றலோடும் விண்வெளி விந்தைகளைப் புரிந்து கொண்ட திறத்தோடு காலக்கணக்கை வகுத்து, இயற்கை வழி நின்று, மரபார்ந்த வாழ்க்கை ஒன்றை இம் மண்ணில் நிறுவினர் நம் முன்னோர்கள்!

பார்வியக்க ஏர் செலுத்தி பைந்தமிழ்த் தேனீயாய் உழவு பாட்டு இசைத்து உலகோர் பசி தீர்க்க..‌. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன் உதிரத்தால் உலகை செழிக்க வைத்த இனம் தமிழினம்!

‘ஏர் பின்னே நெடு வயல் நெடுக வளைய வரும் மாடு ஐந்தறிவு உயிரி தானே என்று எண்ணாமல் தன் குடும்பத்தில் ஒருவனாய், தன் மண்ணின் பெருமையாய்… கால் நடைகளைப் போற்ற மாட்டு பொங்கல் கண்டு தன் உயிர் நேயத்தை உலகிற்கு அறிவித்தவன் தமிழன்!

வீரத்திலும், அறத்திலும், கொடையிலும், மாறாப் பற்றுறுதி கொண்டு தாய் மொழியாம் தமிழைத் தனது உயிராய் நினைத்து உலகு சிறக்க வாழ்ந்த இனம் தமிழினம்!

ஆனால் வரலாற்றின் போக்கில் இடையில் வந்தோர் சாதி, மதத் தடைகளைத் தமிழர் மண்ணில் நிறுவியதால், உயிரெனப் போற்ற வேண்டிய இனமான ஓர்மை உணர்வை இழந்து நிற்கிறது. ‘இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர்’ என அறம் பாடி நின்ற இனம் பிறப்பின் வழி உயர்வு தாழ்வு கற்பித்துத் தனக்குள்ளே பூசலிட்டு வேரை மறந்து விவேகத்தைத் தொலைத்து திக்கற்று நிற்கின்றது..!

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழர் நிலம் ஒரு பக்கம் எதிரிகளால் இனப்படுகொலைக்கு உள்ளாகி நீதியற்று நிற்கிறது. இன்னொரு பக்கம் இயற்கை வளங்களைக் கொள்ளை கொடுக்கிற நிலமாய், பெரும் செல்வமெனப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆற்று மணலை அள்ளி, மலையை மணலாய் நொறுக்கி அயலானுக்கு விற்கிற கூட்டமாய் மாறி, அறியாமையால்
பணத்திற்காக இனத்தின் வளங்களை விற்கிற அதிகாரத்தை நிறுவி அல்லற்பட்டு நிற்கிறது. அதனால், தரணி சிறக்க செழித்த நிலம் இன்று தரிசு காடாய் மாறியிருக்கிறது. தன் இலக்கண இலக்கியச் செழுமையால் உலகில் மானுட குலத்திற்கே ஆகச்சிறந்த வாழ்வியல் நன்னெறியை கூறும் திருக்குறளை தந்த தாய்த்தமிழை இன்று நாம் சிதைய கொடுத்து நிற்கிறோம்..!

முப்படை கட்டி எட்டு திசையும் படையெடுத்து மனிதன் காலடி பட்ட மண்ணெல்லாம் புலிக் கொடி நட்டு உலகை ஆண்ட உன்னதத் தமிழினம்தான் இன்று ஆற்றலை இழந்து, அதிகாரத்தை இழந்து, மானத்தை இழந்து இந்த இழிநிலையை மாற்ற மாற்றான் எவனாவது வருவானா என்று மண்டியிட்டு கிடக்கிற இழிநிலை கண்டு, உணர்வும் அழிவும் ஒருங்கே பெற்ற தமிழின இளையோர் விழி சிவந்து முளைக்கிற பெரும் கோபத்தைத் தன் இதயத்திலே தேக்கி தனக்கென அரசியல் அதிகாரம் நிறுவ நாம்தமிழர் என்கிற பெரும் படை கட்டி இனம் வாழ தன்னைக் கொடுத்து நிற்கின்றனர்.

அரசியல் அதிகாரத்தை மட்டும் இல்லாமல்.. கலை, பண்பாடு, வேளாண்மை, தமிழரின் அறிவு சார்ந்த இறை நம்பிக்கைகள் ஆகியவற்றை மீளெழுப்பிக் கட்டமைக்கிற பெரும் வரலாற்று பணியையும் இணைத்தே இந்த மண்ணில் மகத்தான புரட்சி எழுந்திட.. நாம் தமிழராய்த் திரளத் தொடங்கியிருக்கும் காலத்தில்தான் தைத்திருமகள் வளம் திரண்ட நம்பிக்கைகளோடு களம் பற்றிய கனவுகளோடு தைத்திருமகள் கம்பீரமாக வருகிறாள்.

புதிதாய் மலர்ந்திருக்கும் தமிழர்ப் புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மைகள் விளையட்டும்!

கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக நம்மை ஆண்டு வரும் ஆட்சியாளர்களால் அன்னை தமிழ் நிலம் பாழ்படுத்தப்பட்டு, தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழினம் இப்புத்தாண்டில் மீட்சிப்பெற்று எழுச்சியுறட்டும். அதற்கான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு தமிழர் உள்ளத்திலும் உருவாகட்டும்!

வையம்போற்றும் ‘தை’ திருநாளில் தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!

கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது – மத போதை, நிலவளச் சுரண்டல், கனிமவள கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமைத்தனம் இவைகளுக்கு எதிரான மாபெரும் அரசியல் புரட்சி இம்மண்ணில் பூக்கட்டும்!

தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கிய பண்பாடு, வரலாறு காத்திட,
தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் தமிழ்த்தேசியப் புரட்சிப் பொங்கல்!

உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!

அன்பின்
வாழ்த்துகளுடன்…

https://x.com/Seeman4TN/status/1878875873207861750

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா – 2025!
அடுத்த செய்திஅமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? – சீமான் கண்டனம்