துயர் பகிர்வு: சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் வேதனை

118

சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

செயற்கை உரங்கள், பூச்சுக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையிலான வேளாண்மையை நடைமுறையில் லாபகரமாக செய்ய முடியும் என்பதை தமது இடையறா முயற்சியாலும் கடும் உழைப்பாலும், நிறுவிய புகழுக்குரியவர்.

ஏர்முனை நிறுவனத்தை தொடங்கி இயற்கை முறையில் தாம் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி மஞ்சள் தூள், குங்குமம், குளியல் கட்டிகள், தேங்காய் எண்ணெய், சிறுதானிய சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்களில் வெற்றிகரமாக விற்பனைசெய்து வேளாண்மையில் ஆர்வங்கொண்ட தமிழிளந் தலைமுறையினருக்கு முன்னத்தி ஏராக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை.

“நம்மாழ்வாரின் ஆலம் விழுதுகள்” என்ற அமைப்பினைத் தொடங்கி சிதறிக்கிடந்த இயற்கை முறை வேளாண்மையில் ஆர்வங்கொண்ட விவசாயிகளை ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுத்த பெருமைக்குரியவர். அவருடைய மறைவென்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, வேளாண்மையை வாழ்வியலாக கொண்ட தமிழ் இனத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும்.

சகோதரர் திருமூர்த்தியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், வேளாண் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

முழுவதும் இயற்கை வழி வேளாண்மை என்பது கற்பனையோ, மூட நம்பிக்கையோ அல்ல; அதுதான் நம் வாழும் பூமியை பாழ்படாமல் பாதுகாக்கும் பண்பாட்டு வேர் என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவிய விவசாயி திருமூர்த்தி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1762348731444130241?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதுயர் பகிர்வு: 32 ஆண்டுகளாக சிறைக்கொடுமை அனுபவித்துவந்த அன்த்தபும்பி சாந்தன் மறைவு!