முந்திரிக்காடு: போராட்டக் களத்தில் ஓர் புரட்சி ஆயுதம்!

335

முந்திரிக்காடு: போராட்டக் களத்தில் ஓர் புரட்சி ஆயுதம்!

பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாட்டுச் செழுமை கொண்ட தமிழர் இனம் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஓர்மைகொள்ளாமல் பிரிந்து சிதைவதற்கும், உரிமைகளை இழப்பதற்கும் முதன்மைக் காரணியாக இருப்பது, திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட சாதி, மத உணர்ச்சிகள்தான். அதை உணர்ந்து சாதிய ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமூகத்தை எட்டத்தான் பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் போராடி வந்திருக்கிறார்கள்.

’கடவுள் வெறி சமய வெறி
கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே
இடைவந்த சாதிஎனும்
இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய் தாய் தாயே!’ என்றும்,
’சாதி ஒழித்திடல் ஒன்று
நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால்
மறு பாதி துலங்குவதில்லையாம்!’ என்றும் இடை வந்த சாதியை ஒழிக்கத் தன் பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார் நம் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்கள். சாதி எனும் கேடு நீங்க நம் முன்னோர்கள் இப்படி எவ்வளவோ போராடியபோதும் இன்னும் இந்த மானுடச் சிந்தனைகளில் அது நீங்காத கறையாகப் படிந்திருக்கிறது.

தமிழர் ஓர்மைக்கு தடையாக இருக்கும் இந்த சாதிய உணர்ச்சிகளின் தீமைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றை நாம் களைந்து எறிய வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் உயர்ந்த நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கிறது முந்திரிக்காடு திரைப்படம். என் ஆருயிர் இளவல் மு. களஞ்சியம் அவர்கள் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் முந்திரிக்காடு, ஒரு திரைப் பாடம் என்று சொல்வேன். அந்தளவிற்கு அவரின் எழுத்தில் படமெங்கும் நிறைந்திருக்கும் உரையாடல்கள் ஒவ்வொன்றும் பன்னெடுங்காலமாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதியக் கேடுகளின் மேல் சம்மட்டி அடிகளாய் விழுந்து தெறிக்கச் செய்கின்றன.

கேடுகள் சூழ்ந்த களர் நிலங்களையும் நமக்கான விளைநிலங்களாக மாற்றியமைக்க, களை நீக்குதலும் பண்படுத்துதலுமே முதன்மைத் தேவைகளாக இருக்கின்றன. அவ்வகையில் சாதி எனும் புதர் மண்டிய காட்டைத் திருத்தும் ஓர் அரும்பணியைச் செய்கிறது, முந்திரிக்காடு திரைப்படம். இந்த தலைமுறைப் பிள்ளைகள் சாதி எனும் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்கும் அருமருந்தாகவும் நான் முந்திரிக்காடு திரைப்படத்தை பார்க்கிறேன்.

முந்திரிக்காட்டில் தனது திறன்மிகுந்த ஒளிப்பதிவால் படத்திற்கு மேருகேற்றி உள்ள அன்புத் தம்பி சிவசுந்தர் அவர்களுக்கு அன்பு நிறைந்த பாராட்டுகள்.

திரைக்கதை ஓட்டத்திற்கும் காட்சிகளின் உணர்ச்சிகளுக்கும் ஏற்றபடி பண்பட்ட பின்னணி இசையையும், விரும்பிக் கேட்கத் தூண்டும் வகையில் பாடல்களையும் அமைத்திருக்கும் அறிமுக இசையமைப்பாளர் தம்பி பிரியன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

நடிக்க வந்த முதல் படம் என்ற சாயல் சற்றும் தோன்றாத அளவிற்கு முந்திரிக்காட்டின் கதை நாயகனாகவும் நாயகியாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் தம்பி புகழ் மகேந்திரன் அவர்களையும் தங்கை சுபப் பிரியா அவர்களையும் உடன் நடித்த ஐயா ஜெயராவ், தம்பி கலை உள்ளிட்ட கலைஞர்களையும் உளமார வாழ்த்திப் பாராட்டுகிறேன். திரைப்படத்தின் எதிர்க் கதை மாந்தர்களாகத் தங்களின் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சக்திவேல், “பாலமேடு” பார்த்திபன், சோமு கண்ணன், யுவராஜ் சுமநேசன், மூர்த்தி, வேலு பிரபா, பிரதீப் ஆகியோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

சாதி ஒழிப்பிற்காகப் போராடிய நம் முன்னோர்களான இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோரின் போராட்ட வரிசையில் முந்திரிக்காடு திரைப்படத்தையும் ஓர் போராட்ட வடிவமாகப் பார்க்கிறேன். ஐயா இமையம் அவர்கள் எழுதிய ’பெத்தவன்’ எனும் குறுநாவலைத் தழுவி, அழுத்தமான திரைக்கதை அமைத்து, கூரான உரையாடல்கள் எழுதி, அரும்பாடுபட்டு தயாரித்துப் பெரும் உழைப்பைச் செலுத்தி இயக்கிய என் அன்பு இளவல் மு.களஞ்சியம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும், பேரன்பின் வாழ்த்துகளும்.

சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் ஒரு புரட்சி ஆயுதமாக வெளிவந்திருக்கும் இந்த முந்திரிக்காடு திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிக்கப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் முந்திரிக்காடு திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து உணர வேண்டுமெனப் பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
அடுத்த செய்திஅதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்! – சீமான் எச்சரிக்கை