சுற்றறிக்கை: தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக

207

க.எண்: 2023010008

நாள்: 04.01.2023

சுற்றறிக்கை:

தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக

     கட்சியின் அன்றாட நிகழ்வுகள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அறிவிப்புகள் குறித்த செய்திகளைத் தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்கைகளில் கொண்டுசேர்த்தல், கட்சி வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் முதன்மையானதாகவும் விளங்கும் உறுப்பினர் சேர்க்கைப் பணியை எளிதாக்கும் வகையிலான இணைய மற்றும் திறன்பேசி செயலியை உருவாக்கி, நிர்வகித்தல், பராமரித்தல், மேலும் அந்தச் செயலியில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கான கட்டமைப்புப் பணிகளுக்கான வசதிகளை உருவாக்கி, பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்துதல் போன்ற பணிகளின் மூலம் நாம் தமிழர் கட்சியின் வலிமைமிக்கப் படைப்பிரிவுகளில் ஒன்றாக ‘தகவல் தொழில்நுட்பப் பாசறை’ திகழ்கிறது.

தொடர்ச்சியாக நம் கட்சியின் மீது வீசப்படும் அவதூறுகளையும், பொது ஊடகங்களில் கட்சியைப் பற்றிய செய்திகளைத் திரித்தும், திணித்தும் பரப்பப்படும் செய்திகளை எதிர்க்கொண்டு, உண்மையான செய்திகள் மூலம் நாம் தமிழர் கட்சியை இணையம் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் போர்ப்படையாக தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு செயல்படுகிறது.

இணைய வெளியில் உலகம் முழுவதும் நாம் தமிழருக்காகக் களமாடும் எண்ணற்ற தாய்த்தமிழ் உறவுகளை தகவல் தொழில்நுட்பப் பாசறையின் கீழ் ஒருங்கிணைக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், ஒவ்வொரு நாட்டில் இயங்கும் நம் கட்சியின் கிளை அமைப்புகளிலிருந்து, சமூக ஊடகப்பிரிவு செயலாளர்களை நியமிக்க வேண்டுகிறோம். இச்செயலாளர், சமூக ஊடக அரசியல் குறித்தான விழிப்புணர்வும், வலையொளி, கீச்சகம், முகனூல் போன்ற தளங்களின் செயல்பாடுகள் குறித்தான அடிப்படை அறிவும், இணையவெளியில் கட்சிக்காகக் களமாட பெரும் ஆர்வமும் இருப்பவராக இருக்க வேண்டும்.

எதிர்வரும் 2024 இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள், ஒவ்வொரு தொகுதியில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும் நாம் தமிழரின் சமூக ஊடகப்படைப்பிரிவு திறம்படச் செயல்படவே இம்முன்னெடுப்பு.

மேலும் தகவல்களை அறிய,

தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களைத்
தொடர்புக் கொள்ளவும்.

சுனந்தா தாமரைச்செல்வன் : +91-9910385001
மதன் நெடுமாறன்
: +91-9840438400

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
அடுத்த செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்