திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுக்கு சீமான் நேரில் ஆதரவு – செய்தியாளர் சந்திப்பு

136

27-12-2022 | திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் – சீமான் | செய்தியாளர் சந்திப்பு

 

திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக அரசைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை, 27-12-2022 அன்று காலை 09:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பூந்துருத்தியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் நடக்கிறது. வேளாண் பெருமக்களின் இந்தப் போராட்டம் என்பது நாங்கள் விரும்பிச் செய்வது அல்ல, எங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. திருவையாற்றில் உள்ள வேளாண் நிலத்தில் சாலை அமைப்பதற்காக நன்கு விளைந்தப் பயிர்களின் மீது இரும்புக்கரம் கொண்ட எந்திரங்களைக் கொண்டு மண்ணைப் போட்டு மூடியக் காட்சிகளை நாம் எல்லோரும் வலையொளிகளில் பார்த்திருப்போம். பெரிய ஊடகங்கள் எதுவும் அதை காண்பித்ததாகத் தெரியவில்லை. அது குறித்து ஆளும் அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியதாகவும் தெரியவில்லை. பெரும்பாலான காட்சி ஊடகங்கள் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலை தான் இருக்கிறது. அந்தக் காட்சிகளை வலையொளிகளில் பார்த்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல், துடிதுடிக்காமல் இருந்திருக்காது. இந்த அரசு அதை வெறும் பயிர்கள் தானே என்று நினைக்கிறது. அவர்கள் கொன்றது வெறும் பயிர்கள் அல்ல பலகோடிக்கணக்கான உயிர்கள். இந்த செயல் கற்பினிப் பெண்களை, பச்சிளம் குழந்தைகளை உயிரோடு மண்ணைப் போட்டுப் புதைப்பதற்குச் சமம். பயிரில்லாது உயிரில்லை. வேளாண் குடிகளைப் பொறுத்தவரை பயிர்கள் என்பது நாங்கள் பாதுகாத்து வளர்க்கும் எங்கள் உயிர். இந்த ஆட்சியாளர்கள் செய்வது வெறும் சர்வாதிகாரமல்ல, கொடுங்கோன்மை.

 

முதலில் இந்தச் சாலையின் அவசியம் என்ன? இப்படி ஒரு சாலை வேண்டும் என்று மக்கள் ஏதேனும் போராட்டம் செய்தார்களா? வேளாண் பெருமக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்களா? இந்தச் சாலை விரிவாக்கத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வாய்ப்பிருந்தும், இந்தப் பக்கம் அமைக்கக் காரணம் என்ன? அந்தப் பக்கத்தில் பல தோப்புகள் உள்ளன. அதை வைத்திருக்கும் முதலாளிகள் எல்லோரும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்தப் பக்கம் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் எளிய விவசாயிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அரசியல் வலிமையும் இல்லை. அதனால் இவர்களின் நிலங்கள் மீது இந்த அதிகார அடக்குமுறைப் பாய்கிறது.

 

இந்த விவசாயிகள் நாத்து நடவு செய்வதற்கு முன்பே அறிவிப்புக் கொடுத்து தடுத்திருக்கலாம். அல்லது இந்த அறுவடை முடிந்தப் பிறகு, வேளாண் பெருமக்களின் கூட்டமைப்பை அழைத்துப் பேசி, இந்தத் திட்டத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி, அவர்கள் நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கி, எங்கள் மக்களின் ஒப்புதலோடு நீங்கள் சாலை போட முயன்றிருந்தால் அது மாண்புள்ள ஒரு அணுகுமுறை என்று கருதலாம். ஆனால் அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், எந்த அறிவிப்பும் கொடுக்காமல், இந்த வேளாண் மக்களால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணி, அதிகாரத் திமிரில் மண்ணைப் போட்டு மூடும் செயல் எப்படிப்பட்டக் கொடுமையானது. ஆறு கிராமங்கள் இதில் பாதிபிற்கு உள்ளாகும் எங்கிறார்கள். ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தொலைவிற்கு என்றால் எத்தனை ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலம் பறிபோகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.

 

இந்த நிலங்கள் எல்லாம் எங்கள் ஊரு இராமநாதபுரம் போன்று வறண்ட பூமியல்ல. சாதாரணமாக மூன்று போகம் விளையக்கூடிய நஞ்சை நிலம். தஞ்சாவூரில் நல்ல விளைச்சல் நடந்தால், தமிழ்நாடு முழுவதற்கும் உணவு வழங்கலாம். தமிழ்நாடு நல்ல விளைச்சலைப் பெற்றால், உலகதிற்கே சோறு போடலாம் என்பது நம்முடைய முன்னோர்கள் உணர்ந்து தெளிந்து கூறிய முதுமொழி. அந்தத் தஞ்சையின் வேளாண் நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? இந்த சாலைகள் அமைக்க முதன்மையானக் காரணம் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி போன்ற ஆறுகளின் படுக்கைகளிலிருந்து மணலை அள்ளிக் கொண்டு போகவேண்டும் என்ற வசதிக்காகத் தான். இப்போது இருக்கும் இந்த முதன்மைச் சாலைகளில் பாரவுந்துகள் மூலம் கொண்டு செல்லும்பொது விபத்துகள் அதிகம் நடக்கிறது. பத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்ததால், மக்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தி போராட்டங்கள் நடக்கத் தூண்டுகிறது என்பதனால், இப்போது போடப்படும் புறவழிச்சாலை இந்த மணலைத் திருடிக் கொண்டு போக அவசியப்படுமே தவிர, மக்களின் பயன்பாட்டிற்கான சாலையாக இருக்காது.

 

அரசியல் வலிமையற்ற எளிய மக்களின் மீதி அதிகாரத்தைப் பாய்ச்சும் இந்தக் கொடும் போக்கை எப்படி சகித்துக் கொண்டு போவது? விளைநிலத்தை அழித்துவிட்டு நீங்கள் சாலை அமைக்க முடியும். ஆனால், அந்த சாலையை அழித்துவிட்டு மீண்டும் விளைநிலமாக மாற்ற முடியுமா? விளைநிலங்களை உருவாக்க நமது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளாக காட்டைத் திருத்தி, மேட்டைத் திருத்தி, நிலத்தை உளுது, வேளாண் நிலமாக மாற்ற உழைத்திருக்கிறார்கள். அதை எளிதில் அழித்துவிடலாம். ஆனால் மீண்டும் உருவாக்க நீண்டகாலமாகும். ஒருவேளை சாலை அமைக்கப்பட்டால், நாங்கள் அதிகாரத்திற்கு வந்து அதை மீண்டும் வேளாண் நிலமாக மாற்றியமைப்போம். அப்படிபட்ட சாலை எம் மக்களுக்குத் தேவையில்லை.

 

முதலில் வேளாண் பட்ஜெட் போடுவதால் பயிர் விளையுமா? நிலத்தில் இறங்கி வேலை செய்ய நம்மிடம் ஆள் இருக்கிறதா? நூறு நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் எம் மக்கள் நுட்பமாக விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். இன்று வடஇந்தியர்கள் இங்கே வந்து விவசாயம் செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிச் செல்கிறது என்று ஆட்சியாளர்களின் அறிவுக்கு எட்டுகிறதா, இல்லையா? அவர்களுக்கு வாக்குரிமைக் கொடுப்பதனால் இந்த நிலத்தைக் கைபற்றி நாளை அவன் இந்த நிலத்தின் அரசியலைத் தீர்மானிப்பான் என்று தெரியுமா, தெரியாதா? இந்தத் தொலைநோக்கு கூட இல்லாது நீங்கள் எப்படி தலைவனாக இருந்து நாட்டை ஆட்சி செய்கின்றீர்கள்?

 

வேளாண் பெருங்குடி மக்கள் நம்முடைய நிலத்தின் உரிமைக்காகத் தொடந்து போராட வேண்டும். உங்கள் நிழலாய், உங்கள் மகன், உங்கள் அருகிலே தான் நிற்பேன். நான் எப்போது இது வேளாண் குடிப்போராட்டம், மீனவர் போராட்டம், மாணவர் போராட்டம், மருத்துவர் போராட்டம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. இது என் போராட்டம், என் இனத்தின் போராட்டம், என் மக்களின் போராட்டம் என்று தான் பார்ப்பேன். அதனால் தான் என் மக்கள் முன்னெடுக்கும் எல்லாப் போராட்டங்களிலும் உயிரைக் கொடுத்து களத்தில் உடன் நிற்கிறோம். மீண்டும் இந்த சாலை அமைக்க வந்தால், நானே நேரில் வந்து நின்று தடுப்பேன்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திகடலூர் மாவட்ட மாற்று கட்சியினர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாச்சலம்
அடுத்த செய்திஅரசுப் பேருந்து ஏற்படுத்திய விபத்தினால் உயிரிழந்த லட்சுமணன் குடும்பத்திற்கு உடனடியாக 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்!