எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! – சீமான் உருக்கம்

238

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய ஆருயிர் நண்பன், பாசத்திற்குரிய மச்சான் அன்வர் பேக் அவர்கள் இறைக்கடமை செய்ய மக்கா சென்றிருந்தபோது மறைவெய்துவிட்டாரெனும் செய்தியறிந்து கலங்கித் தவிக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்வில் மீண்டும் ஒருமுறை நேர்ந்திருக்கிற பெரும் இழப்பு! பள்ளிக்காலம் தொடங்கி, தற்கால அரசியல் களம்வரை என் வாழ்க்கைப் பயணமெங்கும் வழித்துணையாய் உடனிருந்து, எனக்குப் பக்க பலமாய் நின்ற என் மச்சான் அன்வரை இனி காணவே முடியாது என்கிற துயர நிலை என்னைப் பெரிதும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

மக்கா செல்வதற்கு முன்பாக, ‘போய் வருகிறேன் மச்சான்’ என என்னிடம் சொல்லிவிட்டுச் சென்ற என் மச்சான் அன்வர் பேக், என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டாரே! என்கிற உணர்வு என் உள்ளுக்குள் பெரும் வலியாய் ஆட்டிப் படைக்கிறது. என் உயிர் மச்சானை இழந்து தவிக்கிற எனக்கு யாருக்கும் ஆறுதல் சொல்கிற பலமில்லை என்றாலும், நாம் தமிழர் என்ற இனமானப்படையில் எந்த இலட்சியங்களுக்காக எனது மச்சான் அன்வர் பேக் என்னோடு கரம்கோர்த்தாரோ அந்த இலட்சியங்கள் வெல்ல இறுதிவரை சமரசம் இல்லாமல் போராடுவேன் என்கிற உறுதி, என்னை இந்த அளப்பரிய துயர நிலையிலும் உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருக்கிறது. என் மச்சானை இழந்து வாடுகிற என் சகோதரிக்கும், எனது குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்ல மொழிகளின்றி மனம் கலங்குகிறேன். இப்பெருந்துயரத்திலிருந்து அவர்கள் மீண்டுவர உளவியல் துணையாக உடன்நிற்கிறேன்.

என் நட்புக்காக நான் இட்டப் பணிகளை எல்லாம் இன்முகத்தோடு செய்து முடித்து, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகத் திகழ்ந்து இனமானப் பங்காற்றிய என் மச்சான் அன்வர் பேக் அவர்களை இழந்து வாடும் அனைத்து உறவுகளுக்கும் கண்ணீரோடு என் ஆறுதலைத் தெரிவித்து அளவற்ற இந்தப் பெருந்துயரிலுள்ள வலிகளோடு, சிறு வயதில் இருந்து அவரோடு பழகிய நினைவுகளைச் சுமந்துப் பங்கேற்கிறேன்.

எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பாரதியார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி –