அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு  | சென்னை – அடையாறு

118

06-12-2022 | அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை, அடையாறில் அமைந்துள்ள, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள் கூறியதாவது, “அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று. “சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது. நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை. கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல” என்பது போன்ற புரட்சிகர பொன்மொழிகளை எங்களைப் போன்ற பிள்ளைகளுக்குப் போதித்தப் புரட்சியாளர். சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிப் பந்தலுக்கு ஒப்பானது என்று போதித்தப் பேராசான். இந்த நாட்டின் பெருமையே அண்ணல் காந்தியடிகளும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தான். புதிதாகக் கட்டப்படுகிற இந்திய ஒன்றியப் பாராளுமன்ற கட்டிடத்திற்குப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடையப் பெயரை வைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். அவர் நினைவு நாளான இன்று அந்தக் கோரிக்கையை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அது அவருக்குப் பெருமையல்ல, மாறாக இந்த நாட்டிற்கும், நாட்டின் குடிகளுக்கும் தான் பெருமை.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற இந்நாளில், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கிற, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு பாராட்டுகிற இந்த கோட்பாட்டைத் தகர்த்து, ஒரு சமநிலைச் சமூகம் படைக்க வேண்டும் என்கிற உறுதியை, அதற்காகப் போராடுகிறோம் என்ற உறுதியை, இந்நாளில் நாங்கள் ஏற்கிறோம். அதுதான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நாங்கள் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். அப்படி உளமார அவர் கோட்பாட்டை நேசித்து நிற்கிற பிள்ளைகள் நாங்கள், எங்களுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானத் தலைவர் அல்ல. மானுடச் சமூகம் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, தாழ்த்தப்பட்டுக் கிடக்கிறதோ, அவர்கள் எல்லோருக்குமான ஒரு தத்துவம், பொதுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் புரிந்து உணர வேண்டும். அப்படி புரிந்து உணர்ந்து நிற்கிற பிள்ளைகள்தான் நாம் தமிழர் பிள்ளைகள். அந்த அடிப்படையில் நாங்கள் எங்கள் அறிவு ஆசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு எங்கள் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமை அடைகிறோம்” என்று தெரிவித்தார்.

பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பேசுவதற்குக் காரணம் வாக்கு தான். இவ்வளவு காலம் இல்லாது இன்று புதிதாக இவர்கள் அம்பேத்கர் அவர்களைக் கொண்டாடுவதற்குக் காரணம் என்ன? நாட்டின் பெருமையே அண்ணல் காந்தியடிகளும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தான். ஆனால், அவர்களைத் தவிர்த்து வல்லபாய் பட்டேலுக்கு 3000 கோடி ரூபாய் செலவில் சிலை வைத்தவர்கள் இவர்களே. வாக்கிற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்” என்று கூறினார்.

“விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவது என்பது நீண்டகாலமாக நடந்து வரக்கூடிய ஒரு செயல். அதற்கு நாங்கள் தொட்ர்ச்சியாகப் பலகட்டப் போராட்டங்களைச் செய்து பார்த்துவிட்டோம். இப்போது மறுபடியும் போராட இருக்கிறோம். நிலத்தைக் கையகப்படுத்துவதில் காட்டும் தீவிரத்தை, நமக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் அரசு காட்டுவதில்லை. நிலமும், வளமும் நம்முடையது. ஆனால் வேலைவாய்ப்பை வடமாநிலத்தவருக்கு கொடுப்பது. நம்மை நிலமற்ற கூலிகளாக்கி வெளியேற்றிவிட்டு, பெருத்த ஏமாற்றத்தை அரசு செய்கிறது. இந்த கொடும்போக்கைக் கண்டித்து நாங்கள் தொடர்ந்துப் போராடுவோம்” என்றார்.

“இங்கே இருக்கும் தமிழர்களை மிக நுட்பமாக உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிறகு வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்போது, அதை நிரப்ப வட மாநிலத்தவரை வலிந்துப் புகுத்துகிறார்கள். இங்கே வந்து அவர்கள் வேலை செய்து பெறுகின்ற சம்பளத்தைக் கொண்டு பெருமளவு நமது மாநிலத்தின் பொருளாதாரம் வேறு மாநிலத்திற்குச் செல்கிறது. அவர்கள் உழைத்து, அதற்கேற்ற வருமானத்தை ஈட்டுவதுக் கூட பரவாயில்லை. ஆனால், அவர்களுக்கு குடும்ப அட்டை கொடுப்பது போதாதென்று வாக்காளர் அட்டையும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த நிலத்தின் அரசியலையே அவர்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால், இந்த நிலத்தின் மக்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாக மாற நேரிடும். நாம் அடிமையானால், நிலமற்றவராவோம். நிலமற்றவர்கள் வேறு இடத்திற்கு அடித்து விரட்டப்படுவார்கள். ஈழத்தில் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்ததோ அது எங்களுக்கும் இங்கு நடக்கும். அவர்களுக்காகவாவது ஏதிலிகளாக வந்து குடியேற இங்கு ஒரு தாய்நிலம் இருந்தது. நாம் இங்கிருந்து அடித்து விரட்டப்பட்டால் எங்கு செல்வது? அதனால், நாங்கள் அரசை எச்சரிக்கின்றோம். அவர்களுக்குக் குடும்ப அட்டை கொடுப்பதுக் கூட பரவாயில்லை. ஆனால், வாக்காளர் அட்டை மட்டும் கொடுக்கவேக் கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். பெரும் விளைவுகள் ஏற்படும் முன் தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

முந்தைய செய்திஅரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதோடு உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்