தமிழர் மெய்யியல் மற்றும் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவு தமிழினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்

237

தமிழர் மெய்யியல் மற்றும் பண்பாட்டு ஆய்வறிஞர் ஐயா முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் உடல்நலக்குறைவினால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், இலக்கியத்துறைத் தலைவராகவும் சிறப்புற பணியாற்றிய ஐயா க.நெடுஞ்செழியன் அவர்கள், தமிழரின் அடையாளங்கள், தமிழர் இயங்கியல், தமிழர் தருக்கவியல், சங்ககாலத் தமிழர் சமயம், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும், ஆசிவகமும் ஐயனார் வரலாறும் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நூல்களை எழுதி தமிழர் மெய்யியல் மீட்சிக்கும், எழுச்சிக்கும் அருந்தொண்டாற்றிய பெருமைக்குரியவர்.

ஐயா அவர்களின் ஆய்வுப் பணிகளைச் சிதைக்கும் நோக்கோடு கர்நாடக அரசு தொடர்ந்த பொய் வழக்கினால் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசமும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்திற்கும் அலைக்கழிக்கப்பட்ட கொடுமைகளுக்கும் ஆளானவர். அனைத்திற்கும் மேலாக தான் பெற்ற மகனை ஈழத்தாயக விடுதலை போராட்டக் களத்திற்குத் தந்த புகழுக்குரியவர்.

அவருடைய மறைவென்பது உலகத் தமிழினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். ஈடு செய்யவியலாத பேரிழப்பால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும், தமிழர் மெய்யியல் பற்றாளர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து இப்பெருந்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களின் இறுதி நிகழ்வினை உரிய அரசு மரியாதையுடன் தமிழ்நாடு அரசு நடத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திசீமான் பேரழைப்பு: நவ. 05 தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் கூட்டம் – சென்னை (தி. நகர்)