சீமான் பேரழைப்பு: நவ. 05 தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் கூட்டம் – சென்னை (தி. நகர்)

159

என் உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும்
எனது அன்பும் வணக்கமும்!

பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பும் பேராற்றல் கொண்ட தமிழ்ப்பேரறிஞர், இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான், தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட பெருந்தமிழர் அப்பா நெல்லை கண்ணன் அவர்களது நினைவைப் போற்றுகிற புகழ்வணக்கக்கூட்டம் வருகிற 05-11-2022 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகரிலுள்ள சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக நடைபெறவிருக்கிறது.

‘தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப் பயனெனக் கருதி வாழ்ந்து, தமிழ் தந்த புகழோடு மறைந்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களது தமிழ்ப்பணிகளை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமையாகும்.

ஆகவே, தமிழ்ப்பெரியோரைப் போற்றும் இந்நிகழ்வில் பெருந்திரளாகப் பங்கெடுக்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளைப் பேரன்புகொண்டு அழைக்கிறேன்!

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
தமிழ் அள்ளிப் பருகுவோம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி