முக்கிய அறிவிப்பு: மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி அளவிலான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழுக்கான ஆண்டுக் கட்டணதாரர்களாக இணைத்துக்கொள்ள வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல்

525

க.எண்: 2022090417
நாள்: 25.09.2022

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்!

இன்றைய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்புப் படையாக, இன மீட்சி உரிமைக் குரலாகத் திகழ்ந்து வருகிற நாம் தமிழர் கட்சி தனது இலட்சியப் பயணத்தை எவ்வித தடையும் இல்லாமல் உறுதியோடு தொடரவேண்டிய நிலையில் இருக்கிறது. எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படையை வளர்த்து வலிமையடையச் செய்ய ஒவ்வொருவரும் தங்களால் இயன்றப் பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும்.

எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் நாம் தமிழர் கட்சி பயணித்தாலும் எப்போதும் பொருளாதார நெருக்கடியே நமது செயற்பாட்டை மட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியில் ஒரு தேக்கநிலையை உருவாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா பேருண்மை.

பாதையைத் தேடாதே; உருவாக்கு! என்று முழங்கிய தலைவரின் மக்கள் நாம். எனவே நமக்கென இலட்சியப் பாதையை உருவாக்கி இலக்கை வென்றெடுப்பதற்கு, மேடைபோட்டு பேசுவது மட்டுமே கட்சியை வெகுமக்களிடம் கொண்டுசேர்க்கும் என்று நம்பிக்கொண்டு இருக்க முடியாது. காட்சி ஊடகங்கள் நம்மிடம் இல்லை என்ற போதிலும், அச்சு ஊடகத்திலாவது நாம் தொடர்ச்சியாக இயங்க வேண்டும். நமக்கென்று ஒரு இதழ் இருக்க வேண்டும் எனும் வரலாற்றுப் பெருந்தேவையின் விளைவாக உருவாக்கப்பட்டது தான் ‘எங்கள் தேசம்’ இதழ்.

15 நாட்களுக்கு ஒருமுறை என ‘எங்கள் தேசம்’ இதழை தொடர்ச்சியாக வெளியிடுவதில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அதை ‘புதியதொரு தேசம் செய்வோம்’ என்று மாத இதழாக மாற்றி, நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அறிவிப்புகள், தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள், மக்கள் நலப் பணிகள், கட்சிக் களப்பணிகள்,
துயர் துடைப்பு உதவிகள் குறித்தான செய்திகள், அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்கள், பயனுள்ள நூல்கள் குறித்த அறிமுகம், பொதுக்கூட்ட உரைகளின் எழுத்தாக்கம், கேள்வி-பதில்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை உள்ளடக்கி தொடர்ச்சியாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இதழை வாங்கிப் படிக்க மற்றவர்களை வலியுறுத்துவதைவிட, நமக்கே அந்தப் பழக்கம் வரவேண்டும். நம் கட்சி குறித்த செய்திகளை முதலில் நாம் அறிந்துகொள்ளுதல் அவசியம்.. உலகம் உள்ளங்கையில் சுருங்கி இருக்கிறது. அதனால் பகிரியில் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அது அப்படியில்லை. இன்றளவும் அச்சு ஊடகங்களின் தேவை அரசியலில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. கட்சிக்கும் நமக்கும் உயிர்த்தொடர்பாக இருப்பவை கட்சி இதழ்களும், செய்தித்தாள்களும் தான். நமது உறவுகளுக்கு அரசியல் நிலைப்பாடுகள் குறித்து, தடுமாற்றம் ஏற்படும்போது நமது கட்சி இதழ்களையும் நூல்களையும் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும். நமது களப்பணிகள் நம் செய்தித்தாள் மற்றும் இதழ்களின் வாயிலாகப் பலருக்கும் சென்றடையும் என்பது திண்ணம்.

மாதந்தோறும் இதழுக்கான உள்ளடக்கத்தைச் சேகரித்து, செய்தி வடிவில் தட்டச்சுச் செய்து, ஒழுங்குபடுத்தி, பிழைதிருத்தி, அழகாக வடிவமைத்து, தரமான முறையில் அச்சடித்து, அனைத்து கட்டணதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பிவைப்பதற்கு அதிகளவில் மனித ஆற்றலும் பொருளாதாரமும் செலவிடப்படுகிறது. தற்போது குறைந்த அளவிலான ஆண்டுக் கட்டணதாரர்கள் மட்டுமே உள்ள நிலையில் குறைந்தளவு எண்ணிக்கையிலேயே இதழ்கள் அச்சிடப்படுவதால் தயாரிப்புச் செலவு அதிகரித்து, பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக் கட்டணதாரர்கள் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் அதிகரிக்கச் செய்வதும், மாதந்தோறும் நேரடியாக இதழை வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாலும் மட்டுமே இந்தத் தொய்வு நிலையை ஈடுசெய்யவியலும் என்பது தான் நம் முன் இருக்கும் இறுதி வாய்ப்பாகும்.

எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி அளவிலான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் தங்களை ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழுக்கான ஆண்டுக் கட்டணதாரர்களாக இணைத்துக்கொள்வது இன்று முதல் (25-09-2022) கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும், அனைத்து மண்டல, மாவட்ட, தொகுதி அலுவலகங்கள் சார்பாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இதழ்களை மொத்தமாக வாங்கி அருகிலுள்ள நூலகம், தேநீர் விடுதிகள், பொதுநலச் சங்கங்களுக்கும் கட்டணமின்றி வழங்கி, நமது கட்சி குறித்த செய்திகளை மக்களிடத்தில் சென்று சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கட்சி உறவுகள், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழில் படித்தவற்றைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் வாங்கிப் படிக்க அன்போடு அழைப்பு விடுங்கள். சுவாசிப்பதைப்போல வாசிப்பதைப் பழக்கமாக்குங்கள். நாம் தமிழர் பிள்ளைகளோடு வாதம் செய்து வெல்ல முடியாது என்கிற அளவிற்கு தர்க்க அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் தொடர்ச்சியாக வெளியாவதற்கு, அதைத் தொடர்ச்சியாக வாங்கிப் படித்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் என நான் பேரன்பும், பெரும் நம்பிக்கையும் கொண்டு நிற்கிற எம் தாய்த்தமிழ்ச் சொந்தங்களிடமும், நாளையத் தமிழ்ச்சமூகத்தை வலிமைமிக்கதாகப் படைக்கக் காத்திருக்கிற எழுச்சிமிகுந்த இளம் புரட்சியாளர்களான எம் தம்பி, தங்கைகளிடமும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

“புதியதொரு தேசம் செய்வோம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!”

பேரன்புடன் உங்கள்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வங்கி கணக்கு விவரம்:
———————-
வங்கி கணக்கின் பெயர்: எங்கள் தேசம் (Engal Desam)
வங்கி பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
வங்கி கணக்கு எண்: 6325605143
கிளை: மப்பேடு (Mappedu)
IFSC Code: IDIB000M119
Gpay/PhonePe: 9092529250@ybl
———————-

பணம் செலுத்தியவர்கள் வங்கி ரசிது எண் மற்றும் அஞ்சல் முகவரியை தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து ஆண்டு சந்தாவை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏற்கனவே பணம் செலுத்தியும் தவறான அஞ்சல் முகவரி போன்ற காரணங்களினால் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ மாத இதழைப் பெறமுடியாதவர்கள் தலைமை அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு ஆண்டு சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: +044 43804084 / 9500767589 / 9600709263 / engaldesam@gmail.com

முகவரி: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனை சாலை, செந்தில் நகர், சின்னப்போரூர், சென்னை – 600116.


 

முந்தைய செய்திசமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? – சீமான் கண்டனம்