சூழலியல் அறிஞர் கே.கே.ஆர். லெனின் அவர்கள் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்

132

பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வேளாண் பெருங்குடியோன்,பெருந்தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சீடர், சூழலியல் அறிஞர் கே கே ஆர் லெனின் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன்.

மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் களங்களில் முன்னணி களப்போராளியாக திகழ்ந்த அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு. 2011 காலகட்டங்களில்
தஞ்சை மண்ணில் நாம் தமிழர் கட்சியின் மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் களங்களில் ஐயா நம்மாழ்வார் அவர்களோடு இணைந்து கலந்து கொண்டு தாய் மண் காப்பு போராட்டங்களில், நம்மோடு நின்றவர் ஐயா கே கே ஆர் லெனின் அவர்கள். குறிப்பாக குடவாசலில் ஐயா நம்மாழ்வார் தலைமையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உண்ணா நிலை ஆர்ப்பாட்டத்தில் நாள் முழுக்க நம்மோடு இருந்து நாம் தமிழரின் போராட்டக் களங்களை வலிமைப்படுத்திய பெருந்தமிழர் கே கே ஆர் லெனின் அவர்கள்.

நம் மண்ணைக் காக்க தன் வாழ்வின் இறுதி நொடி வரை களத்தில் நின்ற ஐயா கே கே ஆர் லெனின் அவர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கேற்கிறேன். எந்த புனித இலட்சியத்திற்காக ஐயா பெருந்தமிழர் லெனின் அவர்கள் , இறுதிவரை களத்தில் நின்றாரோ , அந்த இலட்சியத்தை நிறைவேற்ற அவர் வழி நிற்பவர்களான நாம் சமரசம் இன்றி இறுதிவரை உறுதியாக போராடுவோம் என என இந்த நேரத்தில் உறுதி ஏற்கிறேன்.

தாய் மண்ணைக் காப்போம் என்ற முழக்கத்தோடு நம்மோடு உறுதியாக களத்தில் நின்ற பெருமகன் ஐயா கே கே ஆர் லெனின் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி