ஆண்டாள் கோவிலிலேயே அவளுடைய பாசுரங்கள் பாடப்படுவதில்லை! – “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு” திருப்போரூர் முருகன் கோவிலில் தொடங்கி வைத்த சீமான்

173

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு!” என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கவிருக்கிறது.

அதனை முன்னிட்டு, 1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான இன்று (செப்டம்பர் 3) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு நேரில் சென்று தமிழர் மூதாதை, தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் முப்பாட்டன் முருகனின் பெரும்புகழைப் போற்றி தமிழில் வழிபாடு மேற்கொண்டு “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு!” நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கோவில் அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வில் சீமான் அவர்கள் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியிருப்பதாவது,

“போற்றுதற்கும் வணக்கத்கிற்குமுரிய பெருந்தகை, பேராசிரியர், தமிழ் மொழி ஆய்வு அறிஞர், தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், எங்கு சென்றாலும் தமிழ் காப்பு கழகத்தை தொடங்கி தாய் மொழியைக் காக்கும் போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர், இந்தி திணிப்பின்போது, தமிழ் மொழி காப்பிற்காக களத்தில் நின்று போராடிய மாபெரும் வீரர், எங்களுடைய ஐயா சி. இலக்குவனார் அவர்களின் நினைவு நாள் இன்று. அவருடைய நினைவைப் போற்றுகிற இவ்வேளையில், எங்கள் கோவில்களில், எங்கள் இறையின் முன்பு எங்கள் தாய் மொழியில் வழிபாடு இருக்க வேண்டும் என்பது தமிழ்ப் பேரினத்தின் பெருநாள் கனவு. திடீரென்று நாங்கள் இதைச் செய்யவில்லை. இது எங்கள் முன்னோர்களின் பெரும் விருப்பம். அதை அவர்கள் பிள்ளைகள் நாங்கள் நிறைவேற்றுகிறோம். தமிழ்த்தாயின் பிள்ளைகள் நாங்கள், எங்கள் இறையின் முன்பு, எங்கள் தாய் மொழியில் தான் வழிபாடு இருக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை அல்ல, எங்களின் உரிமை. நாடு எங்களுடையது, கோவில் எங்களுடையது, தெய்வம் எங்களுடையது, எங்கள் மொழி தமிழ். அதனால், எங்கள் மொழியில் தான் வழிபாடு இருந்திருக்க வேண்டும், எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு சட்டம், தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று தான் இருக்கிறதே தவிர தமிழில் தான் வழிபாடு செய்யப்படும் என்று இல்லை. அப்படி மாற வேண்டும். இல்லையென்றால், நாங்கள் மாற்றுவோம். அந்த மாற்றம் தான் எங்கள் போராட்டத்தின் தொடக்கம்.

இங்கே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இருக்கிறது, அதை முழுமையாக நிறைவேற்றி செயல்படுத்த முடியவில்லை என்பது தான் எதார்த்த உண்மை. ஆனால், எந்த மொழியில் அர்ச்சனை செய்வார்கள்? என்பது தான் எங்களுடைய கேள்வி. ஆகம விதியின் படி தான் கோவில்களில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த ‘ஆகம விதி’ என்பதே ஆரிய சதி தான். ‘ஆகமம்’ என்பது தூய தமிழில் ‘இறை பனுவல்’. எங்களுக்கு இல்லாத மந்திரம், இறை வழிபாட்டு நெறிகள், வேறு எந்த மொழியில் இருக்கிறது? இங்கே, எல்லா மொழி பேசும் மக்களும் அவரவர் குடி அடையாளங்களோடு வாழுகிறார்கள். ‘கோனார்’ என்கிற தமிழ் குடி ‘யாதவர்’ என்று தான் குறிக்கப்படுகிறது. ‘ஆயர்’ என்றோ, ‘கோன்’ என்றோ குறிப்பிடப்படுவதில்லை. அப்படியெனில், தமிழ் நாட்டில் வாழுகிற பிகாரிலிருந்து வந்த யாதவரும், உத்தர பிரதேசத்திலிருந்து வந்த யாதவரும், தமிழ் யாதவரும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சகரானால், என் இறையின் முன்பு எந்த மொழியில் வழிபாடு செய்வார்கள்? என்பது தான் நாம் எழுப்பும் கேள்வி.

அறநிலையத்துறையின் அமைச்சராக ஐயா சேகர் பாபு அவர்கள் இருக்கின்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தின்படி ஐயா சேகர் பாபுவும் அர்ச்சகர் ஆனால், அவர் எந்த மொழியில் அரச்சனை செய்வார்? என்பது தான் இங்கு கேள்வியாக உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம். அதில் எந்த குறையும் இல்லை. ஆனால், எங்கள் இறையின் முன்பு, எங்கள் தாய்மொழி தமிழில் தான் வழிபாடு நடக்க வேண்டும். காரணம், அது எங்கள் உரிமை. எங்கள் வழிபாட்டில் எங்கள் மொழியை காக்க வேண்டும் என்பது தான் எங்களின் கோட்பாடு. ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்று தொல்காப்பியம் பாடுகிறது. இங்கே நாங்கள் பாடிய மந்திரங்கள் இது தான். எங்கள் மொழியில் உள்ள மந்திரங்களைத் தாண்டியது வேறு எங்கும் இல்லை. அமித் ஷா அவர்கள், “தாய்மொழியை கைவிட்டுவிடாதீர்கள்” என்று கூறுகிறார். அவர் தாய்மொழிக்கு அவர் சொல்வதைப் போல, எங்கள் தாய் மொழியைக் கைவிட்டுவிடக்கூடாது என்று தான் நாங்கள் போராடுகிறோம்.

நாட்டின் முதன்மை அமைச்சர் ஐயா மோடி அவர்கள் கூட, “உலக மொழிகளில் தொன்மையான மொழி தமிழ், அது இந்தியாவில் இருப்பது எங்களுக்கு பெருமை” என்கிறார். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம் என்கிற அளவிற்கு தொன்மையான மொழிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் முன்னுரிமை என்ன? எங்களுடைய 63 நாயன்மார்களும் தமிழ் அல்லாது வேறு எந்த இனத்தை சார்ந்தவர்கள்? 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் தமிழைத்தவிர வேறு எந்த மொழியில் இருக்கிறது? ஆண்டாள் பாசுரங்கள் தமிழை விடுத்து வேறு எந்த மொழியில் உள்ளது? ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலிலேயே அவளுடைய பாசுரங்கள் பாடப்படுவதில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை, துரோகம் என்பதை அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள் சிந்திக்க வேண்டும். இங்கு சைவ குறவர்கள் இருக்கின்றார்களே தவிர ஹிந்து குறவர்கள் என்று யாரும் இல்லை. எங்கள் மடம், சைவ மடம். சைவத்தையும் தமிழையும் பிரிக்க இயலாது. எங்கள் முன்னோர்கள் அருண்மொழிச் சொழனும், அரசேந்திர சோழனும் சைவ மத பற்றாளர்கள், சிவநெறியாளர்கள். எங்கள் இறை, தமிழ்க்கடவுள் முருகனுக்கு முன்பு திருமுருகாற்றுப்படை பாடப்படவில்லை என்று இப்போது நாங்கள் கிளர்ந்தெழுவது போல கிளர்ந்து எழுந்தவர் தான், அருணகிரிநாதர் அவர்கள். அவர் இன்று எங்கள் முருகனின் முன்பு திருப்புகழைப் பாடுகிறார். அதை எல்லா முருகன் கோவிலிலும் பாடுவதில் என்ன பிரச்சனை? என்ற கேள்வியைத்தான் முன்வைக்கின்றோம்.

இன்று எங்கள் சைவ நெறியாளர்கள் எல்லோரும் வந்து திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாடும்போது இங்கே இருக்கும் குருமார்கள் எல்லாம் தூய தமிழில் அர்ச்சனை செய்தார்கள். ‘கந்தா போற்றி!  கடம்பா போற்றி! வள்ளியின் நாயகனே போற்றி! என்று நாங்கள் முழங்கினோம். தமிழில் வழிபாடு செய்ய முடியும் என்றபோதும் கூட அதை செய்யாமல் இருப்பது தான் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. சமஸ்கிருதம் தான் தேவ பாஷை என்றெல்லாம் இனி பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. கன்னடர், தெலுங்கர், மலையாளி, பீகாரி, குஜராத்தி என்று எல்லோருக்கு அவரவர் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் எங்களுக்கு தமிழ்நாடு என்று ஓர் மாநிலம் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு எங்கு மாநிலம் இருக்கிறது? மாவட்டமாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் யாரும் வழிபடலாம். ஆனால், எங்கள் தமிழ் மொழியில் தான் இனி வழிபாடு இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் இந்த செயல்பாட்டின் நோக்கம். தமிழ் எந்த மொழியின் துணையும் இல்லாது தனித்து இயங்கும் தனித்தன்மை உடையது. உலகில் எல்லோரும் அவரவர் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம். அந்த தனித்தமிழ் மொழியில் தான் எங்கள் இறையின் முன்பு வழிபாடு செய்யவேண்டும் என்பது எங்கள் உரிமை.

எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது, தமிழ் மட்டும் தான் இறைவனால் பேசப்பட்ட மொழி. “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ” என்ற செய்யுளை எழுதி இறையனார் என்ற கையொப்பம் உள்ளதைப் படியுங்கள். தமிழே எங்களுக்கு இறையாக உள்ளது. இறையனாரும், எம்பெருமான் முருகவேலும், அகத்தியரும் கட்டிக்காத்த தமிழ் சங்கம் உள்ளது. தமிழ்ச் சங்கத்தின் தலை மக்களாக இருந்த எங்களின் இறையின் முன்பு என் தாய் மொழியில் வழிபாடு செய்ய முடியாது என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய கொடுமை, துரோகம். அதை மாற்றி அமைக்க போராடுவோம், இல்லை அதிகாரத்தை கைப்பற்றி மாற்றுவோம். அதை என் இறை முருகப்பெருமானின் மீது ஆணையிட்டு இந்நாளில் நான் உறுதி ஏற்கிறேன்” என்று தெரிவித்தார்.