எண்ணூர் சுற்றியுள்ள பத்தாயிரம் மக்களுக்காக மட்டும் நாம் போராடவில்லை..! பேராபத்தை உணராமல் அறிவார்ந்தவர்கள் செய்கிற செயலா இது? – சீமான் சீற்றம்

247

31-07-2022 – எண்ணூர்  | சீமான் செய்தியாளர் சந்திப்பு

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்து கட்டிவரும் தொடரமைப்புக் கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 31-07-2022 அன்று எண்ணூரில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

“எண்ணூர் கொற்றலை ஆற்றில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம், உயர் மின்கோபுரம் அமைப்பதை நிறுத்தவேண்டும் அல்லது மாற்று பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துத்தான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்கிறோம். இதற்கு முன்பே கள ஆய்வு மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் இதற்கான போராட்டத்தையும் முன்னறிவிப்பு செய்திருந்தோம். நாங்கள் ஏதோ தேவையற்று, எங்களுடைய அரசியல் தேவைக்காக, எங்களுடைய சுய தேவைக்காக போராடுவது போல எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காகத்தான் நாங்கள் இதை செய்கிறோம். இதில் தெலுங்கர், மலையாளி, கன்னடர், கிறித்தவர், இசுலாமியர், இந்து என்ற வேறுபாடுகள் எங்களுக்கு இல்லை. இந்த கொற்றலை ஆற்றின் முகத்துவாரத்தின் வழியே தான், நகரத்தில் பொழிகின்ற மழைநீர் வடிந்தோடி கடலில் கலக்கின்றது. இத்தகைய வாய்ப்பிருக்கும்போதே மழைக்காலங்களில் சென்னை மாநகரம் எவ்வாறு தத்தளித்து வெள்ளத்தில் மிதந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு கொற்றலை ஆற்றையே மறித்து தொடரமைப்புக் கோபுரங்கள் கட்டப்படவுள்ளது. இதற்கு முன்பே அதானி காட்டுப்பள்ளியில் துறைமுகம் கட்ட, ஆறு கடலில் சேரும் இடத்தில் மதில்சுவர்கட்டி எழுப்பிவிட்டார். அதை எதிர்த்தும் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இங்கே எண்ணூரில், கொற்றலை ஆற்றின் நடுவே மின்கோபுரம் அமைக்கும்போது, இதற்கு முன்பு வெறும் கோபுரம் மட்டும் இருக்கும், ஆனால் தற்போது கான்கிரீட் தளம் அமைத்து ஆறு பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது. பாதி பகுதிக்குமேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் ஒரு கோபுரம் அமைக்கும் அளவிற்கு தான் இடம் உள்ளது. பிறகு ஆறு முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும். பிறகு எப்படி ஆற்றுநீர் கடலில் சென்று சேரும்? இது எவ்வளவு பேராபத்து என்று சிந்தித்துப் பாருங்கள். கடலோரப் பகுதி ஒழுங்கு மண்டலம், பசுமை தீர்ப்பாயம் என பலரும் கொடுத்த தீர்ப்பிற்கு மீறி இவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். இதற்கு எப்படி அதிகாரம் துணை செல்கிறது என்று புரியவில்லை. இங்கு இருக்கிற அனைத்து ஆலைகளும் காற்றை, நிலத்தை, நீரை நாசம் செய்கிற, நஞ்சாக்குகிற, மாசுபடுத்துகிற ஆலைகளாக உள்ளது. வெந்நீர் ஆற்றில் கலக்கப்படுகிறது. கேள்வி எழுப்பினால், அது பதப்படுத்தி குளிரூட்டிய பின்பு தான் கலக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் சொல்வது ஒன்று, செய்வது வேறாக இருக்கிறது. அனல்மின் நிலையத்திலிருந்து வெளிவருகிற உலர் சாம்பல் அங்குள்ள மீன்களை கொன்றழிக்கிறது. மானுட உணவு தேவைகளில் 30 விழுக்காடு தேவையை மீன்கள் நிறைவு செய்கிறது. மீன்களெல்லாம் இப்படி நஞ்சாகி செத்து விழுகிறது என்றால் அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கு எவ்வளவு பெரிய பேராபத்து என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படுகிற இந்த அலையாத்திக் காடுகள், சதுப்பு நிலங்களில் தான் நண்டு, இறால் போன்ற மீன் வகைகள் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து பிறகு மீண்டும் கடலுக்குள் செல்கிறது. அங்கு தான் இவைகளின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அதற்கு சற்றும் வாய்ப்பில்லாதவாறு வெந்நீர் கலக்கப்பட்டால், மீன்கள் எப்படி உள்ளே நீந்தி வரும்? வெந்நீர் மற்றும் எண்ணெய் கழிவுகளால் அந்த மீன்கள் மலட்டுத்தன்மை அடைந்து, முட்டையிடுகிற திறனை இழக்கிறது. இனி அவைகளை நாம் மறந்துவிட வேண்டியது தான். அங்கு சுற்றியுள்ள பத்தாயிரம் மக்களுக்கு மட்டும் நாம் போராடவில்லை. மழை வந்தால் எவ்வளவு பெரிய பேராபத்து வரும் என்று சிந்தித்துப் பாருங்கள். அறிவார்ந்தவர்கள் செய்கிற செயலா இது? இது எங்கள் நிலம், எங்கள் வளம், இதை காப்பதற்கு நாங்கள் மக்களோடு நின்று போராடுவோம். இந்த மண்ணையும், மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கின்ற எங்களைப்போன்ற எளிய பிள்ளைகளிடம் ஒரு நாள் அதிகாரம் வரும்போது, எத்தனை கோடி முதலீடு செய்திருந்தாலும் மக்கள நலனைக் கருத்திற்கொண்டு ஒரே நாளில் இதையெல்லாம் தகர்த்தெறிந்து விடுவோம். நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களுக்கும், பெரும் ஆலை முதலாளிகளுக்கும் நீரின் தேவை என்னவென்று தெரியாதா? கொற்றலை ஆற்றின் தேவை என்னவென்று தெரியாதா? பழவேற்காடு ஏரியின் முக்கியத்துவம் என்ன என்று தெரியாதா? அதையெல்லாம் அழித்துவிட்டு என்ன செய்ய போகிறார்கள்? இதையெல்லாம் எப்படி வளர்ச்சி என்று காட்டுகிறார்கள்? நாங்கள் பட்டினியாக நின்று கையேந்தும்போது, விண்னூர்தியில் பறந்து வந்து உணவு பொட்டலங்களை போடுவது தான் இவர்கள் காட்டும் வளர்ச்சி. இந்தியா 110 கோடி மக்கள் மீதும், தமிழ்நாடு 7 கோடி மக்கள் மீதும் கடன் வைத்துள்ளது. இந்த கடன் விழுக்காடு உயர்வது தான் இவர்கள் காட்டும் வளர்ச்சி. பத்தாயிரம் அரசு பள்ளிக்கூடம் இடிகின்ற நிலையில், சீரமைப்பு செய்ய வழியில்லாத நிலையில் உள்ளது. ஆனால் கடலுக்குள் 80 கோடிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்போம் என்பதெல்லாம் எப்படிப்பட்ட போக்கு. நாங்கள் போராடுவது இதையெல்லாம் நிறுத்திவிடுவார்கள் என்று நினைத்து அல்ல. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் எவ்வளவு பேராபத்தை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எம் மக்களுக்கு சொல்ல வேண்டியது எங்கள் கடமை, அதை நாங்கள் செய்கிறோம். இதை நெடுங்காலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்பதை உணர்த்துவதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம். எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மதிப்பிற்குரிய நீர்வளத்துறை அமைச்சர் ஐயா துரைமுருகன் அவர்கள் இதைப் பார்வையிட்டு, இந்த துயரத்திலிருந்து எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த தொடரமைப்புக் கோபுரங்களின் கட்டுமானத்தை நீங்கள் நிறுத்தப்போவதில்லை என்று எங்களுக்கு தெரியும், ஆனால் அதை ஆற்றின் குறுக்கே கொண்டு செல்லாமல் மாற்றுப்பாதையிலாவது கொண்டு செல்லுங்கள். அறத்தின் வழிநின்று ஆட்சி செய்வதற்கு கொஞ்சம் முயற்சியாவது செய்யுங்கள். அதுவே எங்களது கோரிக்கை.” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வாழ்வுரிமை மாநாடு (பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கம்) – சீமான் சிறப்புரை
அடுத்த செய்திதமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்