வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 217ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – கிண்டி | சீமான் செய்தியாளர் சந்திப்பு

165

03-08-2022 | தீரன் சின்னமலை மலர் வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு கிண்டி

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2022 அன்று சென்னை-கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது, “தன் அன்னை நிலம் அடிமைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து, வீரப்போர்புரிந்த மறவர் எங்களுடைய பாட்டன் தீரன் சின்னமலை அவர்கள். அடிமை வாழ்வினும் உரிமைச்சாவு மேலானது என்று, அதற்கேற்ப வாழ்ந்து காட்டி வருங்கால தலைமுறைக்கு வரலாற்றுச் சுவடாகவும், வழித்தடமாகவும், இன்னும் எம் மக்களின் இதயத்தில் நிறைந்து வாழக்கூடிய பெருமகன் எங்களுடைய பாட்டன் தீரன் சின்னமலை அவர்கள். ஓடாநிலையை, தலைமை இடமாகக்கொண்டு ஆண்டுகொண்டிருந்த எமது பாட்டனாரை, வெள்ளைக்காரர்கள், “தீரா, உன்னோடு நாங்கள் சண்டை செய்ய விரும்பவில்லை, நீ 50 விழுக்காடு வரியை வசூலித்து நாட்டு நிர்வாகத்திற்கு வைத்துக்கொள், மீதி 50 விழுக்காடு வரியை எங்களுக்கு கப்பமாகக் கட்டு” என்று கூறிய அடுத்த நொடியில் “யார் நிலத்தை யார் ஆள அனுமதி கொடுப்பது? யார் நிலத்தில் யார் வரி வசூலிக்க உரிமை கொடுப்பது?” என்று வீரமுழக்கமிட்ட பெருமகனார் தான் எங்களுடைய பாட்டன் தீரன் சின்னமலை அவர்கள். மன்னர் ஆட்சிக் காலத்தில், நமது மன்னர்கள் அந்நிய ஏகாதிபத்தியத்தை தன் படைகளைக்கொண்டு எதிர்த்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ஆனால், தமிழரின வரலாற்றில் மக்களையே படையாக திரட்டி வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த புரட்சியாளர் ஒருவர் உண்டென்றால், அது எங்களுடைய பாட்டன் தீரன் சின்னமலை அவர்கள் தான். அப்படிபட்ட வீரமும், தீரமுமிக்க எங்களுடைய பாட்டனாரை நினைவுகூரும் நேரத்தில் உள்ளம் உவகையும், ஒரு மெய்சிலிர்ப்பும் எங்களுக்குள் ஏற்படுகிறது. ஒரு பேரெழுச்சியான உற்சாகம் தமிழ் இளம் தலைமுறையினரிடத்திலே எழும்புகிறது. அவரைப்போல, சாதி-மத உணர்ச்சிகளைத்தாண்டி, தமிழின ஒர்மைக்கு நின்ற ஒரு புரட்சியாளர் இல்லை எல்லா சமூகத்தையும் தன் படையில் இணைத்துக்கொண்டு, பெரிய மக்கள் படையைக்கட்டி, வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்த வீரர் நம்முடையப் பாட்டன் என்பதில் ஒவ்வொரு தமிழ் மகனும் பெருமையும், திமிரும் கொள்ள வேண்டும். வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகள் நம்முடைய பாட்டனாரின் வரலாற்றைப் படித்து, அதன் வழியில் நடந்து அடிமைத்தமிழ் சமூகத்தினுடைய விடுதலையைப் பெறுவதற்கு அரும்பாடாற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நாளில் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய கோட்பாடு, நிலைப்பாடு, உறுதிமொழி. இதை ஏற்று அதன்படி நடப்பதுதான் உண்மையிலேயே நம் பாட்டனாருக்கு நாம் செலுத்துகின்ற வீரவணக்கமாக இருக்க முடியுமே தவிர, வேறொன்றும் இல்லை. வாக்கிற்காக நிற்பது அல்ல நாம் அவருக்கு செலுத்துகிற மரியாதை, தமிழின மக்களின் பெருவாழ்க்கைக்காக நிற்பது தான் நாம் அவருக்கு செலுத்துகிற உண்மையான வீரவணக்கம். நம் பாட்டனார் தீரன், அந்நியனுக்கு ஒருபிடி மண் தன் தாய் நிலத்திலிருந்து போகக்கூடாது என்று நினைத்தார். ஆனால், இன்று பெரியார் மண், அண்ணா மண் என்று சொல்லிக்கொண்டு, எந்த மண்ணுமில்லாது விற்றுக்கொண்டு இருக்கிற பெருந்தகைகளிடம் சிக்கிக்கொண்டோம். பெரியார் மண் எங்கிருக்கிறது? 32 ஆற்று மணலையும் விற்று முடித்துவிட்டார்கள். இப்போது மலை, அதுவும் நொறுக்கி மணலாக விற்கப்படுகிறது. இனி பெரியார் இருப்பார், மண் இருக்காது என்கிற நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. அதனால், தீரனின் பேரன்களும், பேத்திகளும் நாங்கள் எங்கள் தாய் நிலத்தினுடைய வளத்தை, நிலத்தை, நீரை, காற்றை நஞ்சாக்கவிடாமல் பாதுகாத்து, இன்னொரு தலைமுறைக்கு கையளிப்போம் என்கிற உறுதியை எங்கள் பாட்டன் மீது ஆணையிட்டு உறுதியேற்றுக்கொள்கிறோம். இதுதான் நாங்கள் அவருக்கு செலுத்துகிற உண்மையான வீரவணக்கம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் “ஆட்சியமைக்க நினைக்கும் யாரும் தனித்து நிற்கமாட்டார்கள் என்பது கள எதார்த்தமாக இருக்கிறது” என்று நாம் தமிழரின் கூட்டணி நிலைப்பாடு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், “தனித்து நின்று அம்மையார் ஜெயலலிதா ஆட்சி அமைக்கவில்லையா? 37 பாராளுமன்ற இடங்களை தனித்து நின்று வெல்லவில்லையா? நல்லாட்சி கொடுக்க நினைக்கும் கட்சி, மக்களை நம்பாமல் ஏன் இத்தனை கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது? நான் மக்களை நம்புகிறேன், மக்களுக்கு உண்மையும் நேர்மையுமாக இருக்க நினைக்கிறேன். என்றுக்கு மக்கள் எங்களை நம்புகிறார்களோ, அன்று வெற்றியைத்தரட்டும், அதுவரை போராடுவேன். மக்களை நம்பாமல், அரை விழுக்காடு, கால் விழுக்காடு, ஒரு விழுக்காடு வாக்கு வைத்திருப்பவர்களை எல்லாம் கூட்டணிக்கு அழைக்கிறீர்கள். உங்களுக்கு கோட்பாடும், உறுதியான கொள்கையும் இருக்கிறது என்றால், அதை மக்களிடத்தில் எடுத்துரைத்து வாக்கைக் கேளுங்கள். உங்களிடத்தில் கோடிகள் இருக்கிறது, அதனால் நீங்கள் பணத்தை முன்னிறுத்துகிறீர்கள், நாங்கள் மானமிக்க இனத்தை முன்னிறுத்துகிறோம். நீங்கள் கோடிகளை தூக்கிக்கொண்டு வருகிறீர்கள், நாங்கள் உயர்ந்த கொள்கைகளை சுமந்து கொண்டு வருகிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு நீங்களே ஆளுவீர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? வெள்ளைய ஏகாதிபத்தியம், முகலாய சாம்ராஜியம், விஜயநகரப் பேரரசு, எங்கள் மூதாதைகளின் சேர, சோழ, பாண்டிய பேரரசு என்று எல்லாம் வீழ்ந்திருக்கிறது. திராவிடம் என்றால் என்ன என்று விளக்கம் சொல்லத்தெரியாத ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு காலத்திற்கு ஆண்டுவிடுவீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார் .