நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், மூத்தவர், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு, 14-8-2024 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் நெல்முடிக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூத்தவரின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!
கூர்ந்த சொற்கள், சட்டப் புலமையில் கொண்டிருந்த மேதமை, எதிர் வருபவற்றை முன்கூட்டியே கணிக்கின்ற ஆளுமை, இன நலனின் மீது செலுத்திய மாசற்ற பேரன்பு என பன்முகத்திறன் படைத்த மாமனிதர்..!
எப்போதெல்லாம் தமிழர்கள் இன்னலுக்கு உள்ளாகின்றார்களோ அப்போதெல்லாம் வழிகாட்டவும் வழக்காடவும், வழக்குமன்றத்தில் முன்நின்ற எங்களின் நம்பிக்கை..!
நாம் தமிழர் என்கின்ற இனமான படையில் தன்னை முதன்மைத் தளபதியாக இணைத்துக் கொண்டு நாடெங்கிலும் இருக்கின்ற லட்சக்கணக்கான தம்பி தங்கைகளுக்கு மூத்தவராக மாறிப்போன பேரன்புக்காரர்..!
நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர்!
எனக்கு அண்ணனாக தந்தையாக தளபதியாக எல்லாமுமாக இருந்த என் பேரன்பிற்கினிய மூத்தவர் நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில், அவர் தனது வாழ்நாளின் இறுதிமூச்சுவரை உயிரென சுமந்த இன விடுதலை எனும் புனிதக்கனவை நிறைவேற்ற அவர் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்!
https://x.com/Seeman4TN/status/1823587285318689060?t=p24IbobzHa99UbN04UpKtA&s=19
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி