இதை விட பல மடங்கு காவல்துறையினரைக் குவித்தாலும் உங்கள் கூடவே நின்று போராடுவேன். தைரியமாக இருங்கள்! – நடகோட்டை கிராம மக்களுக்கு சீமான் நம்பிக்கை

239

 

தனியார் நிறுவன ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நடகோட்டை கிராம மக்களுடன் சீமான் சந்திப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நடகோட்டை கிராமத்தில் கிராம தான, பூமிதான, பஞ்சமி மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க பணிகளை தொடங்கி உள்ளனர். இதை கண்டித்து பாதிக்கப்பட்ட கிராம மக்களோடு இணைந்து நாம் தமிழர் கட்சி பலகட்ட போராட்டங்களையும், சட்டப்போராட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,  26-06-2022 அன்று நடகோட்டை கிராமத்திற்கு நேரில் சென்று, அங்கு தனியார் நிறுவனம் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதியளித்து ஆறுதல் கூறினார்.

மக்கள் பிரச்சினையைக் கேட்டெறிந்த பின்னர் அவர்களிடம் சீமான் கூறியதாவது, “தற்போது நடகோட்டை கிராமத்தில் நிகழும் பிரச்சனை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நாம் தமிழர் கட்சி உறவுகள் தொடக்கத்திலிருந்து, உங்களோடு நின்று போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். நம்முடைய நிலத்தை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்துக்கொண்டு, அதற்கு உரிய இழப்பீடும் கொடுக்காமல், நம்மை முற்றிலுமாக ஏமாற்றியுள்ளனர் என்று பெரியோர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களுக்கு யாரும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்கு உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் உங்களோடு நின்று போராடுவோம். அதனால், நம்பிக்கையோடு இருங்கள். இப்பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். பஞ்சமி நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் அவர்களே சொல்கிறார். ஆனால், முதல்வர் சொல்லியும் நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றால், பிறகு போராடித்தான் பெறவேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவ்ரகள், “இழந்துவிட்ட உரிமைகளை பிச்சைக் கேட்டுப் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும்” என்கிறார். இம்முறை உங்கள் பிள்ளை நானும் உங்களுடன் நின்று போராடுகிறேன். உங்கள் பிள்ளைகள் நாங்கள் உங்கள் கூடவே இருப்போம். எதற்கும் அச்சப்படவேண்டாம். நீங்கள் தொடுத்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை திருப்பி மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடுத்துள்ளோம். அதற்கு நீதி கிடைக்கிறதா என்று பார்ப்போம். இல்லையெனில், நாம் தொடர்ந்து போராடுவோம். நான் என்றும் உங்களோடு இருப்பேன். இதை விட பல மடங்கு காவல்துறையினரைக் குவித்தாலும் உங்கள் கூடவே நின்று போராடுவேன். அதனால், யாரும் பயப்படவேண்டாம். தைரியமாக இருங்கள்.” என்று கூறினார்.

அதனையடுத்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் அவர்கள், “இது நீண்ட காலமாக நடந்து வருகிற பிரச்சனை. நாங்கள், எங்கள் மக்களோடு மக்களாக நின்று, போராடிக்கொண்டு இருக்கின்றோம். இது பஞ்சமி நிலம், ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிகளுக்காகக் கொடுக்கப்பட்ட நிலம். அதை முறைகேடாக ஆக்கிரமித்து, சூரிய ஒளியில் மின்பூங்கா அமைப்பதற்கு, தனியார் நிறுவனம் இந்த நிலத்தை எடுத்துக்கொண்டது. அதற்கு உரிய இடமும் வழங்கப்படவில்லை, உரிய இழப்பீடும் கொடுக்கப்படவில்லை. இங்கே நிலத்தை இழந்துவிட்டு, ஆடு-மாடு வளர்க்கும் மேய்ச்சல் தொழில் செய்யும் மக்கள், அந்த வேலையையும் செய்ய முடியாமலும், பெண் பிள்ளைகள் வெளியில் ஒதுங்க முடியாமலும் பாதிக்கப்பட்டுளார்கள். இங்கு இருக்கும் கிணறுகள், குளங்கள், நீரோடைகள் எல்லாமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஊர் மக்கள் நீதிமன்றத்தில் தொடுத்த ஐந்தாறு வழக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு வழக்கு தொடுத்துள்ளோம். அதன் முடிவு என்ன என்பதைப் பார்த்துவிட்டு, மக்களோடு மக்களாக நின்று தொடர்ச்சியாக போராடுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். ஏனென்றால், உரிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் எங்களுடையக் கோரிக்கை” என்று கூறினார்.

பின்பு செய்தியாளர் ஒருவர், தமிழக முதல்வர் அவர்களுடைய மருமகன் சபரீசன் இதில் தலையிட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு கூறப்படுவதைப் பற்றி கேட்டதற்கு, சீமான் அவர்கள் பதிலளிக்கையில், “அது இருக்கலாம். முதல்வர் அவர்களே, பஞ்சமி நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது இருக்கிறது. அப்படியிருந்தும் ஏன் அதை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “இங்கு ஏராளமானக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு காவல் துறையினர் தேவையா? இலங்கையில், ஒவ்வொரு தமிழர் வீட்டுக்கும் எதிரில் ஒரு சிங்கள இராணுவ வீரர் நின்றதுபோல், இங்கு நம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு காவலரை நிறுத்தி வைத்தால் எப்படி பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வாழ்வது. இது விடுதலைப் பெற்ற சனநாயக நாடு தானா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். நம் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வைப்பதை எப்படி ஏற்பது? அதிகாரம் எப்பொழுதும் முதலாளிகள் பக்கமே இருப்பதனால், அடிதட்டு உழைக்கும் மக்களுடையக் குரல் எடுபடுவதில்லை. நாங்கள் இந்த நிலத்தை மீட்கும் வரை போராடுவோம். சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடைபெறுகிறது, மக்களைத் திரட்டி மக்கள் போராட்டத்தையும் மறு பக்கம் செய்வோம்” என்று கூறினார்.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஅரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வாழ்ந்து வரும் சென்னை, இராமாபுரம், திருமலை நகர் மக்களை, ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, விரட்டத் துடிப்பதா? – சீமான் கண்டனம்