சூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் திராவிட ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை! – சீமான் சாடல்

79

2018 ஆம் ஆண்டு மே 18 எங்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளினை முன்னிட்டுப் பெருங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகப் புரட்சியாளர்களை எடுத்துப்பேசி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசினேன் என்று தமிழ்நாடு அரசால் தொடரப்பட்ட வழக்கிற்காக இன்று நேரில் முன்நின்றேன். எதற்கு வழக்குத் தொடுக்கிறோம் என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடுத்து வைத்தார். தற்போது திமுக அரசு வந்த பிறகு அழைப்பாணை அனுப்பி அனுப்பி மாதம் இரண்டு மூன்று நீதிமன்றங்களுக்கு அலையச் செய்வதன் மூலம் என்னைச் சோர்வடையச் செய்திடலாம் என்று நினைக்கிறது. மாறாக நான் முன்னைவிட மேலும் வேகமாகச் செயல்படுவேன் என்பதை திமுக அரசு அறியவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அண்ணன் தம்பிக்குரிய பாசம் என்றும் உள்ளது. திமுக நிறைய வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 10 மணிநேர மின் தடை நிலவுகிறது. அதனைச் சரி செய்வதற்கு ஏதாவது நடவடிக்கையைத் திமுக அரசு எடுத்துள்ளதா?

மாறி மாறி இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டை ஆண்டதில் மின் உற்பத்தியில் பெரிய அளவில் முதலீடும் செய்யப்படவில்லை. மாறாக மின்சாரத்தைத் தனியார் பெருமுதலாளிகளிட மிருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. சூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும்இவர்கள் செயல்படுத்தவில்லை.

அலுவலகம், வீடு என்று மாறி மாறி ஏற்படும் பல மணிநேர மின் தடையால் ஒரு நாள் முழுக்கவே மின்சாரம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒரு லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் தரப்போவதாக அரசு அறிவிக்கிறது. முதலில் தடையின்றி மின்சாரம் தரட்டும். பிறகு அதனை இலவசமாக தரலாம்.

வெற்று விளம்பரம் செய்வதில்என்ன பயன் உள்ளது ? வெறும் விளம்பரம் செய்வதால்தான் இதனை சேவை அரசியல் இல்லை வெறும் செய்தி அரசியல்தான் உள்ளது என்கிறோம்.

பட்டிண பிரவேசம் நிகழ்வில் ஆதீனங்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பே திமுக அரசு அனுமதி வழங்கிவிட்டது. அதைப்போலவே மதுரையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்பதற்காக மருத்துவக் கல்லூரி துணைவேந்தரை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் சேர்த்தார்கள். இவையெல்லாம் டெல்லி மேலிட உத்தரவுக்கு ஏற்ப திமுக அரசு நடத்தும் நாடகங்கள்தான். முதல்நாள் ஒன்று அறிவித்துவிட்டு மறுநாள் அதை மாற்றி அறிவிப்பது தான் திராவிட மாடல்.

எங்களுடைய கோட்பாடு ஒன்றுதான். பல்லக்கில் பயணிப்பவன் ஆதிக்கவாதி. அவனைத் தூக்கிச் சுமப்பவன் ஏமாளி. மனிதனை மனிதனே தூக்கிச் சுமப்பது, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது என்பதனை நாங்கள் அருவருக்கிறோம். வெறுக்கிறோம். பல்லக்கு தூக்கும் முறையை ஒழிக்க எங்களது மூதாதையர்கள் பல காலமாக போராடினார்கள். நவீன அறிவியல் மகிழுந்தை கண்டறிந்த பிறகு அந்த முறை ஒழிந்தது. எனவே பல்லக்கு தூக்குவதை மரபு, காலங்காலமாக நடைபெறுகிறது என்பதை எப்படி ஏற்க முடியும் ? சாதிக்கொடுமைகள், மதக்கொடுமைகள், பாலியல் கொடுமைகள் கூடத்தான் காலங்காலமாக நடைபெறுகிறது. அதனை அனுமதிக்க முடியுமா ? தர்மபுர ஆதீனம் ஐயா அவர்கள் தானாக முன்வந்து பல்லக்கு வேண்டாம் என்று மறுத்திருக்க வேண்டும். திமுக அரசு அதற்கு முதலில் தடை விதித்தது. பிறகு பின் வாங்கியது. இதுபோன்று முதல் நாள் ஒன்று சொல்லி அடுத்த நாள் மாற்றுவதற்கு பெயர்தான் திராவிட மாடல். எனவே அரசே பல்லக்கு தூக்குவதை அனுமதித்தாலும் நாங்கள் அதனை ஏற்கவில்லை. எதிர்க்கிறோம்.

பெரியாரிய பாதையில் பயணித்தபோது கடவுள் மறுப்பை பரப்புரை செய்தேன். அதன்பின் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்று வரும்போது பண்பாட்டையும் சேர்த்து மீட்க வேண்டியுள்ளது. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிறார். எனவே தொன்மக்குடியான தமிழினத்திற்கென்று தனித்துவமிக்க மெய்யியல் கோட்பாடு உள்ளது. தமிழனின் மெய்யியல் என்பதே அறிவியல். சிவன், முருகனை இந்துக் கடவுள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை. பிரித்தானியரால் இந்துக்கள் ஆக்கப்பட்டோம். எனவே ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்று வரும்போது பண்பாட்டையும் சேர்த்து மீட்க வேண்டியுள்ளதால் அதனைச் செய்கிறோம்.

இந்து மதத்தில் சாதிகளே கிடையாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சாதியக் கட்டுமானம் அடர்த்தியாக உள்ளது இந்தியாவில்தான். அதிலும் சாதியும் மதமும் இரண்டு கண்களாக கொண்டிருப்பது இந்து மதம் தான்.

அவரவர், அவரவர் தாய்மொழிமேல் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தாய் மொழியில் உறுதியாக இருப்போம். உலகத்தின் தொன்மையான மொழி என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்மையார் சுகாசினி இந்தி மொழி பேசுகிறவர்கள் எல்லாம் நல்லவவர்கள் என்கிறார். அப்படியென்றால் இந்தி பேசாத மக்கள் எல்லாம் கெட்டவர்களா? அவரவர் தாய் மொழி அவரவர்களுக்கு. தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதுவே போதுமானது. இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பவர்கள்தான் இந்த நாட்டில் பிரிவினையை தூண்டுகின்றனர். பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். திராவிடத் தலைவர்கள் ஒரு பக்கம் இந்தி மொழியை தார்பூசி அழிக்கிறார்கள், மறுபுறம் தேர்தல் வந்தால் இந்தியில் சுவரொட்டி ஒட்டி வாக்கு கேட்கிறார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக உள்ளது. எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தேவைப்பட்டால் கற்கிறோம். ஆனால் ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதையே நாங்கள் எதிர்க்கிறோம். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில்தான் தமிழே கற்காமல் முதுகலை வரை பட்டம் பெறக்கூடிய கொடுமையை, வரலாற்றுத் துயரத்தை திராவிட ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இந்தியை திணித்தவர்களுடனேயே அரசியல் இலாபத்திற்காக கூட்டணி வைத்தார்கள். அவர்கள் எளிதாக இந்தியை திணிக்கிறார்கள்.

மாநிலத் தன்னுரிமையைக் கட்டிக்காப்பவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, மின்தடைக்கு நாங்கள் காரணம் அல்லர் என்பதை எப்படி ஏற்க முடியும். வெற்று ஏமாற்று வாரத்தைகளால் இனிப்பு அறிக்கைகளால் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. விளம்பரப்படுத்தி தான் அரசின் சாதனைகளை விளக்க வேண்டிய அவசியத்தில் இருப்பது தான் திமுக அரசின் ஓராண்டு சாதனை.

 

முந்தைய செய்திபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி