தமிழக மீனவர்களுக்கும், ஈழ மீனவர்களுக்குமிடையே பகைமையை உருவாக்கி, சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்தத் துடிக்கும் சிங்கள இனவாத அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

148

தமிழக மீனவர்களுக்கும், ஈழ மீனவர்களுக்குமிடையே பகைமையை உருவாக்கி, சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்தத் துடிக்கும் சிங்கள இனவாத அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளான தமிழ்த்தேசிய இன மக்களைத் தங்களுக்குள்ளேயே மோதிச்சண்டையிட வழிவகை செய்திடும் சிங்கள இனவாத அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. ஈழப்பெருநிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலிலே படுகொலை செய்தும் இன்னும் வன்மம் தீராது தமிழர்களுக்குள்ளேயே பகைமூட்டும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

யாழ்ப்பாணம் மாவட்டம், சுப்பர்மடம் கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவத்தம்பிகள் தணிகைமாறன், பிரேம்குமார் ஆகியோர் படகு கவிழ்ந்து உயிரிழந்த செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன். தம்பிகளை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பிகளின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்யவியலாதது. அம்மரணம் ஏற்படுத்தும் வலியென்பது சொற்களால் விவரிக்க முடியாதது. அதேசமயம், அது விபத்துதானே ஒழிய, திட்டமிடப்பட்டத் தாக்குதல் அல்ல; தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்துச்சொந்தங்களை ஒருநாளும் பகையாளியாகக் கருதவோ, தாக்குதல் தொடுத்திடவோ மாட்டார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன். அது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கோர விபத்து; ஏற்கவே முடியாத ஒரு துயரச்சம்பவம். அத்துயரை நானும் பகிர்ந்துகொள்கிறேன்; வலியை முழுமையாக உணர்ந்துகொள்கிறேன்.

அதேநேரத்தில், இம்மரணத்தைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, ஈழத்து மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் செயல்களுக்குப் பலியாகாது விழிப்போடும், தெளிவோடும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்து மீனவர்கள்தான் ஈழ மீனவர்களைத் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என அந்நிலத்தில் பரப்புரைசெய்வதும், தமிழகத்து மீனவர்களது படகுகளை ஈழத்து மீனவர்களுக்கு ஏலத்தில் விற்று, காழ்ப்புணர்வை தமிழக மீனவர்களிடம் உருவாக்க முயல்வதுமான போக்குகள் சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்த துடிக்கும் பெரும் மோசடித்தனமாகும்.

சிங்கள இனவாத அரசால் இனப்பேரழிவை தமிழர் தாயகம் எதிர்கொண்டபோது, தமிழகத்திலிருந்த 18 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காக்க தங்கள் உயிர்களை இரையாக்கினார்கள்; அவர்கள் தங்கள் உள்ளத்திலே கொதித்த நெருப்பை உடலிலே கொட்டி தீக்குளித்து, போராட்ட நெருப்பைப் பற்ற வைத்தார்கள். ஈழத்தாயகம் எப்போதெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் கொதித்தெழுந்து தங்கள் உறவுகளைக் காக்க உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது. ஆகவே, தமிழகத்துக்கும், ஈழத்துக்குமான தொப்புள்கொடி உறவை, வரலாற்று வழித்தொடர்பை எவராலும் மறுக்க முடியாது. ஏற்கனவே, தமிழ்த்தேசிய இன மக்களை சாதியும், மதமும் பிளந்து, பிரித்து ஓர்மையைத் தடுத்துக் கெடுக்கும் நிலையில் அரங்கேற்றப்படும் சதிச்செயல்களையும், தமிழகத்து தமிழர்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்குமான இரத்த உறவை முற்றாக அறுக்கத்துடிக்கும் பெருஞ்சூழ்ச்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டியது பெருங்கடமையும், பேரவசியமாகிறது. அந்நிலத்தில் தமிழ் மீனவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்; சிங்களர்களில் எவரும் மீனவர்கள் இல்லை என்பது போலவும், சிங்கள மீனவர்களது வளங்களை தமிழக மீனவர்கள் சுரண்டுகிறார்கள் என்பது போலவும், தமிழகத்து மீனவர்கள் சிங்கள மீனவர்களைத் தாக்குகிறார்கள் என்பது போலவும் கருத்துருவாக்கம் செய்து, இரு நிலத்து மீனவர்களையும் பகையாளிகளாக மாற்ற முனைவது கொடும் வன்மத்தின் உச்சமாகும்.

ஆகவே, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பிளவையும், பகையையும் உருவாக்கத் துடிக்கும் இனவெறி சிங்கள ஆட்சியாளர்களின் தமிழர் விரோதச்செயல்பாடுகளுக்கு இரையாகாது அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தமிழர் ஓர்மையையும், இணக்கப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டுமென இரு நிலத்தில் வாழும் தமிழர்களையும் உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம்
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )