சுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 | விருப்பமனு அளிப்பதற்கான நினைவூட்டல்

217

க.எண்: 2021120304
நாள்: 14.12.2021

சுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 | விருப்பமனு அளிப்பதற்கான நினைவூட்டல்

தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளவுள்ளதால்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஒரே கட்டமாக வெளியிடவுள்ளார்கள்.

கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து கலந்தாய்வு செய்து, தத்தம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புகின்ற உறவுகளின் விருப்ப மனுக்களைப் பெற்று, தலைமை அலுவலகத்திற்கு விரைந்து அனுப்பிவைக்க வேண்டுமென்று கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் ஐயா நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். அதன்படி உறவுகள் அனுப்பும் விருப்ப மனுக்களைப் பதிவேற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அம்மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்படவுள்ளது. ஆகவே, விருப்பமனுக்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ள உறவுகள், இனியும் காலம்தாழ்த்தாமல் வருகின்ற 25-12-2021 சனிக்கிழமைக்குள் தலைமை அலுவலக முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: இவ்வறிவிப்புடன் இணையதளத்தில் வெளியிடப்படும் விருப்பமனு படிவ மாதிரியை நகல் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை, சரியாக நிரப்பி, முறையாக அனுப்பப்படும் விருப்ப மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.

 – தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி