‘தமிழரா.. திராவிடரா..?’ இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – தீர்மானங்கள் [புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]

672

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் “சங்கக் காலம் தொட்டு.. தமிழரா.. திராவிடரா..?” என்ற தலைப்பில் இன விடுதலை அரசியலுக்கான முழுநாள் கருத்தரங்கம் 12-09-2021 அன்று, காலை 10 மணி முதல் இரவு 07 மணிவரை முழு நாள் நிகழ்வாக, சென்னை போரூர் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண நிலையத்தில் நடைபெற்றது.

இம்மாபெரும் கருத்தரங்க நிகழ்வினை, செம்மை மரபுப் பள்ளியின் நிறுவனர் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, ‘சங்க காலத் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் இறைப் பேருரை நிகழ்த்தினார். முன்னதாக  காலை அமர்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் அவர்கள் கருத்தரங்கின் நோக்கம் குறித்து உரையாற்றி, நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து, ‘தமிழ்த்தேசியமும், தமிழர் நலனும்!’ என்ற தலைப்பில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களும், ‘தமிழரே இம்மண்ணின் பூர்வக்குடிகள்!’ என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அ.வினோத் அவர்களும், ‘தமிழர் என்ற தேசிய இனம்!’ என்ற தலைப்பில் சமூகச் செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி அவர்களும் கருத்துரையாற்றினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மாலை அமர்வில், ‘இந்தியமும் தமிழ்த்தேசியமும்!’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பேரறிஞர் கி.வெங்கட்ராமன் அவர்களும்,‌ ‘தொல்தமிழர் வரலாறும், திராவிடமும்!’ என்ற தலைப்பில் தமிழ்ப்பெரும் ஆய்வர் தக்கார் மா.சோ.விக்டர் அவர்களும், ‌’திராவிடத்தின் வரலாற்றுத் திரிபுகள்!’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் பெ.மணியரசன் அவர்களும்,  தமிழ்த்தேசியக் கருத்துகள் செறிந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரைகளை நிகழ்த்தினர்.

இம்மாபெரும் கருத்தரங்கில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட அனைவரின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி அவர்கள் வாசித்தபோது அரங்கத்தினர் அனைவரும் வரவேற்கும் விதமாகக் கையொலி எழுப்பினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1. உலகின் மூத்த இனமான தமிழ்த்தேசியப் பேரினத்தின் தொன்மத்தை மூடி மறைத்து, பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் அபகரித்து , தமிழர் இன அடையாளத்தையே மழுங்கடிக்கும் நோக்கில் பன்னெடுங்காலமாகத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுப்போரை காலங்காலமாக எதிர்நோக்கி வருகிறோம். எத்தனையோ படையெடுப்புகளுக்கும், அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளுக்கும், அதிகார மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டபோதும் தமிழ்த் தேசிய இனம் தனது தன்னியல்பையும், தனித்துவத்தையும் துளியும் இழக்காது தழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது. அத்தகைய இனத்தின் அடையாளத்தைத் திருடி, தமிழர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள்ளும், உளவியல் ஊனப்படுத்தலுக்குள்ளும் தள்ளும் திராவிடர் எனும் அடையாளத்திரிபை இனியும் அனுமதிக்க முடியாது.

தமிழர் நிலத்தின் ஆட்சியதிகாரத்தையும், செங்கோலையும் கைப்பற்றித் தமிழர்களைச் சுரண்டிக் கொழுக்கும் கொடுங்கோல் திராவிட ஆட்சியாளர்கள், தமிழ்த்தேசிய எழுச்சியையும், ஓர்மையையும் வஞ்சக உத்தியைக்கொண்டு குலைக்கும் வழமைத்தனத்தின் நீட்சியாக, சங்க இலக்கியங்களை உள்ளடக்கிய தமிழ் இலக்கியத்திரட்டை ‘திராவிடக்களஞ்சியம்’ எனும் பெயரில் வெளியிடும் பித்தலாட்ட அறிவிப்பை வெளியிட்டது திமுக அரசு. அதற்கு இனமானத்தமிழர்கள் வெளிப்படுத்திய கடும் எதிர்ப்பினாலும், எதிர் வினையினாலும் வேறுவழியற்ற சூழலில் பின்வாங்கி மழுப்பிய திராவிடக்கூட்டம், இப்போது பசப்பு வாதங்களை முன்வைத்து தமிழ்த்தேசியர்களின் சொற்போரை எதிர்கொள்ள முடியாது திக்கித் திணறிக்‌கொண்டிருக்கிறது. நாட்டையாளும் திராவிட ஆட்சியாளர்களின் அரசியல் இருப்புக்காகவும், தன் லாபத்திற்காகவும் தமிழினத்தின் அடையாளத்தை மறைத்து மடைமாற்ற முயலும் திராவிட அடையாளத் திணிப்புகளை இக்கருத்தரங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஆரியத்திற்கு நேரெதிரான உளவியல் ஓட்டம் கொண்ட தமிழர்களை ஆரியச்சொல்லான திராவிடர் என்பதனைக் கொண்டு அடையாளப்படுத்தும் மோசடித்தனத்தை முற்றாகக் கைவிட வேண்டும் எனத் திமுக அரசையும், ஆட்சியாளர்களையும் வலியுறுத்துகிறது. இனவியல், அறிவியலின் அடிப்படையிலும், வரலாற்று ரீதியிலுமென எப்படி நோக்கினும் இல்லாதவொன்றான திராவிடத்தைத் தமிழர்களின் அடையாளமாகக் கற்பித்து, மரபினமென நிறுவ முற்படும் புரட்டுரைகளும், கட்டுக்கதைகளும் இனியும் தமிழர் நிலத்தில் நிலைக்காது எனக்கூறி, தமிழ், தமிழர், தமிழினம், தமிழ்த்தேசியம் என்பதே தமிழர்களின் ஒப்பற்ற உயர் அடையாளங்கள் எனப் பெருமிதத்தோடு அறிவித்து, திராவிடர் எனும் அடையாள மறைப்புக்கெதிராகத் தமிழர் நிலத்தில் மண்ணுரிமைப்போர் செய்வோமென இக்கருத்தரங்கம் பேரறிவிப்புச் செய்கிறது.

2.இந்தியத் தொல்லியல்துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் சிந்து சமவெளி, கீழடி உள்ளிட்ட தமிழர் தொல்லியல் ஆய்வு முடிவுகளைத் திராவிட நாகரீகமென்றோ, இந்திய நாகரீகமென்றோ கையாள்வதையும், வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும். மாறாக, தமிழர் நாகரீகம் என்றே அழைக்க வேண்டும் என இக்கருத்தரங்கப் பேரவை வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

3. இந்திய ஒன்றியத்தில் வாழும் தேசிய இனங்களின் ஓர்மை அரசியலையும், தன்னாட்சி உரிமையையும், தீவிரவாதமாகவும், பிரிவினைவாதமாகவும் சித்தரிக்கும் ஆரிய ஆட்சியதிகார நிலைகள், சமகாலத்தில் மேலெழும் தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சியைத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழர்களை இந்துக்களாகவும், இந்தியராகவும் வகைப்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறது. தமிழர்களின் தனித்த மேன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கீழடி, பொருநை உள்ளிட்ட தமிழர் நிலங்களில் கிடைத்து வரும் வரலாற்றுச்சான்றுகள் வாயிலாக உலகிற்குத் தெரிய வருகிற தமிழர் வரலாற்றுத்தொன்மையை மறைக்க முயல்வது, கல்விப்புலங்களில் சமஸ்கிருதத்திணிப்பை செய்வது, ஒற்றைமயத்தைத் திணித்து தேசிய இன அடையாளத்தைச் சிதைப்பது, தமிழர்களின் மெய்யியல் கூறுகளையும், பண்பாட்டு மரபுகளையும் திருடித் தன்வயப்படுத்துவதென ஆரியமயமாக்கலைச்செய்து, தமிழ்ப்பேரினத்தைச் சிதைக்க முற்படும் இந்தியாவை ஆளும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை இக்கருத்தரங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்தின் மொழிக்கும், இனத்திற்கும், நிலத்திற்கும், வளத்திற்கும் எதிராகத் தொடர்ச்சியாக அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் ஆரிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து தமிழ்த்தேசியர்களும், தமிழ்த்தேசிய இன மக்களும் சமரசமற்ற அரசியல் சமர் செய்வோமென இக்கருத்தரங்கம் பேரறிவிப்புச் செய்கிறது.

இறுதியாக, திராவிடக் குழப்பவாதமும், தமிழ்த்தேசியத் தீர்வும்! என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கும் கருத்துரையாற்றியவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமோடி அரசின் மக்கள் விரோதமும், திராவிட அரசுகளின் பொய் வாக்குறுதியுமே தனுசின் உயிர்ப்பலிக்குக் காரணம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்