சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாளை அரசு நிகழ்வாக முன்னெடுக்கவேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை

457

செய்திக்குறிப்பு: பெரும்பாவலர் பாரதியார், சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

பெரும்பாவலர் பாரதியார் நூறாம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் அறுபத்து நான்காம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 அன்று, அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழ்ப் பேராளுமைகள் இருவரின் திருவுருவப் படத்திற்கும் முன்னால் சீமான் அவர்கள், நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது…

’சாதிய உணர்வு’ என்பது மனித மனத்தின் சிந்தனையில் இருக்கிறது. எனவே அதிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட்டு வர வேண்டும். என்னோடு பயணிக்கும் பிள்ளைகள் அதைத் தூக்கித் தூர வீசிவிட்டுதான் ’நாங்கள் தமிழர்கள்’ என்று நிற்கிறார்கள். அந்த உணர்வில்தான் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள். இது போலவே ஒட்டுமொத்த சமூகத்தில் உள்ள சாதிய மனப்பான்மை மாற வேண்டும். மாறும். அந்த மாற்றத்திற்கான விதையாக இந்த இருவரையும் நாங்கள் பார்க்கிறோம். அந்த அடிப்படையில் பாட்டனார் பாரதிக்குப் புகழ் வணக்கத்தையும், தாத்தா இம்மானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கத்தையும் செலுத்துவதில் நாம் தமிழர் கட்சி பெருமிதம் அடைகிறது.

சாதியத் தீண்டாமைகளுக்கு எதிராகப் போராடிய சமூகநீதிப் போராளி, தாத்தா இம்மானுவேல் சேகரனார் நினைவுநாளை அரசு நிகழ்வாக ஆண்டுதோறும் முன்னெடுக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறேன். சமூகநீதிக்காக உயிரையே விட்டார் என்பதற்காகத் தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மக்கள், அவர் மீது பேரன்பும், பெருமதிப்பும் வைத்து தங்களது இதய தெய்வமாகப் போற்றி வருகின்றனர்.

தமிழர்கள் நாங்கள் தாழ்த்தபட்டவர்கள் இல்லை. தமிழ்க்குடியில் பிறந்ததற்காகவே தமிழன் பெருமைக்குரியவன். வரலாற்றின் போக்கில் தாழ்த்தப்பட்ட மக்களாக ஆக்கப்பட்டோம். தற்போது அதிலிருந்து நாங்கள் மீள் எழுச்சி கொள்ளவேண்டும், மீண்டு வரவேண்டும் என நினைக்கிறோம். எனவே, தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலிலிருந்தே தேவேந்திர குல வேளாளரை வெளியேற்றி, பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்து, தற்போது வழங்கப்படும் இடஒதுக்கீடு விழுக்காட்டளவை பிற்படுத்தபட்டோர் பட்டியலிலும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பதற்றமடைகிறார்கள். வழக்கு விசாரணை முடியும்போது உண்மை தெரியவரும். தமிழக அரசின் தொல்லியல்துறை சார்ந்த அறிவிப்புகள் தமிழ்த்தேசிய அரசியல் வெல்கிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் நாங்கள் பேசிய, எங்கள் ஆட்சி செயற்பாட்டில் கொடுத்துள்ளவற்றைதான் அறிவிப்புகளாக திமுக அரசு வெளியிடுகிறது. அதன்படிப் பார்த்தால் திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது என்கிற பெருமையும் திமிரும் எங்களுக்கு இருக்கிறது.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் தலைவர்கள் எவரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தது கிடையாது. அவர்களுக்கு நாட்டுப்பற்றும் கிடையாது! பிரிட்டிஷ் மகாராணி இந்தியா வந்தபோது வரவேற்பு கொடுத்தவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள். கேரளப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றி இடம்பெற்றிருப்பது குறித்துக் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் பேச வேண்டும்.

ஐம்பதாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் சாதியை ஒழிக்க முடியாமல், தற்போது 10 இலட்சம் பணம் கொடுப்பதால் சாதி ஒழிந்துவிடுமா? சாதியப் படுகொலை, ஆணவப் படுகொலை செய்கின்றவர்களைக் கண்டதும் சுடவேண்டும் என்பது போன்ற கடுமையான சட்டங்கள் இயற்றுவதுதான் இவற்றைத் தடுப்பதற்கான சரியான நடவடிக்கையாக இருக்கும்.

மறைநீர் பொருளாதாரத்தைச் சுரண்டும் மகிழுந்து தொழிற்சாலைகளை நான் எதிர்த்துப் பேசும்போது என்னை வளர்ச்சிக்கு எதிரானவர் என்று விமர்சித்தீர்கள். தற்போது ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டதால் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துவிட்டதாகக் கூறுகின்றீர்கள். ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நோக்கியா நிறுவனமும், வரி செலுத்தாமல் இதேபோல் ஒரேநாளில் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட்டுச் சென்றது. பல்லாயிரம் கோடி முதலீடு செய்து இங்குத் தொழிற்சாலையைத் தொடங்கும் பன்னாட்டு முதலாளிகள் ஏன் அதனைத் தங்கள் நாட்டில் தொடங்குவதில்லை? இங்கு மலிவான மனித உழைப்பு, தடையற்ற மின்சாரம், தேவைக்கதிகமான நிலம், நிலத்தடி நீர் கொடுத்து, வரி விலக்கு கொடுத்து இந்த நிறுவனங்களைக் கொண்டு வருகிறார்கள். இந்த நாட்டின் மனித உழைப்பையும், வளங்களையும் சுரண்டிச் சுரண்டி ஏற்றுமதி செய்து இலாபம் பார்க்கும் அவன் நாடு வளருமா? இந்த நாடு வளருமா? அவன் தனக்குத் தேவையான இலாபம் கிடைக்காதபோது, அந்த முதலாளிகள் ஒரே நாளில் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டு சென்றுவிடுகிறார்கள். வளர்ச்சி என்று இதைப் பேசிய பெருமக்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

காவலர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரமும், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரமும் பணி வழங்க வேண்டும்; வாரம் ஒரு நாள் சம்பளப் பிடித்தம் இல்லாமல் விடுமுறை அளிக்க வேண்டும்; சுழற்சி முறையில் பணி; காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்; மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்த வேண்டும் என்பவையெல்லாம் நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருபவை. நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவிலும் விரிவாகக் கொடுத்துள்ளோம். நீதிமன்றமும் எங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்கிறது என்பது மகிழ்ச்சியே.

ஆற்று மணலை 1.5 மீட்டர் வரை அள்ளிக்கொள்ளலாம் எனப் பேரவையில் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சராக இருக்கக்கூடிய ஐயா துரைமுருகன் கூறியிருக்கக் கூடாது. ஏற்கனவே கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டுபோவதைச் சட்டப்படி தடுக்க முடியாது என அவர் பேசியது வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்தது. அப்படி அனுமதிப்பது, ’திட்டம் போட்டு திருடுகிற கூட்டம், சட்டம் போட்டுத் திருடுவதும் சரி’ என்று சொல்வதுபோலத்தான் ஆகிவிடும்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு