அறிவிப்பு: *ஏப்ரல் 18 முதல் மே 18 வரை தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு* | நாம் தமிழர் கட்சி
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பதிவுசெய்யப்பட்ட வரலாறு கொண்ட தெற்காசியாவின் தனித்துவமான ஓர் இனம் தமிழினம். தமிழர்களின் மரபு வழித் தாய் நிலங்களாகத் தமிழ்நாடு மற்றும் தமிழீழம் விளங்குகின்றன. ஏராளமான தமிழர்கள் உலகெங்கிலும் குடியேறிய சமூகங்களாகப் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில நூறு ஆண்டுகளாக அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அண்மைக் காலங்களில் (சற்றேறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில்) ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். உலகின் பல பழம்பெரும் இனங்களைப் போல் தமிழர்கள் தங்கள் வரலாற்றின் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் பெரும்பகுதியில் தன் இனத்திற்கான அரசியல் இறையாண்மைப் பெற்றிருக்கவில்லை; இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் ஓரளவுக்கு அதிகாரம் பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது.
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தங்கள் தாயகமான இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தங்கள் உற்றார் உறவினர் படும் துன்பங்களைக் கண்டு பெரும் துயரத்தில் உள்ளனர். 1983 முதல் 2009 வரை முப்பது ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போதும், இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்த்திய இனப்படுகொலையால் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓர் இனம், பண்பாடு அல்லது மதத்தைப் பின்பற்றும் மக்களை அவர்கள் அடையாளத்தை அழிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்டுக் கொல்வது இனப்படுகொலை ஆகும். இலங்கை விடுதலைப் பெற்ற 1948-ஆம் ஆண்டில் இருந்து, சிங்கள பௌத்தப் பேரினவாத அரசாங்கத்தின் இனத்தூய்மைவாதக் கொள்கைகளால், திட்டமிட்ட வன்முறை, நில ஆக்கிரமிப்பு என்று நடவடிக்கைகள் மூலம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடங்கின.
ஐக்கிய நாடுகளின் சபை கணக்கீட்டின் படி 2009 மே மாதத்தில் மட்டும் சற்றேறக்குறைய 40,000 முதல் 75,000 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. 1,75,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிற மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்தப் மதிப்பீடுகள் 2009-இல் மே-18 ஆம் நாள் முடிவடைந்த இறுதிகட்டப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிக்கின்றன. இலங்கையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த இனப்படுகொலையின் போது தமிழ்ப் பொதுமக்களின் உயிர் இழப்பு மிக அதிகம்.
கூடுதலாக, இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் அவர்களின் மொழி, மதம் மற்றும் பண்பாட்டைப் பேணுவதற்கான முறையான உரிமையைக் குறைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, 1956-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும் சட்டம்” இலங்கையின் அலுவல் மொழியாகச் சிங்களத்தை மட்டுமே என்று அறிவித்து, நாட்டின் 29 விழுக்காட்டு மக்களின் முதன்மை மொழியான தமிழைப் புறக்கணித்து, அதன் மூலம் இலங்கையின் பொதுச் சேவையில் தமிழர்கள் பங்கேற்பை முற்றிலும் தடுத்தது.
இலங்கையில் நடந்தேறியது இனப்படுகொலை தான் என்பதை உலக நாடுகள் அறிவித்து அங்கீகரிக்க வேண்டும். இது தான் இழந்த உயிர்களுக்கான குறைந்த அளவு மரியாதையாகவும், உறவினர்களை உடைமைகளை இழந்தவர்களுக்கான அடிப்படை நம்பிக்கையாகவும் இருக்க முடியும்.
முதன்மையாக, தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிப்பதன் மூலம், மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், உலக வரலாற்றில் நிகழ்ந்த இந்த இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் உறுதியேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 18-ஆம் தேதியுடன் முடியும் ஒரு மாத காலத்தை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதமாக நாம் தமிழர் கட்சி அறிவிக்கிறது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில், உலகெங்கிலும் வாழும் தமிழர்களும், உலக மக்களும், வரலாற்றில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் பற்றி நினைவுகூரவும், விழிப்புணர்வைப் பரிமாறிக்கொள்ளவும், அதன் படிப்பினைகளை அறிந்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தமிழ் இனப்படுகொலை நினைவு மாதத்தின் தொடக்க நாளான 18 ஏப்ரல், 2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தொடக்க நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
இப்பெருந்தொற்றுக் காலத்தில் கொரொனா பரவலைத் தவிர்க்கும் பொருட்டு இந்நிகழ்வில் பங்கேற்கும் உறவுகள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிவது, தொற்றுத் தடை திரவம் பயன்படுத்துவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாகக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி