234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் | மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்

8262

நாள்: 01.03.2021

234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம்!
மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் (சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்)

என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழர் எனும் தேசிய இனம் தனக்கே உரிய தனித்துவமிக்கக் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல், வரலாறு எனத் தொன்ம விழுமியங்கள் யாவற்றையும் சிதையக் கொடுத்து, அழிவின் விளிம்பில் நிற்கையில், தமிழர்களின் இருபெரும் தாயகங்களான தமிழகமும், தமிழீழமும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலும், அபகரிப்பிலும் வெவ்வேறு விதமாய் அடிமைப்பட்டுக் கிடக்கையில், இது யாவற்றிலிருந்தும் மண்ணையும், மக்களையும் மீட்டுக்காக்க வேண்டுமெனும் பெரும் தவிப்போடும், அளப்பெரும் ஏக்கத்தோடும், இனம் அழிக்கப்பட்ட நாளிலேயே, நாம் தமிழர்’ எனும் பெருமுழக்கத்தை முன்வைத்து இனமாய் எழுந்தோம். நிமிர்ந்தோம். உலகத்தமிழர்களை ஒற்றைக்குடையின் கீழ் இணைத்து, அரசியல் பெரும்படையாய் உருவாகி கருக்கொண்டோம்.

நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டுக் காலத்தில் இந்நிலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது. தனது தனித்துவமிக்க முன்னுதாரணமான முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மை.

எங்களது முன்னோர்களும், இந்நிலத்தில் இதற்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன்வைத்தவர்களும் சமரசங்களுக்கு ஆட்பட்டு, திராவிடக்கட்சிகளிடம் கரைந்துபோன வரலாற்றுத்தவறுகளிலிருந்து பாடம் கற்ற நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அதனைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதிபூண்டு, சமரசமின்றி திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்த்துக் களம் காண்கிறது. மண்ணுரிமைக்களத்தில் தளர்வின்றிப் போராடுகிறது. பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்க ஓய்வின்றிக் களத்தில் நிற்கிறது.

2010ல் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என நிரூபித்துவிட்டே, 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாகக் களம்கண்டது நாம் தமிழர் கட்சி.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தி, சமூக நீதியை உறுதிசெய்யும் விதத்தில் தனித்தொகுதிகளில் ஆதித்தொல் குடிகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது, இதுவரை தேர்தல் அரசியலில் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தந்தது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மையினரான திருநங்கையைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது.

வாக்கரசியலுக்காக வேலை செய்திடாது, நாளைய தலைமுறையினருக்கான மாற்று அரசியலை முன்வைத்து சமூகக்கடமையாற்றியது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கிப் பாலியல் பேதம் முறித்து நின்றது. இந்தியப் பெருநிலத்திலேயே பாலியல் வேறுபாட்டைத் தகர்த்து, பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்பளித்த கட்சியாக வரலாற்றில் பதிவுசெய்தது நாம் தமிழர் கட்சி. இவ்வாறு முன்மாதிரியான அரசியலை முன்வைத்து, முற்போக்கை முழுவதுமாகக் கடைபிடித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை கட்டியெழுப்புகிற நாம் தமிழர் கட்சியின் அடுத்தக் கட்டப்பாய்ச்சலாக, அதிகாரத்தை அடையும் பெரும்போரில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை சமரசமின்றி எதிர்கொண்டு தனித்து சமர்க்களம் புகுகிறது நாம் தமிழர் கட்சி.

தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது. எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படை, எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கையில், அதற்குத்தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.

‘பாதையைத் தேடாதே; உருவாக்கு!’ எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உயரியக் கூற்றுக்கு, உயிரூட்டும் விதத்தில் உலகெங்கும் வேர்பரப்பி வாழுகிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவினையும், வாக்குகளையும் வழங்கி, அதிகாரத்தில் ஏற்றி வைக்க வேண்டியது ஒவ்வொரு இனமானத் தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.

வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான  வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். தமிழர்களுக்கான அரசை அமைக்கப் பாடுபடும் இப்பெரும்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்’ எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் முன்வைத்த முழக்கத்தை முன்வைத்துக் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரியணையேற்ற பாடுபடுவோம்!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

புரட்சி எப்போதும் வெல்லும்! நாம் தமிழர் ஆட்சி அதனைச் சொல்லும்!

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகடலூர் தொகுதி – தேர்தல் திட்டக்குழு கூட்டம்
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி – கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம்