காட்டுப்பள்ளி மக்களுடன் சீமான் | அதானி துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நேரில் கள ஆய்வு

467

சூழலியல் அழிவுத் திட்டங்களால் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டார். முதலில் திருவொற்றியூர் இரும்புபாலம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளால் கொற்றலை ஆறும் அதனையொட்டி உள்ள அலையாத்தி காடுகளும் சீரழிந்து வருவதைப் பார்வையிட்டார். தொடர்ந்து எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலமும் நீரும் காற்றும் நஞ்சாக்கப்படுவதைப் பாரவையிட்டார். தொடர்ந்து அதானி துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பழவேற்காடு, காட்டுப்பள்ளி குப்பம் மற்றும் காலனி பகுதி மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

கள ஆய்வுக்கு இடையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் அவர்கள் பதிலளித்ததாவது,

 

காட்டுப்பள்ளி பகுதியில் வாழ்விடமும், வாழ்வாதாரமும் முற்றாகச் சிதைந்துவிட்டது. இங்கே உள்ளே 5000 குடும்பங்களில் 1000 குடிகள் மட்டுமே இம்மண்ணின் பூர்வீக குடிகள். மற்றவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருக்கும் நிலங்களையும் அவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். நீர் வளமும் கெட்டுப்போய்விட்டது. இங்கே உள்ள குடிகளை அகற்றிவிட்டுதான் துறைமுகம் அமைக்கப்படும். ஏற்கனவே அவர்களைப் பூர்வீக இடங்களிலிருந்து விரட்டி மூன்றாவதாக இங்கே குடியமர்த்தியுள்ளனர். தற்போது இங்கிருந்தும் விரட்டினால் அவர்கள் எங்கே செல்வார்கள்? இங்குள்ள நச்சு தொழிற்சாலைகள் வெளியிட்ட உலர் சாம்பல்களால், இங்கிருந்த உப்பளத்தொழில், வேளாண்மைத்தொழில், மீன்பிடித்தொழில் என அனைத்தும் அழிந்து அவர்கள் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே எல்என்டி நிறுவனம் வரும்போது இங்குள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்புத் தருவதாகக் கூறித்தான் இங்குள்ள நிலங்களைக் கைப்பற்றினர். ஆனால் நூறு பேருக்கு மட்டும்தான், மிகச் சொற்ப சம்பளத்திற்கு, கழிவறை சுத்தப்படுத்தல், தோட்டப்பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளை மட்டுமே கொடுத்துள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் அதானியுடைய துறைமுகம் கட்டும் பணிக்காக 6111 ஏக்கர், கடலில் இரண்டாயிரம் ஏக்கர் , ஆற்றில் இரண்டாயிரம் ஏக்கர், நிலத்தில் இரண்டாயிரம் ஏக்கர் வழங்கினால் மீதம் இங்கே என்ன இருக்கும் ? எனவேதான் இந்தப்பேரழிவு திட்டத்தை வரவிடாமல் தடுத்துநிறுத்தப் போராட வந்துள்ளோம். இங்குள்ள மக்களே வழிநடத்திச்செல்ல ஆளில்லை நீங்கள்தான் துணையிருக்க வேண்டுமென்றார்கள். உறுதியாக உடனிருப்போம். டெல்லியில் வேளாண் குடிகள் செய்வதுபோல் தொடர்ப் போராட்டமாகத்தான் முன்னெடுப்போம். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் இத்தனை நச்சு ஆலைகளே வந்துள்ளது. இந்தத் துறைமுகங்களைத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த பெருந்தகைகளே அவர்கள்தான். மத்தியில் ஆண்ட காங்கிரசு , பீஜேபி, மாநிலத்தில் ஆண்ட திராவிடக் கட்சிகள்தான் இதற்கெல்லாம் காரணம். ஒரு தேசத்தின் குடிகளை நாசமாக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. ஒரு ஆற்றையே கொடுக்கிறார்கள். பாஜகவின் கொள்கையே தனியார்மயம், தாராளமயம்தான். ஏறக்குறைய நாட்டை விற்றுவிட்டார்கள். இந்த நிதிநிலையறிக்கையில் மிச்சம் இருந்ததும் போய்விட்டது. அரசைவிடத் தனியார் அனைத்தையும் நிருவகிப்பார்கள் என்றால் அரசை நாம் ஏன் நிறுவ வேண்டும்.? அதானியும், அம்பானியும்தான் சிறப்பாக நிருவகிப்பார்கள் என்றால் ஆளுக்கொரு ஐந்து வருடம் அரசாளக் கொடுத்துவிடலாமே? எல்லாமே தனியார்மயம் என்றால் நாடே தனியார்மயம் ஆகிவிட்டது என்றுதானே பொருள். இராணுவம் மட்டும் மீதம் இருந்தது. அதிலும் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டை உள்ளே கொண்டு வந்துவிட்டீர்கள். நாட்டின் குடிமகன் நான். எனக்கென்று நாட்டின் சொத்து என்ன உள்ளது ? எல்ஐசியா? தொடர்வண்டியா? இராணுவமா? விமானமா? விமானநிலையங்களா? சாலையா ? கல்வியா ? மருத்துவமா ? ஏதாவது ஒன்று கூறுங்கள். அதானி துறைமுகம், அதானி விமானநிலையம், அதானி வேளாண் பண்ணை ஆகியவை வந்துடுச்சு, பிறகு எதற்கு இந்தியா என்று வைக்க வேண்டும் ? அதானியா என்று பெயர் வைத்துவிட வேண்டியதுதானே. இந்த நிலையில் தேசப்பற்றைப்பற்றி நமக்குப் பாடமெடுப்பார்கள். இதையெல்லாம் பேசினால் நம்மைத் தேசத்துரோகி என்பார்கள். தனியாருக்குக் கொடுப்பதினால் என்ன வந்துவிட்டது என்று அறிவுள்ள எவரேனும் கேட்பார்களா? தேர்தல் வருவதினால் விவசாயக்கடனை தள்ளுபடி செய்வார்கள். மறுபடியும், மறுபடியும் விவசாயி மட்டும் ஏன் கடனாளி ஆகின்றார்கள்? இதற்கு என்ன நிரந்தரமான தீர்வு ? அதுதானே இங்கே முக்கியமான கேள்வி. அதானி துறைமுகம் வரவிடாமல் தடுக்க மக்கள் திரள் போராட்டத்தையும், சட்டப்போராட்டதையும் முன்னெடுப்போம். எழுவர் விடுதலையில் தனக்கு அதிகாரம் இல்லையென்று கூற எதற்கு இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.? இவ்வளவு காலம் கடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? தர்மபுரி வழக்கில் மூன்றுபேரை விடுதலை செய்து கையெழுத்திட எங்கிருந்து அதிகாரம் வந்தது? தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வஞ்சம் வைத்துத் தமிழர்களைப் பழிவாங்கியதுப்போல் உள்ளது . எத்தனை ஆண்டுகாலப்போராட்டம் ? அரசியல் போராட்டம், சட்டப்போராட்டம். கடைசியாக நீதிமன்றமே சொல்கிறது, நீங்கள் முடிவெடுங்கள் என்று. நல்ல முடிவெடுப்பார், நல்ல முடிவெடுப்பார் என்று நம்பவைத்து கடைசி நேரத்தில் எனக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இதைச் சொல்வதற்கு இவ்வுளவு நாட்கள் ஆகிறதா ? இனியாவது மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தித் துணிந்து அவர்களை விடுதலை செய்யவேண்டும்.

 

 

முந்தைய செய்திதிருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா
அடுத்த செய்திசென்னை சூழலியல் புரட்சி! சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்