சுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக

520

க.எண்: 2021010044
நாள்: 25.01.2021

சுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா(தைப்பூச) நிகழ்வை (28-01-2021) வழமைபோல் இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியும் அதன் பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணியும் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழும் நிலங்களிலும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறது.

தைப்பூச நாளிற்கு தமிழக அரசானது அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என்ற நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் நெடுநாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாம் கடந்த ஆண்டுகளில் செய்தது போன்று, இவ்வாண்டும் ஒவ்வொரு தொகுதிவாரியாக “திருமுருகன் குடில் அமைத்து” முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த நிகழ்வினை 25-01-2021 அன்று தொடங்கி மூன்று நாள் குடில் வழிபாடு செய்து தைப்பூச நாளான 28-01-2021 அன்று அருகில் உள்ள முருகன் கோவில்களில் வழிபாட்டினை வீரத்தமிழர் முன்னணி சார்பாக முன்னெடுக்குமாறு மாநில/மாவட்ட/தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்
07-02-2021 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04 மணியளவில்

வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆண்டுதோறும் முன்னெடுத்துவரும் திருமுருகன் திருவிழாவானது இம்முறை நமது தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் திருமணம் நடைபெற்ற “திருப்போரூர் திருமுருகன் கோவிலில்” வருகின்ற 07-02-2021 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் முருகவழிபாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் தமிழகம் முழுமைக்கும் உள்ள கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்று முருகனின் பெரும்புகழைப் பேரெழுச்சியோடு கொண்டாடிட பேரன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு: முனைவர் செந்தில்நாதன் (+91-94422 48351)
வீரத்தமிழர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பாளர்

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்
அடுத்த செய்தி“இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்” – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு