நாள்: 16.11.2020
சர்வதேச மனித உரிமைகள் தினம் 2020
இணையவழி மாநாடு – டிசம்பர் 12 2020
கூட்டாட்சி மற்றும் சனநாயகம் – சவால்களும், தீர்வுகளும்!
முன்னுரை:
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தை மதிப்புடன் போற்றும் வகையில் சர்வதேச மனித உரிமைகள் நாளை கடைப்பிடிக்கும் நாம் தமிழர் கட்சி, ஒடுக்கப்பட்ட தனிநபர்கள், சமூகங்கள், தேசியங்கள், பிராந்திய அடையாளங்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்காக அவர்களோடு ஒற்றுமையுடன் நிற்கும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து மக்களின், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளை ஆதரித்து உடன் நிற்பதோடு, மக்களே தங்களுக்கான விதிகளை உருவாக்கி அவற்றின் முதலாளிகளாக இருக்கும் உரிமை நிலைநிறுத்தப்படுவதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது.
கடந்த 70 ஆண்டுகாலமாக, வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் வெள்ளைய ஏகாதிபத்தியவாதிகளால் ஒப்படைக்கப்பட்ட ஏகாதிபத்தியக் கட்டமைப்பு மற்றும் ஆளும் முறைகளையே நிலைநாட்டியுள்ளனர். தேசியங்கள் மற்றும் பிராந்திய அடையாளங்களின் உரிமைகளை மதிக்கும்படியாக, இயல்பாகவே உண்மையான கூட்டாட்சி என்று கருதப்படும் ஒரு அரசியலமைப்பை இந்தியா ஏற்றுக்கொண்டாலும், பல வருடங்களாக இந்திய அரசியலின் செயல்பாடு முற்றிலும் கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாகவே அமைந்துள்ளது.
தடுப்புக்காவல் மற்றும் தேசத்துரோகம் போன்ற பழைய கடுமையான வெள்ளையர்கள் ஆட்சி காலச் சட்டங்களையே தற்போதும் இந்திய ஒன்றிய அரசு தொடர்கிறது. இந்தியா சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச்சட்டம் – 1967 போன்ற சட்டங்களை உருவாக்கியுள்ளதுடன், ‘ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்! ஒரே அடையாளம்!’ என்ற வலதுசாரி அமைப்புகளின் கொள்கையின் கீழ் இந்தியாவை ஒரு ஏகத்துவ நாடாக மாற்ற புதிய மக்கள் விரோத சட்டங்களை உருவாக்கி வருகிறது. நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை பாதுகாவலர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் அவமதிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டி, கைது செய்யப்பட்டு, வெகுதொலைவிலுள்ள சிறைச்சாலைகளில் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் மொழியின் அடிப்படையில் உருவான மாநிலங்களின் உரிமைகளில், இந்திய ஒன்றியம் தலையீடு செய்து, மாநில விடயங்களில் குறுக்கீடு மற்றும் தலையீடு செய்வதன் மூலம் கூட்டாட்சி அமைப்பை மாற்றியமைக்கின்றது. மேலும், பாராளுமன்றத்திலுள்ள தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி கொடூரமான சட்டங்களை நிறைவேற்றி வருகின்றது.
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள மனித உரிமைகள் நாளின் கருப்பொருளானது கொரோனா தொற்றுநோயுடன் தொடர்புடையதால், அனைத்து மீட்பு முயற்சிகளுக்கும் மையமாக மனித உரிமைகள் இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் அவற்றை சிறப்பாகக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்திய ஒன்றியம் அரைக்கூட்டாட்சி கட்டமைப்பாக இருந்தபோதிலும் கெடுவாய்ப்பாய் அதன் வழியான மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பராமரிக்கத் தவறிவிட்டது. தொற்றுக் காலங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்திய ஒன்றியம் உட்பட பல நாடுகள், கொரோனா நோய்த்தொற்று காலத்தில், கூட்டாட்சியின் கொள்கையை நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்திருக்கின்றன. அதே நேரத்தில் நிவாரணம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியுதவி ஆகியவற்றைப் பகிர்ந்துக் கொள்ளவும் தவறிவிட்டன.
சர்வதேசத் தலையீடு மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்து அரிதாகவே இந்தியத் துணைக்கண்டத்தில் விவாதிக்கப்படுகின்றன; தங்களது உரிமைகள் நசுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அதனை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்.
தெற்காசியாவின் மனித உரிமைகள் குறித்தான நிலையைப் புரிந்துகொண்டு, இந்தியாவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சித் தொடர்பானக் கூறுகளையும் கணக்கில் கொண்டு, இந்தப் பிராந்தியத்தில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சமீபத்தியச் சம்பவங்கள் குறித்து ஆழமான அக்கறையைக் கொண்டுள்ளதன் காரணமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த இந்த மாநாடு பின்வரும் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றி ஏற்றுக்கொள்கிறது:
தீர்மானங்கள்:
- எந்த விதப் பின்வாங்கலும் இல்லாது 16வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அவை தலைவணங்குகிறது. நாளுக்கு நாள் தங்களது போராட்டப் பலத்தை விவசாயிகள் கூட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இன்று இந்த அவையில் கூடியிருக்கும் உலக நாடுகளின் பேச்சாளர்கள் மற்றும் வல்லுநர்கள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்; விவசாய அமைப்புகளின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் நாங்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கிறோம்.
- இந்தச் சந்திப்பு சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்துகிறது. சட்டம், ஆட்சி, கோட்பாடு என்பது எல்லா நேரங்களிலும் நிரந்தரமானது அல்ல. உலக மனித உரிமைகள் நாளை ஒட்டி ஒரு கூட்டாட்சி அமைப்பு தேவை என்பதை நாம் அனைவரும் அங்கீகரிக்கும் நிலையில், அதனை மக்களின், தேசிய இனங்களின் மனித உரிமைகள், குடியியல், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் ஆகியவற்றிலிருந்து கொண்டு வர இந்திய அரசியலமைப்பின் முழு வடிவத்தையும் மறுபார்வையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். தொடர் மாற்றத்திற்குள்ளாகி வரும் இந்த உலகின் சட்ட மற்றும் சமூக கட்டமைப்பானது அனைத்து நிலைகளிலுமான இணக்கத்தன்மை, சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மையின் கோட்பாடுகளை அங்கீகரித்தே வந்துள்ளது. இது ஒரு அமைதியான தெற்காசியா மற்றும் உலக நாடுகளுக்கானப் பாதையை அமைக்கும்; நாம் அனைவரும் இந்த இலக்கை அடைவதில் உறுதியாக உள்ளோம் என்பதனை இந்தக் கூட்டம் உணர்த்துகிறது.
- இந்திய அரசியல் சட்டத்தின் உண்மையான கூட்டாட்சி அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், மக்களின் நியாயமான உரிமைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும், பேணுவதற்கும் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் மேம்படுத்த வேண்டுமென்றும் இந்த அவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வகுத்த கூட்டாட்சி அமைப்பு மதிக்கப்பட வேண்டும். மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளை, பொதுப் பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலுக்கு மாற்றக் கூடாதெனவும் வலியுறுத்தப் படுகிறது.
- குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவுச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவு, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, நீட் தேர்வு, மின்சார திருத்த மசோதா உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களையும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் – 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் – 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் – 2020, விவசாயக் கழிவுகளை எரிப்பதற்கு உயர் அபராதம் விதிக்கும் கொடுஞ்சட்டமான நாட்டின் தலைநகர் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளின் காற்றின் தர மேலாண்மை ஆணையச் சட்டம் – 2020, மின்சார திருத்த மசோதா – 2020 உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களை ரத்து செய்து இந்நாட்டின் குடிமக்களின், வேளாண் குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேலும், இவை குறித்தான மாநிலங்களுடைய சட்டப்படியான முடிவெடுக்கும் உரிமையை இந்திய ஒன்றிய அரசு மதித்து நடக்க வேண்டும்.
- இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஏற்கனவே திறமையற்ற மற்றும் போதிய சுகாதார அமைப்பின்றி இக்கட்டான நிலையில் உள்ளது. எனவே, உடல்நலம் குறித்தும்கூட கூட்டாட்சி முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான சமமான நிதிப் பகிர்வுக்கான மாநிலங்களின் உரிமைகள், அதனால் ஏற்பட்ட சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான தோல்விகள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும். கூட்டாட்சி முறையை நீர்த்துப்போகச் செய்யாமல் அனைத்து மாநிலங்களின் சுகாதார உரிமையைப் பாதுகாக்க, மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தின் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
- உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும், மாநில சட்டமன்றத்தின் தீர்மானத்தையும் மதிக்காத மாநில ஆளுநர் என்று ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கும் தமிழக ஆளுநர், ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் தண்டனைக் காலத்தை முடித்த எழுவர் விடுதலையை முடக்கி வைத்துள்ளார்; அவர்களின் உடனடி மற்றும் நிபந்தனையற்ற விடுதலையை வேண்டுகிறோம்.
- குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள், மாணவ ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் மற்றும் பீமா கோரேகான் வழக்குகளில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், போதகர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கக் கோருகிறோம்.
- மாட்டிறைச்சி உண்ணுபவர்களின் மீது கூட்டுக் கொடூரத்தாக்குதல் நடத்தப்படுவதையும், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கள்ள மௌனத்தையும் கண்டிக்கிறோம். வெவ்வேறு இன மற்றும் பண்பாட்டு பின்னணியைச் சேர்ந்த மக்களின் உணவுக்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும்.
- சமீபத்திய ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினர் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. செவிகேளாது வெறும் பார்வையாளராக இருப்பதோடு, தாக்குதல்களில் ஈடுபடும் வலதுசாரி குற்றவாளிகளுக்குக் காவல்துறை மற்றும் அரசின் நிர்வாக இயந்திரங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து ஆதரிப்பதையும் விடுத்து, இந்திய ஒன்றியத்தின் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- திரிபுரா மற்றும் நாகாலாந்தின் ஆட்சிப் பொறுப்பினைப் பறிப்பதைக் கடுமையாக கண்டிப்பதோடு அந்த பிராந்தியத்தில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான காலனித்துவத்தை இந்திய ஒன்றிய அரசாங்கம் தடுக்க வேண்டுமென்று இந்த அவை கோருகிறது. திரிபுரா நிலத்தை ஆட்சி செய்வதற்கான உரிமை ட்விபிரசாவுக்கும் (பிராந்தியத்தின் பழங்குடி மக்கள்), நாகாலாந்தை நாகர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரசின் அனைத்து கொள்கைகள், உத்திகள் மற்றும் தலையீடுகளில் பழங்குடியின மக்களின் நிலங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதன் வாயிலாக அவர்களின் உரிமைகளையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
- அசாமின் இணைப்பு ஒப்பந்தத்தை இந்திய ஒன்றியம் மீறுவதை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. அவர்களின் பண்பாட்டு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க அசாம் மக்களின் தன் நிர்ணய உரிமை மற்றும் தன்னாட்சி உரிமை ஆகியவை மதிக்கப்பட வேண்டும்.
- இந்த அவையானது இலங்கையில் நடைபெற்றது தமிழர்கள் மீதான இனப்படுகொலைதான் என்றுரைக்கிறது. இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் அதற்குப் பொறுப்பான அரசியல்வாதிகளின் இனப்படுகொலைச் செயல்கள் குறித்து சார்பற்ற சர்வதேச விசாரணையைக் கோருகிறது. தமிழர்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுவதைத் திரும்பப்பெற வேண்டும் மற்றும் தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் தாமதமின்றி மீட்டெடுக்கப்பட்டு சரியான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிங்களக் காலனித்துவம் மற்றும் சிங்களவர்களை தமிழ்ப்பகுதிகளுக்கு மாற்றுவது ஆகியவற்றுடன் புத்தமதமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- ஈழத்தமிழர்களின் தன் நிர்ணய உரிமையை எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி இந்த அவை அங்கீகரிக்கும் அதே வேளையில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான பிரச்சினையை இந்தியா அங்கீகரித்து மேற்படி இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறோம்.
மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள்:
சியோபேன் மெக்டோனாக்
பாராளுமன்ற உறுப்பினர்,
தொழிலாளர் கட்சி, இங்கிலாந்து
முனைவர் ஹக் மெக்டெர்மோட்
நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்,
ஆஸ்திரேலியா
மருத்துவர் பிரைன் சேனவிரத்னே
செனட்டர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
மருத்துவர் தரம்விர் காந்தி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
தலைவர், நவன் பஞ்சாப் கட்சி, பஞ்சாப்
முனைவர் நெய்வெட்சோ வேனு
முன்னாள் பொதுச் செயலாளர், நாகா மக்கள் இயக்கம்,
பேராசிரியர், நாகாலாந்து பல்கலைக்கழகம், நாகாலாந்து
பட்டால் கன்யா சமாத்தியா
தலைவர், திரிபுரா மக்கள் முன்னணி
திரிபுரா
முனைவர் கர்கா சட்டர்ஜி
தலைவர், பங்களா போக்கோ,
உதவிப் பேராசிரியர், இந்தியப் புள்ளியியல் கழகம், மேற்கு வங்கம்
பேராசிரியர் ஜக்மோகன் சிங்
ஆசிரியர், உலக சீக்கிய செய்திகள்
மனித உரிமை செயற்பாட்டாளர், பஞ்சாப்
உதயன் குமார் கோகோய்
பொதுச் செயலாளர்,
அசோம் சதியதபதி யுப பரிசத், அஸ்ஸாம்
முனைவர் தீபக் பவார்
சமூக செயற்பாட்டாளர்,
இணைப் பேராசிரியர், மும்பை பல்கலைக்கழகம், மஹாராஷ்டிரா
ஆஸ்லே நியூஹம்
தமிழீழ மற்றும் சமூக செயற்பாட்டாளர்
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
நாம் தமிழர் கட்சி