செய்திக்குறிப்பு: கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை | நாம் தமிழர் கட்சி
உலகில் எந்த நாட்டிலும் பாதுகாக்க முடியாத அணுக்கழிவுகளை வெளியேற்றும் அணுஉலைகளை மூடிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுஉலைக்கு அருகில் புதைக்கும் திட்டத்தைக் கண்டித்து இன்று 14-06-2019 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் கலையரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை இன்று காலை 10 மணியளவில் தடை விதித்தது. மேலும் இராதாபுரம் பகுதிக்குள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழையவும் காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இராதாபுரத்தில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் பாளையங்கோட்டை, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலுக்கு மாற்றப்பட்டது.
ஏற்கனவே திட்டமிட்டபடி மாலை 4 மணியளவில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.
பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படுத்தும் அணுக்கழிவுகளால் ஏற்படும் பேரழிவுகள் குறித்தும் அணுக்கழிவுகளைப் பராமரிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விளக்கினார். மேலும் மத்திய – மாநில அரசுகளின் ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பொன், கெயில், நியுட்ரினோ போன்ற பேரழிவுத் திட்டங்களையும் மக்கள் விரோதப்போக்கையும் கண்டித்து சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றினார்.
செய்தியாளர் சந்திப்பு: https://youtu.be/eEijjGUj-RM
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084