மாவீரர் நாள் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்

58

27 11 2018 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

1. சமீபத்தில் வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தினால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இயற்கை பேரிடரால் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும் விலங்குகளும் பல லட்சக்கணக்கான மரங்களும், செடி கொடி ,தாவர வகைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை பார்த்திராத பெரும் சேதத்தினை காவிரி டெல்டா மாவட்டத்தில் வசித்து வரும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு இந்தப் புயல் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த மாபெரும் அழிவினை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

2. கஜா புயலில் சிக்குண்டு 63 க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உறவுகளை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் மற்றும் ஆறுதலையும் நாம் தமிழர் கட்சி இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கிறது.மேலும் கஜா புயலால் சிக்குண்டு மரணமடைந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், உயிரிழப்பிற்கு தலா ரூபாய் 50 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறது.

3. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை, மா ,பலா ,வாழை தோப்புகளை உடனடியாக கணக்கெடுத்து, பலியாகி இருக்கின்ற கால்நடைகளை கணக்கெடுத்து அதற்கான உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும்,சேதமடைந்து இருக்கின்ற நிலங்களை மரங்களை அகற்றி சீர்செய்ய உடனடியாக நிவாரணத் தொகைகளை விவசாயிகளுக்கு வழங்கி, இழப்பினால் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டிருக்கிற விவசாயிகளை காக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்களில் இருக்கின்ற மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர் மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் தமிழக அரசின் செயலற்ற தன்மையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்குவதற்கான பணியையும் , சாலைகளை சீரமைக்கும் பணிகளையும் விரைவாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

5. தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான ராஜீவ் கொலையில் சிக்குண்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவித்து வருகிற 7 தமிழர் விடுதலைக்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து விட்ட பிறகும் ஏற்பட்டிருக்கிற காலதாமதத்தை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த மூன்று அதிமுகவினரை விடுதலை செய்ய தமிழக அரசு காட்டிய ஆர்வத்தை எழுவர் விடுதலையில் காட்ட தவறிய மெத்தன போக்கினை நாம் தமிழர் கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறது. தமிழர்களின் உணர்வினை மதித்து 7 தமிழரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநரை நாம் தமிழர் கட்சி இந்த பொதுக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது.

6. தமிழர்களின் தாய் நிலமான ஈழத்தில் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ,இன்னமும் ஈழத் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள துயர நிலையையும், போரின் போதும் போருக்குப் பிந்திய கால கட்டத்திலும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் அளிக்காத சிங்களப் பேரினவாத அரசின் அராஜக போக்கினையும், உலக சமூகத்திற்கு இச்சமயத்தில் நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இனப்படுகொலைக்கான நீதி இதுவரை தமிழர்களுக்கு கிடைக்காத நிலையில் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தனித் தமிழிழ சோசலிச குடியரசு நாட்டினை உருவாக்க உலகச் சமூகம் முன்வரவேண்டும் என இப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

7. இயற்கை வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தமிழர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறது.

8. தாயக விடுதலைக்காக தன் உயிரை இழந்த மாவீரர்களின் தியாகம் என்றென்றும் தமிழினம் நன்றியோடு நினைவு கூர்ந்து நெஞ்சார்ந்து போற்றும். எந்த புனித கனவிற்காக எம் மாவீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தார்களோ தனித் தமிழீழம் என்கின்ற தாயக விடுதலை என்கின்ற அந்த புனித கனவினை நிறைவேற்ற எம் உயிர் உள்ளவரை உறுதியாக உழைப்போம் என இந்த மாவீரர் நாளில் இங்கே கூடியிருக்கிற நாங்கள் அனைவரும் உறுதி ஏற்கிறோம்.

*********

முந்தைய செய்திதேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் | சீமான் வாழ்த்துரை
அடுத்த செய்திகாவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!